இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை உபாகமம்.26 :19a
"நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளை பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன்".நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய முன்னேற்றத்திற்காக போராடி வருகிறோம். நம்ம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பார்க்கும்போதெல்லாம் நாமும் அப்படி உயர வேண்டும் என்கிற ஆவல் நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வருகிறது.
அதற்காகத்தான் கடுமையாகவும். நம் சுய சந்தோஷங்களை மறந்தும் கூட முன்னேற்றத்திற்காக போராடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள், பொருளாதார ரீதியாகவோ. சரீர ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதாவது ஒரு சிக்கலில் நாம் நிற்கும்போது, யாராவது ஒருவர் வந்து நமக்கு உதவ மாட்டார்களா? யாராவது நம் வளர்ச்சிக்கு துணை நிற்க மாட்டார்களா என்ற நோக்கம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.
ஆனால், இந்த பரந்து விரிந்த உலகில், நமக்கு உண்மையாய் உதவி செய்பவர்களை கண்டுபிடிப்பது மிக மிக கடினமாகவே இருக்கிறது.
ஆனால் நம்முடைய தியானப் பகுதியில், கடவுள் தன்னை நம்பி தன் வார்த்தையில் விசுவாசம் வைத்து வாழ்கிற இஸ்ரவேல் மக்களுக்கு, தான் கொடுக்கப் போகிற புதிய தேசமாகிய கானான் தேசத்தில் எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை தருவேன் என்பதை வாக்குரைக்கிறார்.
அவர் உண்டாக்கிய எல்லா ஜாதிகளிலும் அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் சிறந்திருக்கும்படி செய்வாராம்.
அதாவது அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை அவரை போலவே உயர்த்தி வைப்பேன் என்கிறார், நமக்கு உதவ, நம்மை உயர்த்த, யாருமே இல்லாத நிலையில் நின்றாலும் நம்மை அழைத்து அவருடைய ஜனமாய் சேர்த்துக் கொண்ட கடவுள் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்தி ஜாதிகளில் சிறந்த ஜனமாக வைப்பார்.
இந்த திட நம்பிக்கையோடும், நம்மை உயர்த்த சொந்த குமாரனையே சிலுவையில் தந்த கடவுள் இவைகளை அருளாமல் இருக்க முடியாது என்கிற விசுவாசத்தோடும், இந்த நாள் முழுவதும் அவர் நம்மோடு நமக்கு துணையாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடும் நம் பணிகளை தொடர கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment