அன்பான என் உள்ளம் நிறைந்த இந்த தளத்தின் வாசகர்களே. திருமணம் என்றாலே, நமது வீடுகளில் திருவிழாதான். ஒரு வீட்டில் திருமண பேச்சுகள் துவங்கியதும், வீடே கலகலப்பாகிவிடும், பெண்பார்ப்பது, வீடு பார்ப்பது, கை நனைப்பது, நிச்சயதார்த்தம் என தினந்தோறும் ஒரு விழா நடக்கும், அதுவும் பெண் வீட்டில் இன்னும் சந்தோஷம் தாண்டவமாடும், எவ்வளவோ செலவுகள் பெண்ணின் தந்தையின் பணத்தை கரைத்துக் கொண்டிருக்கும், பத்திரிகை அடிப்பது, புடவை எடுப்பது, மண்டபம் பார்ப்பது, பத்திரிக்கைகளை கொடுப்பது என வேலைகள் தலைக்கு மேல் நின்று ஓய்வேடுக்கவிடாமல் துரத்தும்.
ஒருவழியாக திருமணம் முடிந்து பெண்ணை கணவனோடு அனுப்புகிற நேரத்தில் பெண் வீடே சோகமாகிவிடும், தாயின் கண்களும், மணமகளின் கண்களும், குளமாகிவிடும். தந்தை வருகிற கண்ணீரை மறைத்து அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். ஏன் இந்த கண்ணீர் ஏன் இந்த சோகம் இதற்காகத்தானே இத்தனை நாள் உழைத்தார்கள், இந்த நாளை காணத்தானே அத்தனை பாரத்தையும் சுமந்தார்கள், உண்மைதான் ஆனால் இருபது வருடங்கள் வீட்டில் பிறந்து தவழ்ந்து வளர்ந்து, வாழ்ந்த இனிமையான மகளை பிரிவது என்பது எவ்வளவு கொடுமை. திருமணமும் மகளுக்கு கிடைத்திருக்கிற வாழ்வும் சந்தோஷம் தான் ஆனால் இந்த பிரிவு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், இது சரி என்று புத்திக்கு எட்டினாலும், மனதுக்கு எட்டுவதில்லை காரணம் நேசிப்பவர்களை பிரிவதை போல ஒரு கொடுமை இந்த உலகத்தில் இல்லை.
இதே போன்றதொரு நெகிழ்ச்சியான அனுபவம்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை விட்டு பரலோகத்திற்கு போன சம்பவம். காரணம் இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த கால கட்டத்தில், சீடர்களோடும், தான் சந்தித்த மனிதர்களோடும், தாயின் அன்பை பொழிந்தவர். அவர்களின் அத்துணை தேவைகளையும் நிறைவேற்றி, எப்படி வாழ வேண்டும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தந்து ஒரு நல்ல தகப்பனாக வழி நடத்தினவர். உயிர்த்தெழுந்த பிறகு கூட அவர்களை கண்டு அவர்களுக்கு தைரியம் சொல்லி இந்த உலகில் மாற்றம் கொண்டுவர அவர்களை தயார் படுத்தினவர். ஆனால் என்ன செய்வது நாற்பது நாள் முடிந்துவிட்டது, போய்தான் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
சீடர்களெல்லாம் ஏக்கத்தோடு வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் மேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பரலோகத்தை சேர்ந்தே விட்டார். ஏன் போக வேண்டும் ஆண்டவர்? இன்னும் இருந்து இந்த உலகில் மாற்றங்களை கொண்டுவரலாமே, தன்னை நம்பினவர்களை இப்படியா நிர்கதியாக விட்டுவிட்டு போவது? அனால் அவர் போனது கூட தன்னை நம்பியவர்களுக்காகத்தான்.
ஆம் அவர் பரலோகத்திருக்கு போனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்
இருக்கிறது. ஒன்று யோவான் சுவிசேஷம், 14 ம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களை வாசித்து பாருங்கள், அவர் போனது பரலோகத்தில் நமக்கென்று ஒரு இடத்தை ஆயத்தம் செய்ய. நாம் இந்த உலக வாழ்வை விட்டு அவர் ராஜ்ஜியத்தில் பங்கு பெற இடத்தை ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். இரண்டாவது முக்கியமான காரணம் அதே அதிகாரம் 16 வது வசனத்தில் உள்ளது, அவர் போனால் தான் பரிசுத்தாவியானவரை அனுப்புவார். அவர்தான் நம்மை பெலப்படுத்துகிறவர். இவ்வுலகின் அத்துணை தீமைகளிலும், துன்பங்களிலும், வாழ பலன் தருபவர்.
அதை தான் அப்போஸ்தல நடபடிகள், முதல் அதிகாரம் 8 வது வசனத்தில் ஆண்டவர் சொல்லுகிறார், பரிசுத்தாவியானவர் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள். அன்பானவர்களே அவர் வந்தது நமக்காக வாழ்ந்தது நமக்காக இப்போது அவர் போயிருப்பது நமக்காக. அவர் திரும்ப வரப்போகிறார் அதுவும் நமக்காக. இவ்வளவும் இதற்கு மேலும் நாம் நினையாத வகையில் நமக்கு மேனமைகளையும் தந்து வருகிறார்.
அதே நேரத்தில் நம்மிடத்தில் அவர் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் உண்டு நாம் அவருக்கு சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்பதே. நம்முடைய வீட்டில், ஊரில், நாம் சந்திக்கும் மனிதர்களோடு அவரை சாட்சியிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர்தானே நல்லவர் அவரை மற்றவர்களுக்கு சொல்லலாமே, அவர்களும் இந்த மேன்மையை அனுபவிக்க உதவலாமே. தொடர்ந்து சாட்சியிட்டு அவரது மெய் சாட்சிகளாய் வாழ பரிசுத்தாவியானவர் நமக்கு பலன் தருவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment