அன்பு தோழி மீண்டும் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பெண்கள் சிரிக்கும்போது அன்பு மலர் மணம் வீச வேண்டும். கருணை என்னும் குணம் கருத்தை நிறைக்க வேண்டும்
தரும சிந்தனையே இல்லாத ஒரு ஜமீந்தாருக்கு கருணையே உருவான ஒரு மனைவி இருந்தாளாம், தண்ணீர் தட்டுப்பாட்டினால் தவித்த அந்த ஊர் மக்களுக்கு, ஜமீந்தாரே சொந்த செலவில் கிணறு வெட்டி தந்திருக்க வேண்டும், ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. பொறுத்திருந்து பார்த்த மனைவி, ஒரு தெளிவுக்கு வந்தாள், ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து, அதில் சிறிய பள்ளம் தோண்டி, அதில் மேலாக சிறிது (பெட்ரோல்) எண்ணெய் ஊற்றி ஜமீன்தாரை அழைத்து அந்த இடத்தைக் காட்டி, இங்கு தோண்டினால் எண்ணெய் கிணறு கிடைக்கும் போல என்று கூறினாள், இதைக் கேட்ட ஜமீன்தாரும் ஆட்களை அழைத்து, தன் சொந்த செலவிலேயே கிணறு தோண்ட ஏற்பாடு செய்தார். சிறிது ஆழத்திலேயே சுத்தமான குடி நீர் கிடைத்தது. ஜமீன்தார் பெரும் ஏமாற்றத்தை அடைந்தாலும், ஊரார் அவரை புகழ்வதையும், வாயார வாழ்த்துவதையும் கண்டு மனம் மாற்றம் அடைந்தாராம்.
அன்புத்தோழி வாழுதல் என்பது எல்லாருக்கும் பொதுவானது, ஆனால் அதை எப்படி வாழ்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது.
மல்லிகை தோட்டத்தை கடக்கும் காற்று மணக்கின்றது, சாக்கடையை கடக்கும் காற்று நாறுகிறது, நாம் நமது நற்குணங்களால் கடவுளின் நாம மகிமைக்கென மணம் பரப்புவோம். கடவுள் நமக்கு தந்திருப்பதைக் கொண்டு, மகிழ்ச்சியாய் வாழ கற்றுக் கொள்வோம். கடவுள் நமக்கு சிறப்பான பல காரியங்களை தந்திருக்க, அதை நினைக்காமல், இல்லாத காரியங்களுக்காய் புலம்பி திரிவதில் அர்த்தம் இல்லை.
அன்புத்தோழி! நம் வீட்டில், அலுவலகத்தில், ஊரில், இப்படி எந்தெந்த இடத்திலானாலும் சரி.... என்னென்ன மாற்றங்கள் நடந்தாலும் சரி....... நாம் நினைத்தால் சோதனைகளைக் கூட சாதனைகளாய் மாற்றிக் கொள்ள முடியும். சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு சீரிய சிந்தனைகளை விதைக்க முடியும்.
உதாரணத்திற்கு பென்சிலையே அடுத்துக் கொள்வோம், செதுக்குதல் என்பதோ, சீவுதல் என்பதோ வலி நிறைந்ததுதான், ஆனால் பென்சில் என்பது சீவப்பட்டால் தான் அதன் கூர்முனை கிடைக்கும். அதுதான் பயன்தரக் கூடியது..
தோழி பணம் செல்வம் வசதி வாய்ப்புகள்... இவையெல்லாம் வெளிப்புறம்.
மகிழ்ச்சி சந்தோஷம் இதெல்லாம் உட்புறம்... என்னும் அர்த்தத்தில் யோசித்து பார்ப்போம்.
மன மகிழ்ச்சி முக மலர்ச்சியை தரும், மனோ துக்கத்தினாலே ஆவி முறிந்துபோம் நீதிமொழிகள்.15 ;13
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். பிரசங்கி.11 :15
அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........
No comments:
Post a Comment