WORD OF GOD

WORD OF GOD

Tuesday, January 25, 2011

விடியலை நோக்கி

 ஏசாயா.9 :1 -4

1. ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.


2. இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.


3. அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.


4. மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.


கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே, நம்முடைய கடவுள் பாவத்தின் மீது எந்த அளவுக்கு எரிச்சல் உள்ளவராக இருக்கிறாரோ அதே அளவுக்கு பாவிகள் மீதும் ஏழைகள் மீதும் அன்புள்ளவராகவும் இருக்கிறார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியான பகுதி.

8 ம் அதிகாரம் 19 முதல் 22 வரை இருக்ககூடிய வசனங்களில் இஸ்ரவேலர்களின் பாவ வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை தெளிவாக விளக்குகிறது, அஞ்சனம் பார்க்கிறவர்களாகவும், குறி கேட்பவர்களாகவும்,  செத்தவர்களோடு   பேசுகிரவர்களாகவும், இருக்கிறார்கள் ஆனால் கடவுளுடைய வார்த்தையையோ   அசட்டை செய்கிறவர்களாக காணப்படுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் விடியலை காணவேமாட்டார்கள் என்று கடவுள் சொல்லுகிறார், அதாவது அவர்கள் வாழ்க்கை இருளாய் இருக்குமே தவிர வெளிச்சத்தையே காணமாட்டார்கள் என்று கடுமையாக எச்சரிக்கிறார்.

அதே நேரத்தில் இருளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற மக்கள் மீது அவர் எவ்வளவு கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்பதை 9 வது அதிகாரத்தில் கடவுள் வெளிப்படுத்துகிறார்,  இதை புரிந்துக் கொள்வது கொஞ்சம் கடினமே.

அதாவது கடவுளுடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல், தன் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து சுகபோகத்தில் வாழ்கிறவர்களை இருளுக்கு தள்ளி, வறுமை, அடிமைத்தனம், இயலாமை, தோல்வி போன்ற இருளுக்குள் வாழ்கிற மக்களை, வெளிச்சத்திற்குள் கொண்டுவருவேன் என்கிறார்.

அதற்கு உதாரணமாகத்தான் செபுலோன், நப்தலி நாடுகளுக்கு நடக்க போகிற நன்மைகளை முன் அறிவிக்கிறார், காரணம் செபுலோன் நப்தலி ஆகிய பகுதிகள் இஸ்ரவேல் தேசத்தின் பகுதிகளாக இருந்தவை, கி.மு 732 ல் டிக்லேத் ப்லேசார் என்ற ஆசிரிய மன்னன் இந்த இரண்டு பகுதிகளையும் அசிரியாவின் கட்டு பாட்டுக்குள் கொண்டுவந்து கடுமையாக ஒடுக்கினார்.

அவர்களுடைய அடிமைத்தன வாழ்விலிருந்து கடவுள் விடுவிப்பார் என்றும் அந்த விடுதலை எப்படி நடக்கும் என்பதையும், இரண்டு  முதல் நான்கு வரை உள்ள வசனங்களில் விளக்குகிறார். அது எப்படி நடந்தது என்பதை தான் மத்தேயு 4 ம் அதிகாரம் 12 ம் வசனம் துவங்கி காண்கிறோம்.

இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை துவங்கியதே செபுலோன், நப்தலியாகிய கலிலேயாவின் கரையோர பகுதிகளில் தான். அடிமைத்தனமும், வறுமையும் , இயலாமையும், கல்வியறிவின்மையும், மண்டிக்கிடந்த பாமரர்கள் வாழ்ந்த பகுதிகளில் தான் ஆண்டவர் தன் ஊழியத்தை துவங்கினார். காரணம் அவர் அடிமைத்தனம் வறுமை, வியாதி, கல்வியறின்மை போன்றவைகளில் இருந்து மனிதனை விடுதளியாக்கி வாழ்விக்க வந்தவர்.

எனவேதான் தனக்கு சீடர்களை கூட இந்தக் கூட்டத்தில் இருந்துதான் தெரிந்துக் கொண்டார்.  இன்று அவர் நம்மை எல்லா இருளின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்கி வாழ்வித்து வருகிறார் ஆனாலும் அவரது நோக்கம் இன்னும் முழுதாய் நிறைவேறவில்லை, காரணம் நமது தேசத்தில் இன்னும் எத்தனையோ பேர், கொத்தடிமைகளாகவும், ஏழைகளாகவும், கல்வி கற்கும் வசதி இல்லாதவர்களாகவும்,  பல போராட்டங்களின் நடுவில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் அனேகரது வாழ்க்கை உடனடியாக மீட்கப்பட வேண்டிய இருளில் இருக்கிறது, அதற்காக நாம் என்ன செய்யபோகிறோம், காரணம் ஆண்டவர் அவர் வழி வாழ நம்மை அழைத்திருக்கிறார், இருளில்லாத உலகை உண்டாக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம்.

நாளை நமது நாடு குடியரசான  நாளை கொண்டாடவிருக்கிறோம்  நம்மை நாமே ஆளும் நாட்டில் ஏன் இன்னும் இத்தனை கொடிய இருள் மிஞ்சி இருக்கிறது? இதில் கிறிஸ்துவின் தொண்டர்களாகிய நமது பங்கு என்ன?

சிந்திப்போம் செயல்படுவோம் இருளில்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்.
அருள்திரு, கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews