என்னங்க? ஜோயலைப் பற்றி கவலையா இருக்குங்க, இஞ்சினியரிங் காலேஜுக்கு அப்பா அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கார்னு சொன்னா நான் கேட்டேனாங்கறான். உங்க அக்கா வேலூர்லந்து C .M .C மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் வாங்கி அனுப்பியிருக்கான்னா அவளையே போடச் சொல்லுங்கறான்.
ஆமாம், ஜோயலை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன்
விருப்பத்தை தெரிந்துக் கொள்வதே கஷ்டமாக இருந்தது . தாத்தா-பாட்டியின் அளவற்ற செல்லம் வேறு. ஆலயத்தில் அழகாக அவன் ஆர்கன் வாசிப்பதால், அவன் தம்பி அவனை இசைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்திடு அண்ணா என்றான். முடியாது என்று முறைக்கிறான்.
சரி சின்னவயசு, நாம்தான் பொறுமையா திசை திருப்ப வேண்டும். குடும்பமாக நாள் முழுதும் யோசித்தோம். ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்து பார்த்தோம். அவனோ சாப்ட்வேர் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. கம்ப்யூட்டரை அக்குவேறு ஆணிவேராக பிரித்து போட்டுவிட்டான். கம்ப்யூட்டர் ட்ரெயினிங் ஏதாவது போயேன் என்றால் அதெல்லாம் வேஸ்ட் என்று சொல்லிவிட்டான்.
ஜோயல் 12 ம் வகுப்பு எழுதி அந்த பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றவன். 1150 /1200 மதிப்பெண் பெற்று அந்த கிராமத்துப் பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் அசத்தியவன். மேத்ஸ்-பையாலஜி விருப்ப பாடமாக எடுத்து அதில் மூழ்கி போனவன்-இப்போது?
ஏப்ரல் மேவாகி, மே ஜூன் ஆகி, நாட்கள் கரைந்தது, அவனோடு படித்து தேர்ச்சிப் பெற்ற அத்தனைப் பெரும் எதோ ஒரு கல்லூரியில் இடம் பிடித்தனர். அவனோ அம்பேல்.
ஜோயலின் அம்மாவுக்கு சட்டென்று தன அண்ணனின் நினைவு வர, தொலைப்பேசி எடுத்து அண்ணனின் எண்ணுக்கு டையல் செய்தாள்.
ஜோயலின் தற்போதைய போக்கு குறித்து மூச்சுவிடாமல் ஒப்படைத்தாள். இடையிடையே அழுதால். அங்கலாய்த்தாள். அவசரப்படுத்தினாள். சுதாகர் தன் தங்கையிடம் ஆதரவாக அன்புடன் பேசினார். உடனே தான் வந்து அவன் "கனவு" என்ன? என்பதை விசாரிப்பதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
ஜோயலின் தாய் மாமா தான் சொன்ன படி இரண்டு நாட்களில் ஜோயல் வீட்டில் நுழைந்தார். அம்மாவுக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. அனைவரும் அவரை அன்புடன் வரவேற்றனர். ஜோயல்தான் அவரை விழுந்து விழுந்து உபசரித்தான்.
அனைவரும் வீட்டின் விசால அறையை அடைந்தனர். சிறிது நேரம் அறையில் அமைதி. அம்மாதான் மௌனத்தை கலைத்தால். அண்ணா உங்க மருமகன் ஜோயல் +2 ல நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கான். ஆனா அதற்கான ஆர்ப்பாட்டம் கொஞ்சமும் இல்ல.
இஞ்சினியரிங் கல்லூரி, மெடிக்கல் கல்லூரி,, கலைக்கல்லூரி, இசைக்கல்லூரி அது இதுன்னு எத்தனையோ அப்ளிகேஷன். எதுக்கும் அசைந்து கொடுக்கலை. கல்லுளிமங்கன் மாதிரி ஆடாம அசையாம கம்முன்னு கெடக்கிறான். கொஞ்சம் நீங்கதான் அவனை ஒப்பேத்தனும்.
மாமா ஜோயலை ஏறிட்டார். ஏலே ஜோ, என்னாலே பெத்தவங்களை இப்படி படுத்தற? நல்ல ஸ்கோர் பண்ணியிருக்க. உங்க பள்ளியிலேயே முதல் மாணவனா வந்திருக்கே. பிறகு என் இந்த மௌனம்? உன் கனவுதான் என்னலே? இங்கிட்டு பாரு, எல்லோரும் இருக்கோம், செரட்டையை ஓடைசது போல பட்டுன்னு உன் பதிலை சொல்லுலே...
அனைவர் கண்களும் அவனையே ஆவலாய் மொய்த்தன. ஜோயல் வாய் திறந்தான். "மாமா எல்லாரும் எத்தனையோ கல்லூரிகளை சொன்னீங்க. ஆனால் நாகர்கோயில் கன்கார்டியா இறையியல் கல்லூரியை மறந்து போனீங்களே மாமா, நான் "ஒன்"இயர் பைபிள் கொர்சுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். நான் போதகராகப் போகிறேன். இறையியல் கல்லூரிதான் என் கனவு. தயவு செய்து யாரும் என் கனவை கலைச்சிடாதீங்க மாமா".
இப்போதுதான் அப்பா தாண்டி குதித்தார். கோர்ஸ் முடியவே ஆறு வருஷம் ஆகும்டா... தேவன் என்னோடிருப்பார். அதுக்கப்புறம் மூணு வருஷம் மாடா உழைக்கனும்டா... தேவன் எனக்கு துணையிருப்பார். அதுக்கப்புறம் சம்பளம் இல்லாமலும், சொற்ப சம்பளத்திலும் எப்படி காலம் தள்ளுவ?...... தேவன் துணையிருப்பார். மாமா பேசினார். "சபாஷ்" சரியான முடிவு. பேதுரு இரவு முழுக்க வலை விரித்தான். பயனில்ல இயேசு ஆண்டவர் வல்லமையால் இரண்டு படகுகள் நிறைய மீனைப் பெற்றான் என்றாலும் அனைத்தையும் விட்டான். ஆண்டவர் பின் சென்றான். அதை தான் என் மருமகன் செய்திருக்கான். ப்ளீஸ், அவன் கனவை நிறைவேற்றுங்க , கலைச்சிடாதீங்க.
ஜோயல் தன கல்லூரிக் கனவு பலித்ததற்காக தேவனை நன்றியுடன் நோக்கினான்.
சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment