கிறிஸ்துவுக்குள் அன்பான எனதருமை விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட வசனம். மாற்கு.1 :31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
அன்பானவர்களே, நாம் நம்முடைய ஆண்டவரை ஆராதிக்கிற ஆலயம் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம், நம்முடைய ஊரிலேயே உயரமான கோபுரம் கொண்டதாகவும், அழகானதாகவும் இருக்க ஆசைப்படுகிறோம், அதற்காக எவ்வளவு பாடுபட்டேனும் பணத்தை திரட்டி கட்டி முடிக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இப்படி உயரமான, அழகான கட்டிடங்களில் அவர் வாழவே இல்லை. ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு, நரிகளுக்கு குழிகளுண்டு, மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்று தன் நிலையை தானே தெளிவாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அவரை யார் வீட்டிற்கு வரும்படி அழைத்தாலும் உடனே அவர்கள் வீட்டிற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் போயிருக்கிறார். நம்முடைய தியான பகுதியிலும் ஆண்டவர் சீமோனுடைய வீட்டில் பிரவேசித்தார், அப்போது சீமோனின் மாமி சுகவீனமாய் இருந்த செய்தியை அறிகிறார். உடனே அவள் கையை பிடித்து அவளை தூக்கிவிட்டு, அவள் சுகவீனத்தை நீக்கினார். இதன் மூலம் ஒரு பேருண்மையை நாம் புரிந்துக் கொள்ளலாம், அவர் யார் வீட்டிற்கு போகிறாரோ, அந்த வீட்டில் இருக்கும் துன்பத்தை உடனே போக்கும் மனம் கொண்டவராக இருக்கிறார்.
அவர் காப்பர் நகூம் என்ற ஊருக்கு வந்தார், அவ்வூரில் இருந்த செல்வந்தன் ஒருவனுடைய வீட்டு வேலைக்காரன் சுகவீனமாயிருந்தான். அவன் சிலரை ஆண்டவரிடம் அனுப்பி அவன் சுகமாக வேண்டிக் கொண்டான். ஆண்டவரோ அவன் வீட்டிற்கு போக ஆயத்தமானார், இதை அறிந்த அந்த செல்வந்தன் தன் வேலைக்காரர்களை அனுப்பி ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு வர வேண்டாம் நீர் வர நான் தகுதியானவனல்ல, ஒரு வார்த்தை சொல்லும் என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று வேண்டிக் கொண்டான். ஆண்டவர் அவன் விசுவாசத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, அவனை பாராட்டினார், அதே நேரத்தில் வீட்டிலிருந்த அவன் வேலைக்காரனை சுகமாக்கினார்.
அந்த ஆண்டவர் நம்மை பார்த்து சொல்லுகிற விஷயம் இதோ நான் உங்கள் வீட்டு வாசற்படியில் நிற்கிறேன் என்கிறார். அன்பானவர்களே நம் வீட்டில் அவர் பிரவேசித்தால் நம் அத்துணை பிரச்சினைகளும் நீங்கும், அவரை வரவேற்போமா? ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment