மத்தேயு.6:35
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.... என்றார்.
அன்பானவர்களே தமிழர்களாகிய நமது பண்புகளில் மிக முக்கியமான ஒரு பண்பு, வந்தவர்களை உபசரிப்பது, நம் வீட்டிற்கு நம்மை தேடி வருகிறவர்களை வரவேற்பதற்கு அடையாளமாக நாம் அவர்கள் சாப்பிட ஏதாவது கொடுப்போம், நம் மூதாதையர்கள் வந்தவர்கள் வயிறு குளிர கொடுக்கவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள், நாம் சாப்பிட கொடுப்பதன் மூலம், நாம் அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்வதை அவர்களுக்கு உறுதி செய்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை, கடவுள் இந்த உலகிற்கு கொடுத்த ஜீவ ஆகாரம் என்கிறார். மத்தேயு.6:35.
இஸ்ரவேல் மக்களை கடவுள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, வனாந்திரத்தில் வழி நடத்தி வந்த போது, அவர்கள் சாப்பிட வனாந்திரத்தில் ஒன்றும் இல்லை, எனவே ஒரு நல்ல தகப்பனாக அவர்கள் பசியாற, வானத்திலிருந்து மன்னா என்ற உணவை பொழிந்து அவர்களை ஆசீர்வதித்தார். அந்த ஆகாரத்தை நாம் ருசித்ததில்லை. அதற்கு பதிலாக கடவுள் வானத்திலிருந்து, உலக மக்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளத் தக்க ஆகாரமாய் இயேசுவை இவ்வுலகில அனுப்பினார் என்று இயேசுவே குறிப்பிடுகிறார். மத்தேயு.6:32,33.
அப்படியானால் இயேசு கடவுளால் இந்த உலகிற்கு கொடுக்கப்பட்ட, ஆகாரம். இவர் சரீரத்திற்கான ஆகாரம் அல்ல ஜீவனுக்கான ஆகாரம். அதாவது வாழ்வில் வறுமையோடும் தோல்விகளோடும், போராட்டங்களோடும், எதிர்காலத்தை பற்றிய பயத்தோடும், வியாதியோடும், வாழ்வின் பசியோடும் போராடி வருகிற மக்களின் பசியாற்றும் ஆகாரமாக இயேசு இருக்கிறார். என்னிடத்தில் வருகிற ஒருவனும், பசியடையான், என்னை விசுவாசிக்கிறவன் தாகமடையான் என்று உறுதியாக இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
அன்பானவர்களே, வாழ்வில் சந்தோஷம் எனும் ஆகாரமில்லாமல், சந்தோஷம் எங்கே கிடைக்கும் என்ற தாகத்தோடு வாழ்ந்து வருகிறீர்களா? நான் தேடும் வெற்றி இன்னும் என் வாழ்வில் வரவில்லையே என்று சோர்வோடு காணப்படுகிறீர்களா? என்னிடத்தில் வாருங்கள் என்னை விசுவாசியுங்கள் என்று இயேசு அழைக்கிறார், செவி கொடுப்போம், அவர் தரும் சந்தோஷ வாழ்வை அனுபவிப்போம். ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment