WORD OF GOD

WORD OF GOD

Thursday, May 19, 2011

மகிழ்ச்சியான குடும்பம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்களை இந்த காலை வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை சங்கீதம்.91 :10 

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது


குடும்ப வாழ்வு மிக முக்கியமானது, நமது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருந்தால் தான் நாம் நினைத்ததை  இந்த உலகில் சாதிக்க முடியும், எனவே மன நிறைவான குடும்ப வாழ்க்கை தான் நமது தேடலாக இருக்கிறது. மன நிறைவான சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த குடும்ப வாழ்க்கை அமைய இரண்டு விஷயங்கள்   நமது குடும்பத்தை அண்டக் கூடாது.

ஒன்று பொல்லாப்பு, அதாவது நம் ஊர்களில் பெரியவர்கள் அடுத்தவன் பொல்லாப்பு நமக்கு வேணாம் சாமி என்பார்கள், அதாவது பொல்லாப்பு என்பது அடுத்தவர்கள் நமக்கு எதிராக சிந்திக்கிற, செய்கிற தீங்குகளாகும். இப்போதெல்லாம் அடுத்தவன் வாழ்க்கை நலமாக அமைய ஆசைப்படுபவர்கள் யாருமே இல்லை, மாறாக அடுத்தவன் வாழ்வை  கெடுப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள், ஒருவனுடைய முன்னேற்றத்தைக் கண்டு பாராட்டுபவர்களைவிட, இவனுக்கெல்லாம் இந்த வாழ்க்கையா? என்று பொறாமை படுபவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். நினைப்பதோடு நின்றால்  பரவாயில்லை, கெடுப்பதற்கென்று திட்டம் வகுத்து செயல் படுபவர்கள் இருக்கிறார்கள் இவர்களிலிருந்து நம் குடும்பங்கள் தப்பிக்க வேண்டும்.

இரண்டாவது, வாதை. வாதை என்றால் நோய், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவோம், காரணம் எப்போதெல்லாம் நாம் நோய்களை சந்திக்கிறோமோ அப்போதெல்லாம் அனேக இழப்புகளை சந்திக்கிறோம், நம்முடைய வேலை பாதிக்கிறது, நம்மை கவனிக்க அடுத்தவர்கள் பணிகளும் பாதிக்கிறது, பணம் செலவாகிறது, நாம் முடங்கி போகிறோம், குணமாக்க கடினமான புற்று நோய் போன்ற வியாதிகளோடு போராடுகிறவர்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

இவை இரண்டையும் நாம் வென்றால் நம் வாழ்வை நாம் வென்றுவிடலாம். வெல்ல முடியுமா? அதற்கான வழியை தான் இந்த தியான பகுதி நமக்கு கற்று தருகிறது. உலகின் ஒளியாம் ஆண்டவரை அடைக்கலமாக ஏற்றுக்கொண்டால், அதாவது இயேசு கிறிஸ்துதான் என் வாழ்வின் ஒளி என்று ஏற்றுக்கொண்டால் இவை இரண்டும் நம்மை அணுகாது என்று சங்கீதக்காரன் நமக்கு தெரிவிக்கிறார். அதாவது, வியாதியே சந்திக்காத உடலையோ, தீங்கே வராத குடும்ப வாழ்வையோ  அல்ல, அவைகள் நம்மை அணுகி மேற்கொள்ளாத வாழ்வை கடவுள் நமக்கு தந்தருள்வார். அவரில் நம்பிக்கை வைத்து இந்த மேலான வாழ்வை அடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக. ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews