சங்கீதம்.91:7
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது
அன்பானவர்களே, உங்களை இந்த காலை வேளையில் வாழ்த்துகிறேன்.
91 ம் சங்கீதம் முழுவதும் கர்த்தர் மேல் நம்பிக்கை கோண்டோரை அவர் எப்படி பாதுகாக்கிறார் என்பதை நமக்கு போதிக்கிறது.
இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் நம் வாழ்வோடு பேசக்கூடியவை.
இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்தையும் உணர்ந்து படித்தோமானால், நம் வாழ்வில் நாம் இப்போது எதை குறித்து கவலையோடு இருக்கிறோமோ அந்தக் கவலை நம்மை விட்டு பறந்தோடும்.
இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் நம் வாழ்வின் அத்தனை பயத்தையும் முற்றிலும் நீக்கிவிடும்.
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அதின்படி, இந்த முழு சங்கீதத்தின் மேன்மைக்கு இந்த ஒரு வசனம் மிகச்சிறந்த உதாரணம்.
சங்கீதக்காரன் கூறுகிறார், உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழ்ந்தாலும் அது உன்னை அணுகாது.
இதன் அர்த்தம் என்ன? எத்தனை பெரிய துன்பங்கள், எத்தனை எதிரிகள் நம்மை சுற்றி நடந்தாலும், நம் பக்கத்தில் கூட வர முடியாது.
சவுல் அரசனாக இருந்த போது தாவீது, கோலியாத்தை கொன்றதால், மக்கள் மத்தியில் தாவீதின் செல்வாக்கு அதிகரித்தது, எனவே சவுல் தாவீதை கொல்ல நினைத்தான்.
1சாமுவேல்.18:11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.
1சாமுவேல்.19:9 10 கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
இந்த வசனங்கள் சவுல் தாவீதை எவ்வளவு மூர்க்கமாய் கொலை செய்ய எத்தனித்தான் என்பதை மிக தெளிவாக காண்பிக்கிறது. ஆனால் அவனால் தாவீதை தொடக் கூட முடியவில்லை.
1சாமுவேல்.19:1 தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.
தனியாக போராடி தோற்றுப் போனவன் தன் மகனையும், தன் ஊழியர்கள் அத்தனை பேரையும் துணைக்கு அழைக்கிறான்.
அரசன் தன் சாம்ராஜ்யத்தையே துணைக்கு அழைக்கிறான். ஆனால் நடந்தது என்ன? தாவீதை அணுக கூட முடியவில்லை.
அன்பானவர்களே, நம்மை தொடுகிறவன் சர்வ வல்லவரின் கண்மணிகளை தொடுகிறான். எனவே அச்சம் கொள்ளாதீர். நமக்காய் சிலுவையில் வெற்றி சிறந்த கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு இந்நாளை துவங்குவோம், நம்மை வீழ்த்த நினைப்போர் வீழ்ந்து போவார்கள், அழிக்க நினைப்போர் அழிந்து போவார்கள். துன்பமோ துன்புறுத்தும் மனிதனோ நம்மை அணுக முடியாது.
ஜெபம்:
கிருபை நிறைந்த எங்கள் பிதாவே, இந்நாளையும், இந்நாளின் தேவைகளையும் உமது கரத்தில் சமர்ப்பிக்கிறோம், ஆசீர்வதியும், தேவைகளை நிறைவாக்கும். எங்களை சுற்றியுள்ள எதிர்ப்புகளையும் துன்பங்களையும் நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும், தாவீதை, சவுலிடமிருந்தும், அவன் சாம்ராஜ்யத்திடமிருந்தும் காத்தது போல, எங்களையும் எங்கள் எல்லா தீங்கிலிருந்தும் காத்தருளும். உமக்கு சாட்சியாய் நிலைக்க ஆசீர்வதியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமேன்..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment