Text: 2 கொரிந்தியர்.5:6
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்
அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள். ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டு அதற்காக போராடி வருகிற ஒருவராக நீங்கள் இருந்தால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் நீங்கள் ஒரு பத்து வீடுகளை கட்டி அதை வாடகைக்கு விடுவீர்கள். உங்களால் நம்ப முடியுமா? ஒரு சின்ன வியாபாரம் செய்கிற நீங்கள் பெரிய தொழிலதிபர் ஆவீர்கள் என்றால் நம்புவீர்களா? ஒரு குழைந்தைக்காக ஏங்கி தவிக்கிற தாயாக இருந்தால், உங்கள் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல பெருகும் என்றால் நம்புவீர்களா?
நடப்பதற்கே சாத்தியமில்லாதவைகளை பேசுவது போல தோன்றுகிறதா? சரி ஏன் இவையெல்லாம் முடியாது? நமது வருமானம், நமது சூழல், நமது நிலைமை, நமது தகுதி, இவையெல்லாம் கண்டால் சத்தியமாய் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறதல்லவா? அதேபோல இவ்வுலகத்தின் போக்கு, விலைவாசி, அரசியல் சூழ்நிலை, பொருளாதார ஏற்ற தாழ்வுகள், நம்மை சுற்றியுள்ளோரின் பொறாமைகள், இவையெல்லாம் கண்டால் இப்போது நாம் வைத்திருக்கிற சின்ன திட்டத்தையே நிறைவேற்றுவது மிகக் கடினம் என்று தோன்றுகிறதல்லவா?
ஆனால் கிறிஸ்தவர்களாக நம்மை பற்றி பவுல் ஒரு விஷயம் சொல்லுகிறார், அதென்னவெனில் நாம் தரிசித்து நடப்பவர்களல்ல விசுவாசித்து நடப்பவர்கள் என்கிறார் இதன் அர்த்தம் என்ன? நாம் எதையும் பார்த்து வாழ்பவர்களில்லை என்கிறார், நாம் பார்க்காமல் வாழ முடியுமா? உண்மையில் கிறிஸ்தவர்கள் பார்த்தால் வாழவே முடியாது. ஆம் அன்பானவர்களே, நம்முடைய தகுதி என்ன? நாம் கடவுளுக்கு பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ள நமக்கு அருகதை உண்டா? இல்லை... நம்மை கண்டால் நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை அடையவே முடியாது. அதே போல நாம் வாழும் உலகம் அதின் சூழல், அதின் மனிதர்கள், தினந்தோறும் நடந்தேறும் கொடூர பாவங்கள் இதையெல்லாம் கண்டால் நமக்கு இவ்வுலகில் மீட்பு கிடைக்கும் என்று தோன்றுகிறதா?
சத்தியமாய் நாம் நம்மை கண்டாலோ நாம் வாழும் உலகை கண்டாலோ நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற தகுதி உடையவர்களல்ல என்பதையும், அவரை நெருங்க கூட முடியாது என்பதையும் நாம் பரிபூரணமாய் உணர முடியும். ஆனால் நாம் கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமையை அதுவும் புத்திர சுவிகார உரிமையை பெற்றிருக்கிறோம் எப்படி? ஒரே பதில் தான் விசுவாசத்தால். ஆம் நாம் தரிசித்து அதாவது கண்டு வாழ்பவர்களல்ல விசுவாசித்து வாழ்பவர்கள்.
கடவுளின் பெயரைக் கூட சொல்ல தகுதியில்லாத நாம் விசுவாசத்தால், அவருடைய சொந்த பிள்ளைகளாவோம் என்றால், அதே விசுவாசத்தால் நாம் நினைக்கிற, நாம் திட்டமிடுகிற அனைத்தையும் அடைய முடியுமல்லவா? சொந்த வீடு கட்ட சாத்தியமில்லாத ஒருவர் ஒரு அப்பார்த்மென்ட்டை கட்ட ஆசைப்பட்டால், தன் நிலையையும் இவ்வுலகின் சூழலையும் கண்டால் அது ஒரு முட்டாள்தனமான பேராசையாக தோன்றும், ஆனால் விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்கி பார்த்தால்? உடனே சாத்தியப்படுமே, இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்கிறீர்களா?
ஆபிரகாம் என்ற 99 வயது நிறைந்த ஒரு கிழவன் தனக்கு பிள்ளை பிறக்கும் என்று ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அதற்காக ஜெபிப்பது, கடவுளிடம் விசுவாசத்தோடு காத்திருந்தது எல்லாமே பைத்தியக்காரத்தனமல்லவா? இல்லை அன்பானவர்களே நாம் தரிசித்து வாழ்பவர்களல்ல விசுவாசித்து வாழ்பவர்கள்.
எபிரேயர் 11:1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).
.
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா யோவான் 11:40
உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது..மத்தேயு 15:28
விசுவாசத்தின் வல்லமையை உணர்ந்தீர்களா? தைரியமாய் உங்கள் வாழ்விற்காய் கிறிஸ்துவின் மேன்மைக்காய் எவ்வளவு பெரிய திட்டமும் தீட்டுங்கள் விசுவாசத்தோடு... அவரே காரியத்தை வாய்க்க செய்வார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment