அன்பான உள்ளங்களுக்கு காலை நேர வாழ்த்துக்கள், பொழுது புலரும்போதெல்லாம் புது வாழ்வு மலர விரும்புகிறோம். இதோ புது வாழ்வும், ஆசியும் வழங்கும் இறை வார்த்தைகள்.
II நாளாகமம் 15 :4. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
இஸ்ரவேல் தேசத்தில் ஆசா என்றொரு அரசன் இருந்தான், அவன் புதிதாய் அரியணை ஏறிய சமயமதில் பக்கத்து நாடாம் எத்தியோப்பியாவிலிருந்து, செராகு என்பவன் தலைமையில் பத்துலட்சம் வீரர்களும், முன்னூறு தேர்களும், ஆசாவை எதிர்த்து புறப்பட்டன. ஆசா கடவுளை நாடுவதையன்றி வேறு வழி அறியவில்லை, இவ்வளவு பெரும் படை ஜெயிக்க இறைவன் துணை தான் முக்கியம் என உணர்ந்து இறைவனடி சேர்ந்தான், ஜெபித்தான்.
இறைவா நின் துணை எமக்கு வேண்டும் என மன்றாடினான், பலன் இறைவன் துணை நின்றார், துவம்சம் செய்தான் எதிரி படையை, இனி மீண்டு எழவே வாய்ப்பில்லாத படி. இக்காட்சி கண்ட அன்றைய இஸ்ரவேலின் தீர்க்கன் அசரியா சொன்ன வார்த்தைகளே இக்காலை நமக்கு அருள்வாக்கு, இத்திருக் காட்சியை, மாபெரும் வெற்றியை மிக தெளிவாக ஒரு வாசகத்தில் குறிப்பிட்டு இறைவனை மகிமைபடுத்தி, நமக்கும் வருமுன் காக்கும் வழி கூறுகிறார்.
அவர் சொன்ன வாசகம் இதுதான், தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவரை தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
ஆம் ஆசா என்ற அரசன் ஜெயிக்க வாய்ப்பில்லா பெரும்படை வந்த இக்கட்டு நேரத்தில் செய்வதறியா திகைக்காமல், இறைவன் தஞ்சம் ஓடினான், அவர் அவனுக்கு வெளிப்பட்டார் அவன் தேடிய வெற்றியாக.
அன்பானவர்களே இக்காலை நமக்கு எவ்வளவு போராட்டம் இருப்பினும் அவற்றுள் வெற்றி வேண்டுமா? நம் வாழ்வின் சவால்களில் வெற்றி வேண்டுமா? எதிரிகளின் சூழ்ச்சியினின்று வெற்றி வேண்டுமா? வருவீர் நமது மெய் தேவனாம் இயேசுவின் திருவடி. அவர் வருவார் நாம் தேடும் வெற்றியாக, சுகமும் அருளும் உங்களை தொடர வாழ்த்துகிறேன். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
No comments:
Post a Comment