WORD OF GOD

WORD OF GOD

Saturday, July 2, 2011

கடவுள் பரிகாசம் செய்கிறார். (காலை மன்னா)

அன்பானவர்களே, உங்கள் யாவருக்கும் எனது இனிய காலை  வணக்கங்கள்.  இன்றைய தியான வசனம். சங்கீதம்.2 :4 

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்


கேலி செய்வது பரிகாசம் செய்வது இதெல்லாம், மனிதர்களாகிய நமது குணங்களில் ஒன்று. ஒரு நாளில் ஒரு முறையாவது யாராவது ஒருவரை பார்த்து, நகைத்து, இகழும் சுபாவம் நமக்கு உண்டு. நம்மையும்  நமக்கு தெரியாமல் பார்த்து நகைப்பவர்களும், இகழுகிறவர்களும் உண்டு. அடுத்தவர்களை பார்த்து இகழ்வதையும், நகைப்பதையும் தொழிலாகவே செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

நம்முடைய தியான வசனத்தில் ஒரு சுவாரஸ்யமான செய்தியை காண முடிகிறது. அது யாதெனில் கடவுள், ஒரு மனிதனை போல சிலரை கண்டு நகைப்பார் என்றும், இகழுவார் என்றும் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அப்படியானால் கடவுள் கூட பரிகாசம் செய்வாரா?

ஆம் கடவுள் பரிகாசம் செய்கிறார். யாரை என்பதை நாம் அறிந்துக் கொண்டால் நம் வாழ்வில் துன்பமே வராது. யாரை என்பதை அறிந்துக்கொள்ள 2  வது, 3 வது வசனத்தை பார்க்க வேண்டும்.

2. கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

3. அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

 
ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு எதிராக எழும்புகிற துன்பங்களையும், எதிராக எழும்பி சதி செய்கிற மனிதர்களையும் கண்டு கடவுள் நகைக்கிறார், இகழுகிறார். அது எப்படி என் பிள்ளையை தொடுகிறது பார்க்கலாம் என்று பரிகாசம் செய்கிறார். யார் அபிஷேகம் பெற்றவர்கள்? யாரெல்லாம் அவருடைய பிள்ளை என்கிற உரிமையின் அடையாளத்தை, திரு முழுக்கின் வழியாக பெற்றுக் கொண்டார்களோ அவர்கள் அத்தனை பெரும் பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றவர்கள்.

எனவே திரு முழுக்கு பெற்ற நாம் நமக்கு எதிராக  எழும்புகிற மனிதர்களையோ,  துன்பங்களையோ கண்டு  துளி கூட பயப்பட தேவையில்லை. அவைகள் நம்மை நெருங்க வாய்ப்பே இல்லை என்று தைரியமாய் சந்தோஷமாய் நம் துன்பங்களின் நடுவே வாழ்ந்து இறைவனை மகிமைப்படுத்துவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews