WORD OF GOD

WORD OF GOD

Tuesday, May 31, 2011

காக்கும் கரம்

சில சம்பவங்கள் வாசிக்கும் போது  மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் உண்டாக்கும், அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இந்த காலை வேளையில் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.  குமாரி என்டிகாட்  என்ற ஒரு பெண் மிஷினரி, ஒரு சமயம்  அமெரிக்காவிற்கு பயணமானார். ஆகாய விமான போக்குவரத்து  அதிகமில்லாத காலம் அது . கப்பலில் தான் பயணம் செய்ய வேண்டும்.


கப்பலில் சிறிது தூரம் பயணமானதும், கடல் பிரயாணம் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இதனால் வாந்தி எடுக்க துவங்கிவிட்டார். என்ன மருந்து கொடுத்தும் பலனில்லை, ஒன்றும் சாப்பிடவும் முடியவில்லை. மருத்துவர் மிகவும் பிரயாசப்பட்டு கடைசியில் அவருக்கு, ஆரஞ்சு பழங்கள் ஒத்துக் கொள்ளும் என்று கண்டுப் பிடித்தார்.

கப்பலிலிருந்த ஆரஞ்சு பழங்களை எல்லாம்  அவருக்கென்று தனியாக எடுத்து வைத்தனர், ஆனால் கப்பலின் பண்டக சாலையில் சில பழங்களே இருந்தன. இரண்டு மூன்று நாட்கள் அப்பழங்களை சிக்கனமாக அவர்களுக்கு கொடுத்து வந்தனர். நான்காவது நாள் கப்பலின் சாப்பாட்டை கவனிக்கும் நிர்வாகியம்மாள், ஒரு தட்டில் சில ஆரஞ்சு பழச்சுளைகளை எடுத்துக்



 கொண்டுவந்து என்டிகாட்டிடம்  "கப்பலிலுள்ள ஆரஞ்சு பழங்கள் தீர்ந்து போய்விட்டன: இன்னும் 16  நாள் பயணம் இருக்கிறது இனி நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது" என்றார்கள். அதற்கு என்டிகாட் கவலை துளியும் இல்லாமல், "கிறிஸ்துவின் நற்செய்தியை நான் அமெரிக்காவில் கூற வேண்டும் என்பது ஆண்டவரின்  சித்தமானால் அவர் வேண்டிய ஆரஞ்சு பழங்களை தருவார்" என்று பதிலுரைத்தார்.

அதற்கு நிர்வாகியம்மாள் "இந்த நடுக் கடலிலா?" என்று கேட்டுவிட்டு கதவை அடைத்துவிட்டுப் பொய் விட்டார்கள். என்டிகாட்டும்  தன் வழக்கப்படி ஜெபிக்க துவங்கிவிட்டார்கள். சற்று நேரத்தில் கப்பலில் இரைச்சலும், ஆட்கள் அங்கிமிங்கும் ஓடுவதும் கேட்டது. ஆனால் என்டிகாட் அதைபற்றிக்  கவலைப்படவில்லை. கொஞ்ச நேரத்தில் அவரது அறைக்கதவு திறக்கப்பட்டது. நிர்வாகியம்மாள் ஒரு தட்டு நிறைய ஆரஞ்சு பழங்களுடன் நின்று, "உண்மையாகவே உன் கடவுள் நடுக்கடலில் ஆரஞ்சுப் பழங்களை மழை  போல் கொட்டிவிட்டார்" என்று சொல்லி ஆரஞ்சு பழங்களை கொடுத்தார். எப்படி என்று கேட்டபோது, நடுக்கடலில் ஒரு கப்பல் தாங்கள் வழி தப்பி அலைகிறோம், தங்களுக்கு ஆகாரம் தீர்ந்து விட்டபடியால் உதவி தேவை என்ற செய்தி ஒளிபரப்பபட்டதை கேட்டு, நமது கப்பல் சார்பாக  அவர்களுக்கு உதவும் வண்ணமாக வழிக்காட்டி, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுத்தோம், அதற்கு கைமாறாக அவர்கள் கொண்டு சென்ற பழங்களில் அனேக கூடைகளை கொடுத்தார்கள் என்று கூறினார். அக்கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஆரஞ்சு பழங்களை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்.

சங்கீதம் 34 :10  எவ்வளவு சத்தியமான வசனம்..

 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

அன்பானவர்களே, நம் ஆண்டவர் தன் பிள்ளைகளின்  தேவையை பூர்த்தி செய்ய எவ்வளவு கரிசனைக் கொண்டுள்ளார். இந்த நாளும் அதே கரிசணையோடு நம்மோடு தாபரித்து வருகிறார். அவரது கிருபையில் குறைவில்லா நன்மைகளை இந்நாளில் அனுபவித்து மகிழ பரிசுத்தாவியானவர் நமக்கு உதவி செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, May 30, 2011

ஜெபியுங்கள்

அன்பான எனது தள நண்பர்களே உடன் விசுவாசிகளே உங்களோடு ஒரு இனிமையான செய்தியை தற்போது பகிர்ந்துக் கொள்ளுகிறேன். இந்த இணைய தள ஊழியத்தின் வாயிலாக, சிறுவர் ஊழியம் துவங்க வாஞ்சிக்கிறேன். காரணம் தற்போதைய கால போக்கு மிக மோசமாக உள்ளது, கடவுள் பயமும் விசுவாசமும் இல்லாத சந்ததி உருவாகி வருகிறது. இது அடுத்த தலைமுறைக்கும் தொடர நாம் அனுமதிக்க கூடாது, பயபக்தியும் விசுவாசமும் உள்ள தலைமுறையை உருவாக்க வேண்டும். கர்த்தருக்கு பயப்படுவதுதான் ஞானம் என்பதை தெளிவாக அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் உள்ளது.

ஒன்றை நாம் தெளிவாக மறந்து வருகிறோம், நாம் இன்றைக்கு செல்வத்தில் தழைக்கலாம், வசதி வாய்ப்புகளில் பெருகியிருக்கலாம், ஆனால் ஒரு காலத்தில் இந்த வசனத்தை தவிர வேறொன்றும் நம்மிடத்தில் இல்லாத நிலை இருந்தது, இந்த வசனம் தான் ஒவ்வொன்றாக நமக்கு கொடுத்து வந்தது, ஆனால் இன்றோ வசனத்தை விட்டுவிட்டு அது கொடுத்த செல்வத்தை மட்டும் நாம் பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோம், அதே போல நமது தலைமுறை நடந்தால் என்னவாகும்? எனவே சிறுவர்கள் உள்ளத்தில் திருவசன விதையை விதைக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கோடு சிறுவர் கொண்டாட்டம் என்ற ஊழியத்தை துவங்க இருக்கிறேன்.

 இதை பற்றி சில நண்பர்களோடு பேசினவுடனே நான் நீ என்று அதன் தேவைகளை முன் வந்து நான் கேட்காமலேயே பொறுப்பெடுத்துக் கொண்டனர் .இதை முதலாவது கிறிஸ்தவ விடுதிகளில் இருக்கும்  மாணவர்களிடையே துவங்க விரும்புகிறோம்.  மாணவர்களுக்கு, தற்சமயம், திருவசன  கதைகள்,  நடனங்கள்,   ஆவிக்குரிய  பாடல்கள், இனிமையான  நாடகங்கள் உள்ளிட்ட மூன்று மணிநேர   ஆவிக்குரிய எழுப்புதல் நிகழ்ச்சியும், அவர்களை உற்சாகப் படுத்தும் வண்ணமாக  ஒரு நோட்டுபுத்தகம், ஒரு பேனா, ஒரு சோப்பு, போன்றவையும் தர முன் வந்துள்ளோம், எனவே தயவு செய்து அதற்காக ஜெபித்து உங்கள் நல்  ஆதரவை தாருங்கள், உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளையும் எனக்கு அனுப்புங்கள். அது ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, May 28, 2011

நாம் இயந்திரங்களல்ல (தோழியருக்காய்)




தோழி பரபரப்பான இந்த கால கட்டத்தில் எல்லாருக்கும் அவசரம் ஊருக்குப் போய், தாய் தந்தையரைப் பார்க்க நேரமில்லை. ஆலயத்திற்கு போக நேரமில்லை, உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய் அவர்களை மகிழ்விக்க முடியவில்லை. நண்பன் வீட்டு துக்கத்தில் பங்குக் கொண்டு, அவன் அல்லது அவள் மனதிற்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேச நேரமில்லை, அவ்வளவு ஏன் பெற்ற பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாட கூட நேரமில்லை. நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி, இயற்கையை இரசித்து புத்துணர்வு பெறக்கூட நேரமில்லை.

கண்களை விற்று ஓவியம் வாங்க முயற்சிப்பதைப் போன்று மேலே சொன்ன அனைத்தையும் விற்று பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம்.

அன்றாட வாழ்வில் பணம் ஈட்ட வேண்டியது அவசியம் தான்- "இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள்..." எல்லாம் சரி, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகாது என்றுதான் இங்கு கூற வருகின்றேன். தோழி நமக்கு தேவை சந்தோஷம், அமைதி, அன்பு.
பணம் இருந்துவிட்டால் இந்த மூன்றையும் என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடலாம் என்று தப்பாக முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.

பணம்தான் முக்கியம் என்று இயந்திரத்தனமாக நடந்தால், அது எத்தகைய சீரழிவில் கொண்டுபோய்விடும்? என்பது அனைவரும் அறிந்ததே, எந்த வேலையாக இருந்தாலும் அதை இயந்திரதனமாக செய்தால் பலனை தராது. ஒரு கற்பனை கதையொன்றைப் படித்தேன், முத்துக் குளிப்பவன் ஒருவன் முத்துக்களைத் தேடி கடலுக்குள் மூழ்கினான், கடலுக்குள்ளே அவன் பயணித்தவுடன் ஒரு நத்தை அவன் கண்ணில் பட்டுவிட்டது.

உடனே அவன் அந்த நத்தையை நோக்கி வேகமாக நீந்த ஆரம்பித்தான், முத்துக்காகத்தான் தன்னை நோக்கி நீந்தி வருகிறான் என்பதை உணர்ந்த நத்தை, தன் உடலை அருகில் இருந்த பாறையில் மோதி, முத்தைப் பெயர்த்தெடுத்து, அவன் கண்ணில் படும்படியாய் இன்னொரு பாறையின் மீது வைத்துவிட்டு நகர்ந்தது.

ஆனால் முத்துக் குளிக்க வந்தவனோ, எதிரில் இருந்த முத்தை எடுக்காமல், முத்தை இழந்த நத்தையை எடுத்துக் கொண்டு போனானாம். இயந்திர தனமாக செய்வதால் உண்டாகும் கோளாறு இது. நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு வகையில் பார்த்தால் நாமுங்கூட அந்த முத்து குளிக்கும் தொழிலாளியைப் போலத்தான் பல சமயங்களில் நடந்துக் கொள்ளுகிறோம்.

தோழி! கடவுள் நமக்கு கிருபையாய் இந்த வாழ்க்கையை தந்திருக்கின்றார். இதை இயந்திரத்தனமாக அல்ல, மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் கழிக்க முற்படுவோம். நாம் மகிழ்ந்திருந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாவோம்.

"அவர் (கடவுள்) சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம் மட்டும் செய்து வரும் கிரியையை மனுஷன்  கண்டு பிடியான்". - பிரசங்கி.3 :11  ...


அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

Friday, May 27, 2011

"கல்லூரி கனவு" (சிறுகதை)



என்னங்க? ஜோயலைப் பற்றி கவலையா இருக்குங்க, இஞ்சினியரிங் காலேஜுக்கு அப்பா அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கார்னு சொன்னா நான் கேட்டேனாங்கறான். உங்க அக்கா வேலூர்லந்து C .M .C மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் வாங்கி அனுப்பியிருக்கான்னா  அவளையே போடச் சொல்லுங்கறான்.

ஆமாம், ஜோயலை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் 
விருப்பத்தை  தெரிந்துக் கொள்வதே கஷ்டமாக இருந்தது . தாத்தா-பாட்டியின் அளவற்ற செல்லம் வேறு. ஆலயத்தில் அழகாக அவன் ஆர்கன் வாசிப்பதால், அவன் தம்பி அவனை இசைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திடு அண்ணா என்றான். முடியாது என்று முறைக்கிறான்.

சரி சின்னவயசு, நாம்தான் பொறுமையா திசை திருப்ப வேண்டும். குடும்பமாக நாள் முழுதும் யோசித்தோம். ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து பார்த்தோம். அவனோ சாப்ட்வேர் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. கம்ப்யூட்டரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து போட்டுவிட்டான். கம்ப்யூட்டர் ட்ரெயினிங் ஏதாவது போயேன் என்றால் அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான்.

ஜோயல் 12  ம் வகுப்பு எழுதி அந்த பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றவன். 1150 /1200  மதிப்பெண் பெற்று அந்த கிராமத்துப் பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் அசத்தியவன். மேத்ஸ்-பையாலஜி விருப்ப பாடமாக எடுத்து அதில் மூழ்கி போனவன்-இப்போது?

ஏப்ரல் மேவாகி, மே ஜூன் ஆகி, நாட்கள் கரைந்தது, அவனோடு படித்து தேர்ச்சிப் பெற்ற அத்தனைப் பெரும் எதோ ஒரு கல்லூரியில் இடம் பிடித்தனர். அவனோ அம்பேல்.

ஜோயலின் அம்மாவுக்கு சட்டென்று தன அண்ணனின் நினைவு வர, தொலைப்பேசி எடுத்து அண்ணனின் எண்ணுக்கு டையல் செய்தாள்.

ஜோயலின் தற்போதைய போக்கு குறித்து மூச்சுவிடாமல் ஒப்படைத்தாள். இடையிடையே அழுதால். அங்கலாய்த்தாள். அவசரப்படுத்தினாள். சுதாகர் தன் தங்கையிடம் ஆதரவாக அன்புடன் பேசினார். உடனே தான் வந்து அவன் "கனவு" என்ன? என்பதை விசாரிப்பதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

ஜோயலின் தாய் மாமா தான் சொன்ன படி இரண்டு நாட்களில் ஜோயல் வீட்டில் நுழைந்தார். அம்மாவுக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. அனைவரும் அவரை அன்புடன் வரவேற்றனர். ஜோயல்தான் அவரை விழுந்து விழுந்து உபசரித்தான்.

அனைவரும் வீட்டின் விசால அறையை அடைந்தனர். சிறிது நேரம் அறையில் அமைதி. அம்மாதான் மௌனத்தை கலைத்தால். அண்ணா உங்க மருமகன் ஜோயல் +2  ல நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கான். ஆனா அதற்கான ஆர்ப்பாட்டம் கொஞ்சமும் இல்ல.

இஞ்சினியரிங் கல்லூரி, மெடிக்கல் கல்லூரி,, கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி அது  இதுன்னு எத்தனையோ அப்ளிகேஷன். எதுக்கும் அசைந்து கொடுக்கலை. கல்லுளிமங்கன் மாதிரி ஆடாம அசையாம கம்முன்னு கெடக்கிறான். கொஞ்சம் நீங்கதான் அவனை ஒப்பேத்தனும்.

மாமா ஜோயலை ஏறிட்டார். ஏலே ஜோ, என்னாலே பெத்தவங்களை இப்படி படுத்தற? நல்ல ஸ்கோர் பண்ணியிருக்க. உங்க பள்ளியிலேயே முதல் மாணவனா வந்திருக்கே. பிறகு என் இந்த மௌனம்? உன் கனவுதான் என்னலே? இங்கிட்டு பாரு, எல்லோரும் இருக்கோம், செரட்டையை ஓடைசது போல பட்டுன்னு உன் பதிலை சொல்லுலே...

அனைவர் கண்களும் அவனையே ஆவலாய் மொய்த்தன. ஜோயல் வாய் திறந்தான். "மாமா எல்லாரும் எத்தனையோ கல்லூரிகளை சொன்னீங்க. ஆனால் நாகர்கோயில் கன்கார்டியா இறையியல் கல்லூரியை மறந்து போனீங்களே மாமா, நான் "ஒன்"இயர்  பைபிள் கொர்சுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். நான் போதகராகப் போகிறேன். இறையியல் கல்லூரிதான் என் கனவு. தயவு செய்து யாரும் என் கனவை கலைச்சிடாதீங்க மாமா".

இப்போதுதான் அப்பா தாண்டி குதித்தார். கோர்ஸ் முடியவே ஆறு வருஷம் ஆகும்டா... தேவன் என்னோடிருப்பார். அதுக்கப்புறம் மூணு வருஷம் மாடா உழைக்கனும்டா... தேவன் எனக்கு துணையிருப்பார். அதுக்கப்புறம் சம்பளம் இல்லாமலும், சொற்ப சம்பளத்திலும் எப்படி காலம் தள்ளுவ?...... தேவன் துணையிருப்பார். மாமா பேசினார். "சபாஷ்" சரியான முடிவு. பேதுரு இரவு  முழுக்க வலை விரித்தான். பயனில்ல இயேசு ஆண்டவர் வல்லமையால் இரண்டு படகுகள் நிறைய மீனைப் பெற்றான் என்றாலும் அனைத்தையும் விட்டான். ஆண்டவர் பின் சென்றான். அதை தான் என் மருமகன் செய்திருக்கான். ப்ளீஸ், அவன் கனவை நிறைவேற்றுங்க , கலைச்சிடாதீங்க.

ஜோயல் தன கல்லூரிக் கனவு பலித்ததற்காக தேவனை நன்றியுடன் நோக்கினான்.

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, May 26, 2011

நம்பிக்கை மனிதனுக்கு பலம்



ஒரு கிறிஸ்தவ செல்வந்தர்  தனக்கென ஒரு அழகான வீட்டை கட்ட விரும்பினார், அந்த வீட்டின் அழகை மற்றவர்கள் கண்டு
வியக்க வேண்டும் என்றும் விரும்பினார்.எனவே ஒரு மலைப் பாங்கான உயரமான இடத்தை தெரிந்தெடுத்து அங்கே தனது மிக அழகான வீட்டை கட்டினார். வீடு கட்டி முடித்த பிறகு அதன் அழகை அவர் வீட்டின் நான்கு திசைகளிலும், தூரத்தில் நின்று ரசித்து பார்த்தார். அதன் அழகில் அவரே மயங்கினார். ஆனால் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு திசையில் இருந்து வீட்டை காணும்போது, அது மலை பாங்கான இடமாய் இருந்ததால், ஒரு பெரிய பாறை வீட்டின் அழகை முற்றிலுமாய் மறைத்தது.


அது அகற்ற முடியாத பெரிய பாறையாய் இருந்தது, அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவர் கிறிஸ்தவர் என்பதால் இயேசு கிறிஸ்து கூறிய ஒரு உண்மை நியாபகத்திற்கு வந்தது. *கடுகளவு விசுவாசம் இருந்தால் மலையை பெயர்ந்து போ என்றால் அது பெயர்ந்து போகும்* என்று ஆண்டவர் சொன்னது நியாபகம் வந்தது உடனே ஓடினார், வீட்டில் உபவாச ஜெபம் ஆயத்தம் செய்தார். முழு இரவும் பாறை பெயர்ந்து வேறு இடத்திற்கு போக வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

விடியல் வந்தது, ஆசையோடு எழுந்து ஓடிவந்தார், அந்த பாறை இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தார் பறை அதே இடத்தில் கம்பீரமாய் நின்றது. நொந்து போனவர் சொன்ன வார்த்தை *"எனக்கு முன்னாடியே தெரியுமே இது போகாதுனு"* ..

அன்பானவர்களே இது வேடிக்கை அல்ல. உண்மையில் நம் வாழ்வில்  நமக்கு இருக்கிற விசுவாசத்தின் அளவுகோலை தெளிவாக காண்பிக்கிறது. பல விஷயங்களை நடக்காது என்று தீர்மானித்துவிட்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறோம், அதுவா விசுவாசம்?

எரேமியா 17  ம் அதிகாரம 7  ம் வசனம் கூறுகிறது கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரை தன நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

விசுவாசிக்கிறவன் பாக்கியவான் ஆனால் அது விசுவாசமாக இருக்க வேண்டும். நமக்குள் விசுவாசம் இருக்கிறதா? இல்லை இந்த கதையில் வரும் மனிதனுக்கு இருக்கிறதை போல் அவிசுவாசம் இருக்கிறதா? யோசிப்போம்..

மெய்விசுவாசம் பெற்றிட பரிசுத்தாவியானவர் தாமே நம்மை வழி நடத்தி காப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, May 25, 2011

அற்புதம்


அன்பான சகோதர சகோதரிகளே, இந்த காலை நேரத்தில் இறை மகன் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். சில நாட்களுக்கு முன் என் வாழ்வில்  நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.என் மனைவி தற்போது ஆசிரியர் பயிற்சி இரண்டாம்  ஆண்டு பயின்று வருகிறார்கள். கடந்த மார்ச்சு மாதம் தவக்காலங்களின்   இரண்டாவது வெள்ளிக்கிழமை 25  ம் தேதி, நான் வெள்ளிக் கிழமை மாலை ஆராதனை நடத்துவதற்காக பயணம் செய்துக் கொண்டிருந்தேன், போகிற வழியில் என் மனைவி என்னை தொலை பேசியில் தொடர்புக் கொண்டு, தான் ஆசிரியர் பயிற்சியின் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டதாக கூறினார்கள். நன் பேசிவிட்டு தொடர்ந்து ஆராதனைக்கு என் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

அதாவது, என் மனைவி தேர்ச்சி பெற்றால், காணிக்கையாக 1000  ருபாய் திருச்சபைக்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே என்னிடத்தில் கூறியிருந்தது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. ஆனால் என்னிடத்தில் 100  ருபாய் தவிர வேறில்லை அப்போது. சரி ஆராதனை முடிந்து சபையார் தரும் காணிக்கை கொண்டு ஏதாகிலும் சிறிதாய் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிடலாம், காணிக்கை அப்புறம் போட்டுக் கொள்ளலாம் என தீர்மானித்து ஆராதனைக்கு சென்று விட்டேன்.

ஆலயத்திற்குள் போய் அங்கி மாற்றிக் கொண்டு, பலி பீடத்தை நோக்கி,  ஆராதனையை துவங்க  கடந்து போனேன், அப்போது ஒருவர் என்னை நோக்கி வந்து வெளியே நிற்கிற ஒருவர் உங்களை காணவேண்டும் என்று கூறுகிறார் என்றார். நான் உடனே வெளியே வந்தேன், காரணம் நான் ஆராதனை நடத்த வந்திருப்பது எனக்கு ஒப்புவிக்கப்பட்ட திருச்சபைகளில் ஒன்றல்ல, இன்னொரு போதகர், என்னை அங்கு தவக்கால ஆராதனை நடத்த அழைத்திருந்தார். எனவே யாரோ என்னவோ என உடனே வெளியே வந்தேன்.

அங்கே எனக்காக ஒருவர் காத்திருந்தார். அவரது தோற்றத்தில் செல்வந்தராகவும், வார்த்தையில் எளிமை உள்ளவராகவும் என்னோடு பேசினார். அவர் சொன்னது, என் பெயர் ஜோசப் பாஸ்டர்,   இன்று எனக்கு  பிறந்த நாள், என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார், நான் ஜெபிக்க கேட்பார் என்று நினைத்து ஜெபிக்க ஆயத்தமான நேரத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஜெபிக்கலாமென அவருக்கு வாழ்த்து கூறினேன் அவர் நன்றி சொல்லி என் கரங்களை குலுக்கி காணிக்கை கொடுத்தார்.

நான் அதை என் அங்கியில் வைத்துக் கொண்டு, ஆராதனைக்கு நேரமானதால், அவரை உள்ளே அழைத்துவிட்டு, நான் ஆராதனைக்கு சென்று விட்டேன், ஆராதனை முடிந்து, திருச்சபையார் அன்போடு கொடுத்த காணிக்கையை
பெற்றுக்கொண்டு எதுவும் வாங்காமலேயே  வீட்டிற்கு வந்துவிட்டேன். சரி என் மனைவியிடம் காணிக்கைகளை கொடுக்கலாம் என பிரித்து பார்த்த பொது நான் கர்த்தருக்கு நன்றி என்று வாய் திறந்து துதித்தேன் காரணம்,

அந்த செல்வந்தர் கொடுத்திருந்தது, இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள். நான் தவித்தது 1000  ருபாய் இல்லையே என்று. ஆனால் கர்த்தர் கொடுத்தது 2000   ரூபாய். என் மனைவியிடம் இதை கூறின போது அவரும் ஆண்டவரை துதித்து அந்த இரண்டாயிரம் ரூபாயையும் ஆண்டவருக்கு பெரிதான  மகிழ்ச்சியோடு காணிக்கையாக படைத்தார்.

அன்பானவர்களே, இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். இதை கர்த்தர் தன் கிருபையால் எனக்கு கொடுத்தார்.  காரணம் பிறகுதான் எனக்கு தெரிந்தது அவர் அந்த திருச்சபையின் விசுவாசியல்ல. யாரோ அந்த வழியில் பயணிப்பவர் ஆலயத்தை கண்டு கிறிஸ்தவர் என்பதாலே தன் பிறந்த நாளுக்காக ஜெபிக்க வந்திருக்கிறார். கடவுள் அவருடைய பிள்ளைகளை போஷிக்க எப்படியெல்லாம் வழி  நடத்துகிறார்.

சரியாக அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த இடத்தில், சரியாக என்னிடத்தில், என்னுடைய சூழ் நிலையில், நான் கேட்டதை இரண்டு மடங்கு கொடுக்க ஒருவர் வந்ததை என்னால் யதார்த்தமாக  நடந்த சம்பவமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சத்தியமாய் அது நான் விசுவாசிக்கும் என் கிறிஸ்துவாம், இயேசு ஆண்டவரின் அற்புத வழி நடத்துதல்.
இந்த நேரத்தில் ஒரு வசனத்தை நினைவு கூற  விரும்புகிறேன்,   ஏசாயா.51 :3  ல்  ஏசாயா  கூறுகிறார் வனாந்திரத்தை ஏதேனை போலவும், அவாந்திர வெளியை, கர்த்தரின் தோட்டம் போலவும், மாற்றுவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும், துதியும் கீத சத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

எவ்வளவு சத்தியமான வார்த்தை இந்த காலை இந்த வார்த்தையை அனுபவிக்க போகிறம் என்ற விசுவாசத்தோடு இந்த நாளின் பணிகளை துவங்குங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, May 24, 2011

வளமும் நலமும் பெற்றிட

அன்புள்ள எனதருமை உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் காலை ஸ்தோத்திரங்கள். இன்று காலை நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை. உபாகமம்.15 :5 .

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்




ஒரு ஏழை முதியவர், தன குடும்பத்தை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியாமல், ஒரு செல்வந்தரிடம் கடன் வாங்க சென்றார். அந்த செல்வந்தர் அந்த முதியவரை அழைத்து உனக்கு என்ன துன்பம் உன் துன்பத்தை நான் போக்குகிறேன் என்று சொல்லி, அவர் வறுமை தீர உதவி  செய்ததுமல்லாமல், தொடர்ந்து அவர் குடுமபத்தை தன வீட்டிற்கு அழைத்து தினந்தோறும் அவர்களை பராமரித்தால்? அந்த முதியவர் அந்த செல்வந்தரை பற்றி என்ன நினைப்பார்? ஓர்  இளிச்சவாயன் சிக்கிட்டான் என்றல்லவா சொல்லுவார்? காரணம் இப்படி உதவி செய்யும் ஒருவரை இவ்வுலகில் நாம் காணவே முடியாது. அப்படி செய்தால் அவருக்கு பைத்தியம் என்றுதானே உலகம் சொல்லும்.

ஆனால் உண்மையில் அப்படி செய்த ஒருவரை தான் இன்றைய தியான பகுதியில் காண்கிறோம். அவர் யார் தெரியுமா? இவ்வுலகை படைத்து பராமரித்து வரும் நம் கடவுள். இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் அந்த அடிமைத்தனத்தின் வேதனை தாங்க முடியாமல் கண்ணீரோடு போராடி வந்த காலத்தில் கொடுமையின் உச்சமாக எகிப்திய அரசன் பார்வோன், அவர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம்   கொல்ல சொல்லி சட்டம் போட்டான்.



இஸ்ரவேலர்கள் வாழ்வே இருண்டு போனது, செய்வதறியா ஜனம் கடவுளை நோக்கி கூக்குரலிட்டது. அவர்கள் கூக்குரலின் நோக்கம் என்னவாக இருந்திருக்க முடியும்? இந்த அடிமைத்தன நாட்டை விட்டு எங்காவது ஓடினால் போதும் என்பதை தவிர  வேறு எதையும் அவர்களால் யோசித்து கூட பார்க்க முடியாதல்லவா? ஆனால் கடவுளோ அவர்கள் கூக்குரலை கேட்டு அவர்களுக்காக இறங்கினார், அதுமட்டுமல்ல விடுதலை வந்தால் போதும் என்ற ஜனத்துக்கு பாலும் தேனும் வழிந்தோடும் தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குரைத்தார். அவர்கள் கனவிலும் நினைத்திராத வாழ்வை தருவேன் என்று வாக்குறுதியளித்தார்.

அதோடு நில்லாமல் இன்றைக்குரிய தியான வசனத்தில் நீங்கள் தொடர்ந்து என்னையும் என் வார்த்தைகளையும் பின்பற்றினால் உங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தில் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்று அவர்கள் முழு எதிர்கால  வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகிறார் இதுவரை கொடுத்ததே அவர்களுக்கு பெருத்த ஆசீர்வாதம் ஆனால் மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்கிறார். சொன்ன படியே இன்றுவரை ஆசீர்வதித்து வருகிறார்.

அன்பானவர்களே இதே சர்வ வல்லமை பொருந்திய கடவுள் கிறிஸ்துவாக நம்மோடு, நம் வாழ்வோடு பயணித்து வருகிறார், யுக முடிவு பரியந்தம் நான் உன்னோடு இருப்பேன் என்று சொன்னவரல்லவா? அவர் நம்மை இதுவரை ஆசீர்வதித்ததே அற்புதம் தான் ஆனால் இது முடிவல்ல  மென்மேலும் ஆசீர்வதிப்பார். இந்த ஆசீர்வாதத்தில் நிலைத்து வாழ அவரை அவர் வார்த்தைகளை பின் பற்றி வாழ்வோம். பரிசுத்த ஆவியானவர் அதற்காக நமக்கு உதவி செய்வாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, May 23, 2011

அறிவிப்புகள்



அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் ஸ்தோத்திரங்கள். கடந்த சனிக்கிழமை விண்ணமங்கலம் திருச்சபையின் தலைவர் திரு.டேனியேல் அவர்கள் 3000  கை பிரதிகளை இந்த தளத்தின் விளம்பரமாக அச்சிட்டு வெளியிட்டார். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். குறிப்பாக அவரது மகள்,  சகோதரி மேரி கேதலின் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த தளத்தில் முதல் கருத்துரையிட்ட முதல் வாசகர். கர்த்தர் நிச்சயம் அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, May 19, 2011

மகிழ்ச்சியான குடும்பம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்களை இந்த காலை வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை சங்கீதம்.91 :10 

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது


குடும்ப வாழ்வு மிக முக்கியமானது, நமது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருந்தால் தான் நாம் நினைத்ததை  இந்த உலகில் சாதிக்க முடியும், எனவே மன நிறைவான குடும்ப வாழ்க்கை தான் நமது தேடலாக இருக்கிறது. மன நிறைவான சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த குடும்ப வாழ்க்கை அமைய இரண்டு விஷயங்கள்   நமது குடும்பத்தை அண்டக் கூடாது.

ஒன்று பொல்லாப்பு, அதாவது நம் ஊர்களில் பெரியவர்கள் அடுத்தவன் பொல்லாப்பு நமக்கு வேணாம் சாமி என்பார்கள், அதாவது பொல்லாப்பு என்பது அடுத்தவர்கள் நமக்கு எதிராக சிந்திக்கிற, செய்கிற தீங்குகளாகும். இப்போதெல்லாம் அடுத்தவன் வாழ்க்கை நலமாக அமைய ஆசைப்படுபவர்கள் யாருமே இல்லை, மாறாக அடுத்தவன் வாழ்வை  கெடுப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள், ஒருவனுடைய முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டுபவர்களைவிட, இவனுக்கெல்லாம் இந்த வாழ்க்கையா? என்று பொறாமை படுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். நினைப்பதோடு நின்றால்  பரவாயில்லை, கெடுப்பதற்கென்று திட்டம் வகுத்து செயல் படுபவர்கள் இருக்கிறார்கள் இவர்களிலிருந்து நம் குடும்பங்கள் தப்பிக்க வேண்டும்.

இரண்டாவது, வாதை. வாதை என்றால் நோய், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவோம், காரணம் எப்போதெல்லாம் நாம் நோய்களை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் அனேக இழப்புகளை சந்திக்கிறோம், நம்முடைய வேலை பாதிக்கிறது, நம்மை கவனிக்க அடுத்தவர்கள் பணிகளும் பாதிக்கிறது, பணம் செலவாகிறது, நாம் முடங்கி போகிறோம், குணமாக்க கடினமான புற்று நோய் போன்ற வியாதிகளோடு போராடுகிறவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

இவை இரண்டையும் நாம் வென்றால் நம் வாழ்வை நாம் வென்றுவிடலாம். வெல்ல முடியுமா? அதற்கான வழியை தான் இந்த தியான பகுதி நமக்கு கற்று தருகிறது. உலகின் ஒளியாம் ஆண்டவரை அடைக்கலமாக ஏற்றுக்கொண்டால், அதாவது இயேசு கிறிஸ்துதான் என் வாழ்வின் ஒளி என்று ஏற்றுக்கொண்டால் இவை இரண்டும் நம்மை அணுகாது என்று சங்கீதக்காரன் நமக்கு தெரிவிக்கிறார். அதாவது, வியாதியே சந்திக்காத உடலையோ, தீங்கே வராத குடும்ப வாழ்வையோ  அல்ல, அவைகள் நம்மை அணுகி மேற்கொள்ளாத வாழ்வை கடவுள் நமக்கு தந்தருள்வார். அவரில் நம்பிக்கை வைத்து இந்த மேலான வாழ்வை அடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, May 18, 2011

என்னை நோக்கி பாருங்கள்

எபிரெயர்.12 :1 

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமது கிறிஸ்தவ
வாழ்வில், அடித்தளம்  இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை என்ற பழமொழி நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.


மத்தேயு.14 :22 -32  ல் உள்ள சம்பவம், நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், சீடர்கள், படகில் இரவு நேரத்தில், அலைமிக்க கடலில் பயணம் செய்கிறார்கள். இரவு நேரம், பயம் திகில், நிறைந்த நேரத்தில், இயேசு கடலின் மீது நடந்து வருகிறார். பேதுரு மட்டும் அவர் இயேசுதான் என்று கண்டுக்கொண்டார். ஆனால் மற்றவர்கள், பயந்தார்கள். பேய் ஆவேசம் என்று அலறினார்கள். பேதுரு இயேசுவிடம், ஆண்டவரே நீரேயானால் நானும் கடலின் மீது நடந்து வர அனுமதியும் என்றார். மாத்திரமல்ல மிகுந்த  சந்தோஷத்தோடு நடந்து போனான், இயேசுவை பார்த்துக் கொண்டு போகும்போது, நம்பிக்கையோடு போனார். ஆனால் கடலையும், அதின் அலைகளையும் பார்த்தான், பயந்தான், விசுவாசம் இழந்தான் கடலில் மூழ்கினான்.


அன்பானவர்களே நாமும் நமது வாழ்வில், துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் வரும்போது இயேசுவின் மீது பார்வையை திருப்புங்கள், நமது ஆண்டவர் நாம் துன்பப்படும்போது  நம்மை அதிகமாய் தாங்கி, விடுவித்து வழி நடத்துகிறார். இயேசுவின் மீது நம்பிக்கை கண்ணை வைத்து வாழ வேண்டும். அவருடைய வாக்குத்தத்தம் நம்மோடு உண்டு. நாம் எங்கே போனாலும் இயேசு நம்மை தொடர்ந்து வருகிறார். பேதுருவை தாங்கி கைத்தூக்கி உயர்த்தியதை போல நம்மை மீட்டு இரட்சித்து வாழ்வு தருகிறார். அவருடைய உயிர்த்தெழுதலின் பலனாய் பாவம், பிசாசு, மரணம், பயம்  இவைகளை வென்று நாம் சாதிக்க பிறந்தவர்கள். அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகார ஆவியை பெற்றிருக்கிறோம். அவருடைய பிரசன்னம் நம்மோடு உண்டு.

LET US FIX OUR EYES ON JESUS

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, May 17, 2011

மீண்டு எழுவோம்


அன்பான சகோதர சகோதரிகளே, உங்களுக்கு என் காலை வணக்கங்கள். ஒரு குழந்தை பிறந்து, கவிழ்ந்து தவழ ஆரம்பித்து பின் எழுந்து நின்று நடக்க பழகும்போது, பல முறை சறுக்கி விழுகிறது. அதனால் பல காயங்கள் பிள்ளைகளின் சரீரத்தில் இருக்கும். ஐயோ பிள்ளை விழுகிறதே, காயம் ஏற்படுகிறதே என்று பெற்றோர்கள் பயந்து குழந்தையை தரையில் விடாமல் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தூக்கியே வைத்திருந்தால் பிள்ளை நடக்க தெரியாத குழந்தையாக வளரும், நடக்க வெகு காலம் ஆகிவிடும்.

எனவே சறுக்கல் என்பது வாழ்வில் இயற்கையானது, இது நடை பயிலுவதில் மட்டுமல்ல, வாழ்வில் முன்னேற்றத்துக்கான போராட்டத்திலும் தொடர்கிறது. காரணம் நாம் தேடும் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை பல போராட்டங்களையும் சறுக்கல்களையும் சந்தித்த பிறகுதான் வெற்றி சாத்தியப்படுகிறது. ஆனால் நாமோ சறுக்கல்களே இல்லாத வெற்றி வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை.


காரணம் சறுக்கல்கள் என்பது இயற்கையானது, ஆனால் நம்மில் பலர், ஒரு சின்ன சறுக்கல் வந்துவிட்டால் கூட அவ்வளவுதான் வாழ்வே பறிபோய்விட்டதை போல உணர்ந்து வேதனையில் மூழ்கிவிடுகிறோம். அதற்கு பிறகு தொடர்ந்து முயற்சிக்கும் மனோபலம் இல்லாதவர்களாய் முடங்கிவிடுகிறோம். பரீட்சையில் தோற்றவர்கள், வேலை கிடைக்காத வாலிபர்கள், தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள், வியாபாரத்தில் எடுத்தவுடனே நஷ்ட்டத்தை சந்தித்தவர்கள், இப்படி சறுக்கல்களை சந்திப்பவர்கள் வாழ்வையே வெறுத்துவிடுகின்றனர்.

ஆனால் வேதாகமத்தில், 94  வது சங்கீதம் 18  வது வசனத்தில் சங்கீதக்காரன் கூறுகிறார், என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே உமது கிருபை என்னை தாங்குகிறது.

அன்பானவர்களே, எவ்வளவு பெரிய உண்மை இது, நம் கால் சறுக்கினால் கர்த்தரின் கிருபை வந்து தாங்குகிறது, இதை வாழ்வில் அனுபவித்திருக்கிறீர்களா?  
இல்லை என்றால் இனி சறுக்கும்போது இயேசுவே என்று ஒரு குரல் கொடுத்து பாருங்கள் அவர் தாங்குவார்,  நாம் மீண்டு எழும் பாக்கியத்தை கொடுத்தருள்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காத்துக் கொள்வாராக ஆமென்.





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, May 16, 2011

HIDDEN MESSAGE OF BIBLE


 
அன்பானவர்களே இந்த காலை jesus  saves  ஊழிய நண்பர்கள்  எனக்கு  அனுப்பிய  ஒரு ஈமெயில் தகவலை  உங்களோடு பகிந்து கொள்ளுகிறேன். உண்மையில் இந்த செய்தி மிகவும் சத்தியமான ஒரு செய்தியை தருகிறது. கண்டு உங்கள் கருத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.



In Genesis chapter – 5, we have genealogy goes from Adam the first man and down through Noah.

If you make the list, that has follows as


This is birth order of the Adam generation (Family)

And let take this 10 names means, if u have study the bible the sources ….

Adam ------ > MAN

Seth ------ > Appointed

Enosh ------ > Mortal --human

Cainan ------ > Sorrow --sadness,  unhappiness, trouble

Mahalalel ------ > the Blessed God

Jared ------ > Shall come down

Enoch ------ > Teaching
.
Methuselah ------ > His death shall bring.

Lamech ------ > The Despairing --Hope less, (nambikai illalamal)

Noah ------ > Comfort (or Rest)


Let us read this genealogy,

Man appointed mortal sorrow; the blessed god shall come down teaching his death shall bring the despairing comfort.

Man (has) Appointed Mortal Sorrow; (but) The Blessed God shall come down Teaching, (and) His death shall bring The Despairing comfort.

By

Saturday, May 14, 2011

மனம் மகிழுவோம் (தோழியருக்காய்)

 
அன்பு தோழி மீண்டும் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் சிரிக்கும்போது அன்பு மலர் மணம் வீச வேண்டும். கருணை என்னும் குணம் கருத்தை நிறைக்க வேண்டும் 

தரும சிந்தனையே இல்லாத ஒரு ஜமீந்தாருக்கு  கருணையே உருவான ஒரு மனைவி இருந்தாளாம், தண்ணீர் தட்டுப்பாட்டினால் தவித்த அந்த ஊர் மக்களுக்கு, ஜமீந்தாரே சொந்த செலவில் கிணறு வெட்டி தந்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. பொறுத்திருந்து பார்த்த மனைவி, ஒரு தெளிவுக்கு வந்தாள், ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து, அதில் சிறிய பள்ளம் தோண்டி, அதில் மேலாக சிறிது (பெட்ரோல்) எண்ணெய் ஊற்றி ஜமீன்தாரை அழைத்து அந்த இடத்தைக் காட்டி, இங்கு தோண்டினால் எண்ணெய் கிணறு கிடைக்கும் போல என்று கூறினாள், இதைக் கேட்ட ஜமீன்தாரும் ஆட்களை அழைத்து, தன் சொந்த செலவிலேயே கிணறு தோண்ட ஏற்பாடு செய்தார். சிறிது ஆழத்திலேயே சுத்தமான குடி நீர் கிடைத்தது. ஜமீன்தார் பெரும் ஏமாற்றத்தை அடைந்தாலும், ஊரார் அவரை புகழ்வதையும், வாயார வாழ்த்துவதையும் கண்டு மனம் மாற்றம் அடைந்தாராம்.
அன்புத்தோழி வாழுதல் என்பது எல்லாருக்கும் பொதுவானது, ஆனால் அதை எப்படி வாழ்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது.

மல்லிகை தோட்டத்தை கடக்கும் காற்று மணக்கின்றது, சாக்கடையை கடக்கும் காற்று நாறுகிறது, நாம் நமது நற்குணங்களால் கடவுளின் நாம மகிமைக்கென மணம் பரப்புவோம். கடவுள் நமக்கு தந்திருப்பதைக் கொண்டு, மகிழ்ச்சியாய் வாழ கற்றுக் கொள்வோம். கடவுள் நமக்கு சிறப்பான பல காரியங்களை தந்திருக்க, அதை நினைக்காமல், இல்லாத காரியங்களுக்காய் புலம்பி திரிவதில் அர்த்தம் இல்லை.

அன்புத்தோழி! நம் வீட்டில், அலுவலகத்தில், ஊரில், இப்படி எந்தெந்த இடத்திலானாலும் சரி.... என்னென்ன மாற்றங்கள் நடந்தாலும் சரி....... நாம் நினைத்தால் சோதனைகளைக் கூட சாதனைகளாய் மாற்றிக் கொள்ள முடியும். சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு சீரிய சிந்தனைகளை விதைக்க முடியும்.

உதாரணத்திற்கு பென்சிலையே அடுத்துக் கொள்வோம், செதுக்குதல் என்பதோ, சீவுதல் என்பதோ வலி நிறைந்ததுதான், ஆனால் பென்சில் என்பது சீவப்பட்டால் தான் அதன் கூர்முனை கிடைக்கும். அதுதான் பயன்தரக் கூடியது..

தோழி பணம் செல்வம் வசதி வாய்ப்புகள்... இவையெல்லாம் வெளிப்புறம்.
மகிழ்ச்சி சந்தோஷம் இதெல்லாம் உட்புறம்... என்னும் அர்த்தத்தில் யோசித்து பார்ப்போம்.

மன மகிழ்ச்சி முக மலர்ச்சியை தரும், மனோ துக்கத்தினாலே ஆவி முறிந்துபோம் நீதிமொழிகள்.15 ;13

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். பிரசங்கி.11 :15 

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
 
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

Thursday, May 12, 2011

புதிய பொழுதில் புது வாழ்வு

அன்பான உள்ளங்களுக்கு காலை நேர வாழ்த்துக்கள், பொழுது புலரும்போதெல்லாம் புது வாழ்வு மலர விரும்புகிறோம். இதோ புது வாழ்வும், ஆசியும் வழங்கும் இறை வார்த்தைகள்.



II நாளாகமம் 15 :4. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
இஸ்ரவேல் தேசத்தில் ஆசா என்றொரு அரசன் இருந்தான், அவன் புதிதாய் அரியணை ஏறிய சமயமதில் பக்கத்து நாடாம் எத்தியோப்பியாவிலிருந்து, செராகு என்பவன் தலைமையில் பத்துலட்சம் வீரர்களும், முன்னூறு தேர்களும், ஆசாவை எதிர்த்து புறப்பட்டன. ஆசா கடவுளை நாடுவதையன்றி வேறு வழி அறியவில்லை, இவ்வளவு பெரும் படை ஜெயிக்க இறைவன் துணை தான் முக்கியம் என உணர்ந்து இறைவனடி சேர்ந்தான், ஜெபித்தான்.

இறைவா நின் துணை எமக்கு வேண்டும் என மன்றாடினான், பலன் இறைவன் துணை நின்றார், துவம்சம் செய்தான் எதிரி படையை, இனி மீண்டு எழவே வாய்ப்பில்லாத படி. இக்காட்சி கண்ட அன்றைய இஸ்ரவேலின் தீர்க்கன் அசரியா சொன்ன வார்த்தைகளே இக்காலை நமக்கு அருள்வாக்கு, இத்திருக் காட்சியை, மாபெரும் வெற்றியை மிக தெளிவாக ஒரு வாசகத்தில் குறிப்பிட்டு இறைவனை மகிமைபடுத்தி, நமக்கும் வருமுன் காக்கும் வழி கூறுகிறார்.

அவர் சொன்ன வாசகம் இதுதான், தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவரை தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

ஆம் ஆசா என்ற அரசன் ஜெயிக்க வாய்ப்பில்லா பெரும்படை வந்த இக்கட்டு நேரத்தில் செய்வதறியா திகைக்காமல், இறைவன் தஞ்சம் ஓடினான், அவர் அவனுக்கு வெளிப்பட்டார் அவன் தேடிய வெற்றியாக.


அன்பானவர்களே  இக்காலை நமக்கு எவ்வளவு போராட்டம் இருப்பினும் அவற்றுள் வெற்றி வேண்டுமா? நம் வாழ்வின் சவால்களில் வெற்றி வேண்டுமா? எதிரிகளின் சூழ்ச்சியினின்று வெற்றி வேண்டுமா? வருவீர் நமது மெய் தேவனாம் இயேசுவின் திருவடி. அவர் வருவார் நாம் தேடும் வெற்றியாக, சுகமும் அருளும் உங்களை தொடர வாழ்த்துகிறேன். ஆமென்.



கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, May 11, 2011

இயேசுவின் குரல் கேட்போம்

யோவான்.10 :11 -18 ,



உயிர்த்த இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமதாண்டவர், நம் வாழ்வில் நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். நல்ல மேய்ப்பன் இயேசுகிறிஸ்து, தமது ஆடுகளைக் காக்க,  தமது ஜீவனை தந்தார். நாம் அவருடைய குரலுக்கு செவிகொடுக்க வேண்டும்.

நாம் நமது தலைவர், மேய்ப்பனாக இருக்கிற இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்திருக்கிறோம். அந்த விசுவாசத்தை நாம் அவருடைய குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். இன்றைய நவீன உலகத்தில் தாய் தகப்பன் வார்த்தைகளைப் பிள்ளைகள் கேட்பதில்லை, மதிப்பதுமில்லை இதனால் இன்றைய சமுதாயத்தினரும் சரி, நம்முடைய பெற்றோர்களும் சரி, இயேசுவின் குரல் கேட்க வேண்டும்.

இயேசு ஆடுகளை தனித்தனியாக அறிந்திருக்கிறார்.யோ.10 :27

#இயேசு தன் ஜீவனைத் தந்ததின் மூலம் அன்பை  வெளிப்படுத்தினார்.மத்.26 :53 .

#இதன் மூலம் தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்.யோ.15 :10   ௦

மேய்ப்பன் என்ற வார்த்தை , ஆங்கிலத்தில் Shepherd - Protecter, leader, provider, sustainer, redeanmer. போன்ற அர்த்தங்களில் அறியப்படுகிறது.


நல்ல மேய்ப்பனின் அன்பு தன்னை ஈவாக கொடுத்த அன்பு, தன்னைத்தான் அர்பணித்த அன்பு. இந்தக் கால  கட்டங்களில்  சிலர் நல்ல மேய்ப்பனை விட்டு வெளியே போகிறோம், அவருக்கு செவிக்கொடுப்பதில்லை, சபையை விட்டு போகிறோம். நம்முடைய மேய்ப்பர்களை விட்டு போகிறோம், மற்ற மேய்ப்பர்கள் தன ஜீவனை தராமல் நம் ஜீவனை எடுக்க முயற்சிப்பார்கள். நல்ல மேய்ப்பனின் குரல் கேட்போம், கீழ்படிவோம். வாழ்வோம்.


 
கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, May 10, 2011

ஆசீர்வாதம் தருபவர்

அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம். உபாகமம்.7:14a

 

சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்
நான் எல்லாரையும் விட விசேஷமானவன் என்று சொல்வதை நாம் எல்லாருமே விரும்புவோம், ஆனால் பல நேரங்களில் மற்றவர்களுடைய வாழ்க்கை தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மால், நான் மற்றவர்களை  விட விசேஷமானவன் என்று சொல்ல முடியாது. காரணம் சமூகத்தில், பணபலம், படைபலம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு முன்னால் நாம் ஒன்றுமே இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

நாம் மாதம் 10000  ரூபாய்க்கு போராடுகிறோம், ஆனால் மாதம் 10  கோடி ருபாய் சாதாரணமாக செலவு செய்யும் செல்வந்தர்கள் இருக்கிறார்கள், தற்போது நடைப்பெற்று வருகிற IPL  கிரிக்கெட் போட்டிகள், நமக்கு பணக்காரர்களின் முகத்தை தெளிவாக காட்டி வருகிறது பணம் சாதரணமாக வாரி இறைக்கப்படுவதை நாம் கண்கூடாக காண்கிறோம். நம்மை அவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதே முட்டாள்தனம், காரணம் அவ்வளவு உயரத்தில் இருகிறார்கள்.

ஆனால் கடவுள் தன் ஜனத்தை பார்த்து கூறுகிற ஆசீர்வாதம், நீ சகல ஜனங்களை பார்க்கிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்பதே. இது உண்மைதானா? நம் கடவுளுக்கு பொய் பேச தெரியாதே, அப்படியானால் இது சாத்தியம் தானா?

அன்பானவர்களே, என் வாழ்வில் இதை உண்மையாகவே உணர்கிறேன், நான் இன்னும் ஒரு திருச்சபையில் அங்கீகரிக்கப்பட்ட போதகராக இல்லை, எனக்கென்று ஒரு சம்பளம் இல்லை, ஆனால் ஓடிக்கொண்டிருக்கிறேன், சமாதானமாக, சந்தோஷமாக, உள்ளார்ந்த ஆத்ம திருப்தியோடு, எப்படி? என் கேள்விக்கு ஒரே பதில் தான் நான் என் கடவுளை நம்பி இருக்கிறேன், அவர் என்னை விசேஷமாகவே வைத்திருப்பதாக உணர்கிறேன் இது தொடரும் எனவும் விசுவாசிக்கிறேன்.

ஆனால் இந்த ஆத்மார்த்த திருப்தி  நாம் காணும் செல்வந்தர்களிடத்தில் இல்லை என்பது சத்தியமான உண்மை, இன்றைய நாட்டு நடப்பையும், அரசியல் சூழ்நிலைகளையும் காண்பவர்களுக்கு அது நன்றாக தெரியும் .

உங்கள் வாழ்வில் கடவுள் நிச்சயமாக இந்த வசனத்தின் படி ஆசீர்வதித்து வருவார் என்று நம்புகிறேன், அதை சாட்சியாக கருத்துரையில் பகிர்ந்துக் கொள்ளுங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, May 7, 2011

புத்தியுள்ளவர்களாய் இருப்போம் (தோழியருக்காய்)

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள், புத்தியில்லாத ஸ்திரீயோ, தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
 நீதிமொழிகள்.14 :1 .

அன்பு தோழி! பெண்களால் எதையும் கட்டி எடுக்கத்தான் முடியும், அவர்கள் எதையுமே அவ்வளவு சீக்கிரமாய் இடித்துபோட்டுவிட முடியாது என்பதுதான் பொதுவான கருத்து.

ஆயினும் அனேக வேளைகளில் நமது அளவற்ற கோபமும், எரிச்சலும், நம்முடைய சந்தோஷங்களுக்கு உலை வைத்துவிடும் அபாயமும் அதிகமாக காணப்படுகிறது. "உடனிருந்தே  கொல்லும் வியாதி போல" உடனிருந்தே நமது கோபம் நம்மை அழித்துவிட நோக்கமாயிருக்கும்.

"பெருங்கோட்டையையே எரித்துவிடும் துளி நெருப்பு போல" நமது சிறிய கோப வெளிப்பாடுகள் கூட பெரும் விளைவுகளை சில வேளைகளில் ஏற்படுத்திவிடும். தோழி, கடவுள் கிருபையாய் நமக்கு இந்த உலக வாழ்வினை சிறப்பாக வாழும் சிலாக்கியத்தை தந்திருக்கின்றார். ஒவ்வொரு மணித்துளியும் அவரிலே நம்பிக்கை வைத்து நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.

கோபம் என்பது உணர்வின் வெளிப்பாடுதான் என்றாலும், கோபப்படுவதற்கு முன் ஒரு முறை நிதானித்து, இந்த இடத்தில் இவ்வளவு கோபம் தேவையா? என்று மறு பரிசீலனை செய்வது மோசமான விளைவுகளை தவிர்க்க உதவியாக இருக்கும். ஏனெனில் கோபம் முதலில் நமது புத்தியை மழுங்கடிக்கின்றது.


தோழி! நமது சகிப்புத் தன்மையுனாலும், புத்திசாலித்தனத்தினாலும், சண்டைகள் வர வேண்டிய இடத்திலே, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவர நிச்சயம் இயலும். நாமும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும், நம்மை சுற்றி இருப்போரும்,  முக்கியமாய்  நமது குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

வானத்து நட்சத்திரங்கள் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் பகலிலே அது நமக்கு தெரியவில்லை, எனினும், இரவிலே அது அழகாக வெளிப்படுகிறது.

அன்புத்தோழி! எரிச்சலும், கோபமும், முரட்டாட்டமும்,
புத்தியின்மையும், நம்மை மழுங்கடித்துவிடாதபடி, விழிப்புடன் நம் வீட்டை, குடும்பத்தை கட்டியெழுப்புவோம். ஜெபத்தின் வழியாகவும், வேத வாசிப்பின் வழியாகவும் ஆண்டவரோடு தரித்திருப்போம்.

புத்தியில்லாமல் வீட்டை
இடித்துப்
போடுகிறவர்களாய்
அல்ல, புத்திசாலிகளாய்
வீட்டிற்கும், திருச்சபைக்கும், சமூகத்திற்கும் ஆசீர்வாதமாய் விளங்கும்படியாய் ஆண்டவர்தாமே தமது பரிசுத்தாவியினால் நம் ஒவ்வொருவரையும் பலப்படுத்திக் காப்பாராக ஆமென்.

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

Friday, May 6, 2011

இயேசுவே இனிய துணை

அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நம் ஆசீர்வாதத்திற்கென எடுத்துக் கொண்ட தியான வசனம், யாத்திராகமம்.33 :14 .

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்


நம் யாவருக்கும் பிடித்தமான வசனம், நாம் மிகவும் விரும்புகிற வசனம், நம்மில் அநேகர் இந்த வசனத்தை தங்கள் வாகனங்களில் ஒட்டி வைத்திருப்பார். இந்த வசனத்தை கடவுள் சொன்ன சூழ்நிலையை நாம் தியானித்தால் அதன் மேன்மையை இன்னும் தெளிவாக உணர முடியும்.


இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, கானானை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்த காலத்தில் மோசே கடவுளை நோக்கி ஒரு விண்ணப்பம் செய்தார். அந்த  விண்ணப்பம் என்னவென்றால்? கடவுளே நான் இஸ்ரவேல் மக்களை அழைத்துக் கொண்டு போகிறேன் காரணம் நீர் அழைத்துக் கொண்டு போ என்று சொன்னீர். ஆனால் என்னோடு இன்னாரை அனுப்புவேன் என்று நீர் சொல்லவில்லை எனவே என் மீது கிருபையாய் இரும், உமது வழியை எனக்கு அறிவியும் என்று வேண்டிக் கொண்டார். ( யாத்திராகமம்.33 :12 -13 )

அதற்கு கடவுள் கொடுத்த பதில்தான் இந்த வசனம். மோசே ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளார், தனியாக அல்ல லட்சக் கணக்கான மக்களோடு, செங்கடலை கடக்கும் வரை கர்த்தரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார், இப்போது வனாந்திரத்தில் நீண்ட நெடிய பயணம் செய்ய வேண்டியுள்ளது.  எந்த திசையில் எப்படிப்பட்ட ஆபத்து வரும் என்று தெரியாது. ஆனால் மோசேவுக்கு சரியான துணை என்று கடவுள் யாரையும் நியமிக்கவில்லை, அந்த பயம் மோசேவுக்கு இருக்கிறது. காரணம் எந்த ஆபத்து நேர்ந்தாலும்  மோசேதான் முழு பொறுப்பாளி. எனவே கடவுளை நோக்கி வேண்டுகிறார்.

ஆனால் கடவுள் தந்த பதில் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்பதே.

இது சாதாரண வழி பயணம் அல்ல, அடிமைத்தனத்தின் வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வை நோக்கிய வாழ்க்கை பயணம். கடவுள் கூறிய பதில் என் சமூகம் உங்களோடு வரும் என்பதே.

பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் நம்மோடு பயனிக்கிறவர் நம் கடவுள், நம் வாழ்வு உயர, நன்மைகளை பெற்றுக்கொள்ள, நம்மோடு பயனிக்கிறவர்.


இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு அறிவுரை, ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர சொன்னால், நீ அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்றார். ஏன் அப்படி செய்ய சொன்னார் அன்பின் நிமித்தமாக. அதே போல நம் ஆண்டவரை நாம் கூப்பிட்டால் நம் வாழ்வு முழுக்க இனிய உறவாக பயணித்து ஆசீர்வதிப்பார்.

இந்த திட நம்பிக்கையோடு, அவரோடு பயணிக்கிறோம் என்ற உத்தரவாதத்தோடு இந்த நாளை துவங்குவோம் ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, May 5, 2011

அறிவிப்புகள்

அன்பான உடன் விசுவாசிகளே, தள நண்பர்களே உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இந்த தளம் துவங்கிய நான்கு மாதத்தில் நீங்கள் கொடுத்து வருகிற அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.  தற்போது ஐந்தாவது மாதத்தில் அடியெடுத்து வைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இறையாசியை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவே இதை நான் துவங்கியுள்ளேன். தொடர்ந்து உங்கள் ஊக்கமான ஜெபத்தையும், பேராதரவையும் நான் எதிர்நோக்கியுள்ளேன். இந்த தளம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதா? தயவு செய்து உடனே மற்றவர்களுக்கும் இதை அறிமுகம் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் இந்த ஊழியத்தின் பங்குதாரர்களாகவும் கிறிஸ்துவை அறிவிக்கும் சுவிசேஷகராகவும் மாறுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இம்மாதம்  மூன்று புதிய அறிவிப்புகளை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன். முதலாவது இந்த தளத்தில் வலது பக்கத்தில் உள்ள
follow by email என்ற கட்டத்தில் உங்கள் email id ஐ நீங்கள் பதிவு செய்தால் போதும் உங்கள் ஈமெயில் முகவரிக்கே இந்த தளத்தின் அத்தனை ஆசீர்வாத செய்திகளும் தேடி வந்துவிடும்.



இரண்டாவது நீங்கள் உலகெங்கும் உள்ள உங்கள் உறவுகளுக்கு, பிறந்த நாள் வாழ்த்தும் ஜெபமும் ஏறெடுக்க வேண்டும் என்று விரும்பினால்   எங்கள் ஈமெயில்   முகவரிக்கு நீங்கள் புகைப்படத்தையும்  உங்கள் வாழ்த்தையும் அனுப்பினால் போதும் நாங்கள் ஜெபித்து அதை பதிவேற்றுவோம்  என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




மூன்றாவது இந்தியாவிற்குள் வாழும் விசுவாசிகள், தங்கள் மொபைல் போனில் வாக்கு தத்த வசனங்களை தினந்தோறும் காலையில் பெற விரும்பினால் உங்கள்  பெயர் மற்றும்  மொபைல் போன் எண்ணை  எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்துக்கொண்டால் தினந்தோறும் உங்களுக்கான வாக்குத்தத்த வசனங்கள் sms  வழியாக அனுப்பப்படும்.

என்றும் இறைபணியில்,
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews