அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் நெஞ்சார்ந்த ஸ்தோத்திரங்கள். இன்று காலை ஆசீர்வாதத்திற்கென தியானிக்கப்போகிற திரு வசனம். சங்கீதம்.66 :20 .
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
ஜெபம் என்ற வார்த்தையை புரிந்துக் கொள்ள அனேக வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். மன்றாட்டு, வேண்டுதல், விண்ணப்பம் போன்றவை ஜெபத்தை புரிந்துக்கொள்ள நாம் பயன்படுத்துகிற வார்த்தைகள். இதில் அதிகமாக நாம் பயன்படுத்துகிற வார்த்தை விண்ணப்பம் என்கிற வார்த்தை.
பொதுவாக நாம் வேலைக்கு போவதற்காக, கல்லூரியில் சேர்வதற்காக
விண்ணப்பங்களை அனுப்புவோம், இப்போது LKG ல் சேர விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஆனால் நாம் அனுப்புகிற எல்லா விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்படும் என்று சொல்ல முடியாது.
நம்முடைய
தியான பகுதியில் சங்கீதக்காரன் சொல்லுகிற செய்தி, கர்த்தர் என் ஜெபத்தை (விண்ணப்பத்தை) தள்ளாமலும், தமது கிருபையை என்னை விட்டு விலக்காமலும் இருந்தார் அவருக்கு ஸ்தோத்திரம் என்கிறார்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, தங்கள் அடிமைத்தனத்தின் நுகம் தாங்க முடியாமல் கர்த்தரை நோக்கி மகா கூக்குரலோடு விண்ணப்பம் பண்ணினார்கள் பலன் கர்த்தர் அவர்கள் விண்ணப்பத்தை கேட்டு, அவர்களுக்காக இறங்கி மோசேவை அழைத்து, மகா அற்புதங்களின் வழியாக தன் ஜனத்தை மீட்டு, பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்திற்கு அனுப்பி குடிவைத்தார். அவர்கள் ஜெபம் அவர்கள் அடிமைத்தின் நுகத்தை முறித்துப் போட்டது.
யாகோபு, அவன் பெயரின் அர்த்தமே ஏமாற்றுக்காரன், தன் சகோதரனின் சொத்துக்களையெல்லாம் ஏமாற்றி அபகரித்துக்கொண்டு ஓடிப்போனவன். ஒரு கட்டத்தில் தன் அண்ணனையே காண திரும்பி வருகிறான், ஆனால் அவனை பார்க்கிற தைரியம் அவனுக்கு இல்லை தன அண்ணன் தன்னை கொன்று போடுவான் என்கிற பயத்தில் நடுநடுங்கிப் போனான். இந்த பயத்திலிருந்து தப்பிக்க அவன் செய்த காரியம் என்ன? ஜெபம். கடவுளை விடவே மாட்டேன் என்று அவருடைய ஆசீர்வாதத்தை பெற கடவுளுடன் போராடி விண்ணப்பம் செய்தான். பலன் கடவுள் அவன் துன்பத்தை மாற்றினார்.
காரணம் யாருடைய ஜெபத்தையும் கர்த்தர் தள்ளாதவர், அவர் முழு உலகின் மேலும் கிருபையுள்ளவர். யாரெல்லாம் அவரை நோக்கி வேண்டிக்கொள்ளுகிரார்களோ அவர்கள் அத்தனை பேருடைய விண்ணப்பத்திற்கும் பலன் தருபவர். எனவே அன்பானவர்களே நம் விண்ணப்பங்கள் இறைவன் சமூகத்தில் வரவேற்கப்படுகின்றன. தைரியமாய் நம் விண்ணப்பங்களை இறைவனுக்கு தெரியப்படுத்தி ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment