WORD OF GOD

WORD OF GOD

Sunday, October 9, 2011

இயேசுவோடு ஆளுகை செய்வோம்(Sunday sermon)

Text: ஆதியாகமம்.50:15-21

அன்பார்ந்த  உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். அவரோடு கூட பாடுகளை சகித்தோமானால், அவரோடு கூட ஆளுகையும் செய்வோம். (2.தீமோத்தேயு. 2:12 ) இது உண்மைதானா? துன்பங்களை சகிப்பது வெற்றியாகுமா? எது வெற்றியுள்ள வாழ்வு சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த வாழ்வுதானே, அப்படியிருக்க துன்பங்களை சகிப்பது எப்படி வெற்றியுள்ள வாழ்வாகும்? இந்த கேள்விக்கான சரியான விடைதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப் பகுதி.

பொதுவாக மரணம் என்பது ஆழ்ந்த துயரத்தை  கொண்டுவரக் கூடியது. நம்முடைய தியானப் பகுதியும் ஒரு மாமனிதனின் மரணத்திலிருந்து துவங்குகிறது, அது யாக்கோபின் மரணம். அவனுடைய பிள்ளைகள் அனைவரும் சூழ்ந்து நிற்க அவர்கள் ஒவ்வொருவரோடும் மனம் விட்டு பேசி பின் சமாதானமான மரணத்தை அடைகிறார். ஆனால் இந்த மரணம் யோசேப்பின் சகோதரர்களாகிய யாக்கோபின் மற்ற பிள்ளைகளுக்கு துயரத்தை தரவில்லை மாறாக பயத்தையும் நடுக்கத்தையும் தந்தது காரணம், சொல்ல முடியாத படு பாதகத்தை செய்து, தாங்கள் அழிக்க  நினைத்த  தன் சகோதரன் யோசேப்பிடம் வசமாய் சிக்கியுள்ளனர்.

அவர்கள் மனம் முழுக்க குற்ற உணர்வில் நிரம்பியிருக்கிறது. இப்படி ஒரு தருணம் வரும் என்று அவர்களில் ஒருவனும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள், ஏன் யோசேப்பே கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்ச நஞ்ச பாதகத்தையா யோசேப்புக்கு செய்தார்கள், அடித்து துவைத்து குற்றுயிராய் ஒரு நாயை வீசுவதை போல பாழுங்கிணற்றில்  வீசினார்கள், அப்போதும் அவர்கள் மனம் ஆறாமல், பாதி செத்துக் கிடந்தவனை தூக்கி, விற்று காசாக்கினார்கள், ஏன் இதையெல்லாம் செய்தார்கள். அப்படி என்னதான் யோசேப்பு அவர்களுக்கு விரோதமாய் செய்தான்?  "ஒன்றும் செய்யவில்லை". பொறாமை அவர்களை அப்படி செய்ய வைத்தது. அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு சர்வ வல்ல கடவுளின் மீது அசைக்க முடியா நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வந்தான் யோசேப்பு, பலன்...

இன்று அவன் தயவில் வாழ்கிறார்கள், அவன் சோற்றில் பிழைப்பு நடத்துகிறார்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?????? அவரோடு கூட பாடுகளை சகித்தோமானால் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம்.

எனவேதான் தகப்பன் செத்ததும் யோசேப்பின் சகோதரர்களை பயமும் குற்ற உணர்வும் பிடித்தாட்டுகிறது, காரணமின்றி துன்பம் செய்வோர் யாரும் குற்ற உணர்விலும், பயத்திலும் சிக்காமல் தப்பித்துவிட முடியாது.  ஏன்? பவுல் ரோமர்.14:9 ல் கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.  என்று கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன அவர் ஆளுகைக்கு மறைவான  மனிதனோ நிகழ்வுகளோ இவ்வுலகிலும் இல்லை, அவ்வுலகிலும் இல்லை. எனவே தீமை செய்வோர் யாரும் தப்பித்துவிட முடியாது, எனவே அன்பானவர்களே, காரணமின்றி வரும் துன்பங்களை கண்டோ, காரணமின்றி துன்பம் கொடுப்போரை கண்டோ அஞ்சி விடாதீர். விசுவாசத்தோடு காத்திருப்பீர், காரணமின்றி வந்த துன்பத்தையும், காரணமின்றி துன்பம் செய்தோரையும் நாம் ஆளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்த வாய்ப்புதான் யோசேப்புக்கு கிடைத்தது. யோசேப்பின் சகோதரர்கள் இந்த குற்ற உணர்விலிருந்தும், பயத்திலிருந்தும் தப்பிக்க சேதி சொல்லி
ஆளனுப்புகிறார்கள், அவர்கள் சொல்லியனுப்பிய செய்தி "எங்களை நீ மன்னிக்க வேண்டும் என்று  தகப்பன் மரணமடையுமுன் கடைசியாக கூறினார்" என்பதே. இது உண்மையா தெரியவில்லை. ஆனால் மன்னிப்பு பெற இதை கூறுகிறார்கள். அது மட்டுமல்ல அவனை வந்து பணிந்துக் கொள்ளுகிறார்கள். இதைக்கேட்ட யோசேப்பு  ஒரு கேள்வியை  பதிலாக தருகிறார், நான் என்ன கடவுளா? என்பதே பதில் காரணம் என்ன உபாகமம் .32:35 ல் கடவுள் கூறுகிறார், பழிவாங்குவதும், பதிலளிப்பதும் எனக்குரியது என்று.


இந்த மனம் நமக்கு வருமா? நம்மை கெடுத்தவனை நாம் கெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்த பிறகும் நாம் சும்மா இருப்போமா? மன்னிக்கும் உன்னத குணம் நமக்கு வருமா? வரவேண்டும் என்று ஆண்டவர் மத்தேயு. 18:22 ல், கூறுகிறார். அதுவும் ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டும் என்கிறார். நம்மையே ஆண்டவர் மன்னித்தார் என்றால் நாம் நம் சக மனிதனை மன்னிப்பது எம்மாத்திரம்? மன்னிப்போம் இயேசுவோடு ஆளுகை செய்வோம், பரிசுத்தாவியானவர் தாமே இத்திரு வார்த்தைகளைக் கொண்டு நம்மை வழி நடத்துவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews