WORD OF GOD

WORD OF GOD

Monday, June 27, 2011

இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள்

சங்கீதம்.28 :6 -7 

6. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.


7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

சந்தோஷம் என்பது மனித வாழ்வின் அடிப்படை தேடல். அனால் எளிதில் சந்தோஷம் கிடைத்துவிடுவதில்லை. காரணம் துன்பமும் போராட்டமும் தான் இன்றைய வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இந்த மாதம் புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. ஒவ்வொரு  பெற்றோரும் கண்ணீரோடு போராடி வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கட்ட இரத்த வேர்வையோடு பணத்தை புரட்டி வருகின்றனர்.

கல்வி ஏழை பிள்ளைகளுக்கு எட்டா கனியாக என்றைக்கோ மாறி இன்று ஏழை பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது. பெற்றோரும் மாணவர்களும் எவ்வளவு போராடினாலும், இவர்கள் குரல் இன்னும் அரசாங்கத்தின்  வாசல்களை திறக்கவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது நிரூபணமாகி வருகிறது. ஆனால் நம் குரலை, நம் விண்ணப்பத்தை, கேட்க ஆவலோடு ஒருவர் காத்திருக்கிறார்.

என் நாமத்தில் நீங்கள் எதை கேட்டாலும் பெறுவீர்கள் என்று உத்தரவாதமும் கொடுத்திருக்கிறார். அவர்தான் நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து. கேட்பாரா? கேட்டால் இந்த பொல்லாத உலகத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? நம் நிலை மாறிவிடுமா? இதென்ன மந்திரமா? என்ற கேள்விகள் உள்ளத்தில் எழுகிறதா? இது மந்திரமல்ல வாழ்க்கை அனுபவம்.

நம்முடைய தியானப் பகுதியில் ஒரு பக்திமான்  தன் அனுபவத்தை குறிப்பிடுகிறார். என்னை சுற்றி துன்மார்க்கரும் பொல்லாதவர்களும் இருக்கிறார்கள் நீர் என் ஜெபத்தை கேட்காவிட்டால் நான் குழியில் இறங்குவதற்கு சமமாவேன் என்கிறார். அதாவது பிணத்திற்கு சமமாவேன் என்கிறார். ஆனால் 6  வது வசனத்தில் கர்த்தர் என் விண்ணப்பத்தை கேட்டார் என்று வாக்குரைக்கிறார்.

அடுத்த வசனத்தில் கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். என்கிறார். எப்படி இந்த மாற்றம் வந்தது? இதை விவரிக்க முடியாது அனுபவித்து பார்த்தால் இந்த மேன்மை புரியும்.

அன்பானவர்களே, இக்கட்டில் ஆறுதலளிக்கும், துன்பத்தில் பலனளிக்கும் இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள். பெற்ற நன்மையை அனுபவத்தை சாட்சியாய் எனக்கு எழுதி அநேகருக்கு அறிவித்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews