இன்றைய தியான பகுதிகள்:
எரேமியா.28:5 9
ரோமர்.6:2 11
மத்தேயு:10:34 41
அன்பான உடன் விசுவாசிகளே நம் நாடு அடிமைத்தனத்தில் இருந்த போது மக்கள் அனைவரும் விடுதலைக்காக ஏங்கி நின்றனர். அப்போது அனேக தலைவர்கள் மக்களை சுதந்திர போராட்டத்தில் வழி நடத்தினர். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் காந்தியடிகள், இன்னொருவர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இருவருடைய லட்சியமும் ஒன்றுதான், நாடு விடுதலை பெற வேண்டும், ஆனால் இருவருடைய போராட்ட வழி வித்தியாசமானது. போர்தான் விடுதலைக்கு வழி எனவே செய் அல்லது செத்துமடி என்று சுபாஷ் அறைக்கூவல் விடுத்தார், ஆனால், காந்தியடிகளோ போர் அல்ல அறப்போர்தான் விடுதலைக்கான வழி என்றார். இரண்டு தலைவர்கள், லட்சியம் ஒன்று, ஆனால், வெற்றிக்கான வழி மட்டும் இருவருக்கும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.
அதே போல நம்முடைய தியான பகுதியான எரேமியா.28:5முதல் 9 வரை உள்ள வசனங்களில், இரு தீர்க்கதரிசிகள் வருகிறார்கள், இருவரும் ஒரே நோக்கத்திற்காக தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். ஆனால் சொல்லுகிற வழி முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றனர்.
அதாவது இஸ்ரவேலரில் சிலரை பாபிலோனியர்கள் சிறைப் பிடித்து சென்றிருந்தனர், அவர்கள் விடுதலை தான் அப்போது தேசத்தின் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது, அவர்கள் விடுதலையை பற்றிதான் இருவரும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர், கனனியா உரைக்கிற தீர்க்கதரிசனம் யாதெனில், கர்த்தர் இரண்டே வருஷத்தில் இந்த அடிமைத்தன நுகத்தை உடைத்து போடுவார், பாபிலோனியர்கள் கொள்ளையடித்த தேவாலய பணிமுட்டுகளை மீண்டும் கொண்டுவந்து வைப்பார்கள் என்று கர்த்தர் சொன்னதாக சொல்லுகிறார், இது விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிற மக்களுக்கு இனிமையான செய்தியாகஅமைகிறது.
(அனால் எரேமியாவின் செய்தி இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது, அவர் சொல்லுகிற கர்த்தருடைய செய்தி யாதெனில், இந்த அடிமைத்தனம் கர்த்தரின் சித்தம், எனவே அவரே இந்த நுகத்தை நீக்குவார் அதுவரை அமைதியாக இந்த நுகத்தை நீங்கள் சுமக்க வேண்டும், இந்த காலத்தை கர்த்தரிடம் நெருங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எரேமியாவின் செய்தி. எனவேதான் மக்கள் எரேமியாவின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை கண்டாலே கல்லெறிந்தார்கள், தங்களுக்கு எதிராக அவர் பேசுவதாக நினைத்தார்கள்)
கனனியா சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்ட எரேமியா அவருக்கு பதில் சொல்வதிலிருந்துதான் இன்றைய தியான பகுதி துவங்குகிறது. அவர் சொல்லுவது மூன்று விஷயங்கள்.
2. ஆனால் சமாதானத்தை சொல்வது மட்டுமே தீர்க்கதரிசனம் இல்லை, அதற்கு நமக்கு முன்னால் உரைத்தவர்கள் உதாரணம்.
3. நீ சொல்வது நடந்தால் தான் நீ சொல்வது உண்மையான கடவுளுடைய வார்த்தை.
காரணம், மக்கள் விரும்புகிறதை சொல்வதெல்லாம் சொல்வது கடவுளுடைய வார்த்தை அல்ல, கடவுளின் சித்ததை சொல்வதுதான் கர்த்தருடைய வார்த்தை. கனனியாவோ மக்கள் விரும்பும் விடுதலையை கிடைக்கும் என்று பேசுகிறார் இரண்டே வருஷத்தில் கிடைக்கும் என்றெல்லாம் பேசி அவர்கள் பாராட்டை பெறுகிறார். ஆனால் அடுத்தவர் பாராட்டுவதற்காக பேசுவது கர்த்தருடைய வார்த்தை அல்ல. ஆனால் மக்கள் கனனியா சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள் காரணம் அவர்கள் விரும்பியது அதைதானே, அதனால் அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் கலகம் செய்யவும் போராடவும் ஆரம்பித்தனர். அதன் பலன் கடுமையான இழப்புகளை நாடு சந்தித்தது. தேவாலயத்தை பணிமுட்டுகளை திருடியவர்கள், கடைசியில் தேவாலயத்தையே சுட்டெரித்தார்கள். எரேமியா சொன்னது உண்மையான வார்த்தை என்பது நிரூபணமானது.
பல நேரங்களில் நாம் கூட கடவுளுடைய வார்த்தை, நாம் விரும்புகிறபடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், பிரசங்கியார்கள் கூட, மக்கள் விரும்ப வேண்டும் பாராட்ட வேண்டும் என்று பிரசங்கம் செய்கின்றனர். இரண்டுமே கர்த்தருடைய சித்தத்திற்கு எதிரானவை. நாம் விரும்புவதெல்லாம் நமக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை ஆனால் கடவுளின் விருப்பமே நம்மை ஆசீர்வதிப்பதுதானே. எனவே அவருடைய வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வோம். அதற்காய் உபத்திரவங்களை சுமக்க வேண்டி வருமாயின் சந்தோஷமாய் சுமப்போம்.
இந்த வார்த்தையில் நிலை நின்று வாழ தூயாவியானவர்தாமே நம்மை வழி நடத்தி காப்பாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment