இன்றைய தியான வசனம், ஏசாயா.54 :15
இஸ்ரவேல் மக்கள் இறைவனின் மேலான அன்பை ருசித்தவர்கள், அதே நேரத்தில் இறைவனின் திரு வார்த்தைகளுக்கு விரோதமாய் நடந்த பொது இறைவனால் கடுமையாக தண்டனையும் பெற்றனர்.எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
எகிப்தின் அடிமைதனத்திலிருந்த இஸ்ரவேல் மக்களை, தன் சுத்த கிருபையினாலும் இரக்கத்தினாலும் மீட்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் கொண்டுவந்து குடியமர்த்தினார். ஆனால் அவர்களோ வாழ்வளித்த இறைவனை மறந்து தன் தன் சுய இச்சையில் நடக்க ஆரம்பித்தனர்.
இதனால், இரட்சிப்பை கொடுத்த கடவுளே, பாபிலோனியர்களால் 70 வருட சிறையிருப்பு உண்டாக அனுமதித்தார், இதனால் மனமுடைந்த இஸ்ரவேலர்கள் இரட்ச்சிப்பு வரும் என்ற நம்பிக்கையே அற்றுப் போனார்கள். பாபிலோனியர்களின் கடுமையான துன்புறுத்தலால் நரக வேதனையை அனுபவித்தார்கள்.
இந்த காலக் கட்டத்தில் இறைவன் அவர்களுக்கு தந்த வாக்குத்தத்த செய்திதான் இந்த திரு வசனம்.
உனக்கு விரோதமாய் கூடுகிறவர்களே உன் பட்சத்தில் வருவார்கள் என்கிறார். அதாவது, அவர்களை துன்புறுத்திய பாபிலோனியர்களே ஆதரவாய் வருவார்கள் என்கிறார், உன் எதிரியே உனக்கு நண்பன் ஆவான் என்கிறார், சாத்தியமே இல்லாததை சத்தியமாக கூறுகிறார் இறைவன். அவர் சொன்னபடியே அதே பாபிலோன் தேசத்தில் அரசனான கோரேஸ் என்ற மன்னனைக் கொண்டே இஸ்ரவேலரை விடுதலையாக்கினார்.
அதே வல்லமையோடுதான் இன்று நம்மையும் வழி நடத்தி வருகிறார் நம் இறைவன்.
நம் வாழ்வில் நமக்கு விரோதமாய் எழுகின்ற சக்தி எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஆதரவாய் மாறும் என்பதை இந்த திருவசனம் நமக்கு தெளிவாக்குகிறது. நித்திய மரணத்தை கொண்டுவந்த பாவத்திலிருந்தே கிறிஸ்துவின் வழியாய் நம்மை மீட்டவர் அல்லவா நம் கடவுள்.
அந்த தைரியத்தோடு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இந்த நாளை துவங்குவோம், நமக்கு எதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் வாய்க்காதே போகும். நமக்கு ஆதரவாய் மாறும்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம் .
No comments:
Post a Comment