அன்பான உடன் விசுவாசிகளே, நாயக்கனேரியில் ஒரு அற்புதம் என்ற பதிவுக்கு கடுமையான எதிர்ப்பை யாரோ ஒரு சகோதரர் தெறிவித்து, மிக கேவலமாக, வெளியிடுவதற்கு தகுதியற்ற வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவருக்கு நான் என்ன சொல்வதென தெரியவில்லை.
நான், என் நம்பிக்கையை பேசுகிறேன், யார் மனதையும் புண் படுத்தும் வகையிலோ, எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையிலோ இதுவரை எந்த பதிவையும் வெளியிடவில்லை. நானும் நூற்றுக்கணக்கான மக்களும் தங்கள் கண்களால் கண்டதை எழுதினேன். அது ஏன் உங்களை பாதிக்கிறது? அதை ஏன் தரக்குறைவாக விமர்சிக்கிறீர்கள்? நாகரீகமில்லாத வார்த்தைகளில் ஏன் என்னை கேவலப்படுத்துகிறீர்கள்?
அதுதான் உங்கள் சந்தோஷமா? அடுத்தவர் மனதை புண்படுத்துவதும், அடுத்தவர் நம்பிக்கையை கேவலப்படுத்துவதும்தான் உங்கள் கொள்கையா? இந்த பதிவிட என் கரங்கள் நடுங்குகிறது. உங்கள் மனம் என் வார்த்தைகளால் புண்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்கள் எப்படி இவ்வளவு துணிகரமாய் உங்களுக்கு அறிமுகமில்லாத என்னையும் என் நம்பிக்கையையும் கேவலப்படுத்துகிறீர்கள்?
இயேசுவை ஆண்டவராய் நீங்கள் நம்பாமல் இருக்கலாம், அது உங்கள் நம்பிக்கை அதை சரி என்றோ தவறு என்றோ நான் விமர்சிக்கவே உரிமை இல்லாத போது உங்கள் நம்பிக்கையை கேவலப்படுத்த முடியுமோ? அனால் நீங்கள் அதைதான் செய்கிறீர்கள்.
உங்களுக்கு நான் இதுவரை என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த என் நம்பிக்கையை, இதுவரை என் குடும்பத்தினருக்கு கூட தெரியாத ஒரு விஷயத்தை உங்களுக்காக இப்போது அதை வெளிப்படுத்துகிறேன். நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன் ஆனால் நான் விடலை பருவத்தில் கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்றவன். விடுதலை பத்திரிக்கையை நூலகத்தில் தேடி சென்று படித்து, என் நண்பர்களிடம் கடவுள் மறுப்பு சிந்தாத்தத்தை 13 வயதிலேயே பரப்பினவன்.
கடவுள், புரட்சிக்காரன் என்ற வேலு பிரபாகரனின் கடவுள் மறுப்பு படங்களை தேடி சென்று பார்த்தவன், நான் மட்டுமல்ல என் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு போய் அவர்களையும் பார்க்க வைத்தவன்.
கடவுள் இல்லை, இல்லை என்பதினால் நான் என்ன கடவுளுக்கு விரோதியா? ஏழைகளை காப்பாற்றும் அநீதிகளை தட்டி கேட்கும் ஒரு கடவுள் இல்லையே என்பதுதான் என் கவலை என்று வேலு பிரபாகரன் பேசுவதை விசிலடித்து ரசித்தவன். இயேசுவை ஒரு சராசரி மனிதனாக கூட அப்போது நான் ஏற்றுக் கொண்டதில்லை.
என் நண்பர்கள் அதற்கு சாட்சிகள், என் நண்பன், ஜோ
சாம் ஒரு கிறிஸ்தவன், என்னுடைய இன்னொரு நண்பன் பிரபாகரன் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவன் இருவரையும் ஒரு சேர கடுமையாக விமர்சிப்பேன். ஆனால் என் பெற்றோரின் கடுமையான வற்புறுத்தலால் இறையியல் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் கூட கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரமாக இருந்தவன், என்னோடு பயின்ற என் நெருங்கிய நண்பர்களான அருட்திரு.மில்டன், அருட்திரு.கிளாட்சன் போன்றோர்கள் இதை நன்கு அறிவார்கள்.
ஆனால் கால ஓட்டத்தில் என் நம்பிக்கையில் சில மாறுதல்கள் உண்டானது. காரணம் பைபிள் (வேதாகமம்). அதில் இயேசுவின் வாழ்க்கை எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவரை முதலில் நான் ஒரு போராளியாக தான் ஏற்றுக் கொண்டேன். அவரை போல சமூக அக்கறையோடு பேசின சமூக போராளிகள் இன்று வரை உலகத்தில் தோன்றவில்லை.
அதற்கு ஒரே ஒரு உதாரணம், அவர் தான் முதலில் எல்லா பணியாளனுக்கும் சமமான கூலி கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர். மத்தேயு.20:1 முதல் 15 வரை வாசித்து பாருங்கள். மனிதனின் உழைப்பு திறன் மாறாலாம ஆனால் அவர்களுடைய தேவைகள் சமம் என்பதையும், அனைவருக்கும், ஒரே சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதையும் உங்களுக்காக எனக்காக சொல்லி வைத்தவர்.
ஏழைகளை, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களை, நோயாளிகளை ஏன் குற்றவாளிகளை கூட தனது நண்பர்கள் என்று சமத்துவ உலகிற்கு முதல் அடி வைத்தவர். அவரிடமிருந்துதான் அத்துணை புரட்சிகளும் துவங்கியது. எனவேதான் முதலில் அவரை போராளியாக அங்கீகரித்தேன். சரி ஒரு நல்லவரின் நல்ல கொள்கைகளை மக்களிடம் பரப்ப நல்ல வாய்ப்பாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் தொடர்ந்து கல்வியை தொடர்ந்தேன். இது யாருக்கும் தெரியாது.
அந்த காரணத்திற்காகத்தான், போதக பணியையும் செய்தேன். என் பிரசங்கங்களை கேட்டவர்கள் அனைவரும் இதை அறிவர். ஆனால் இதுவும் நிலைக்கவில்லை, நான் பணி துவங்கி இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் ஆம்பூர் அருகே உள்ள சான்றோர் குப்பத்தில் மாலை ஆராதனை முடித்துவிட்டு, விண்ணமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகே வரும்போது சரியாக 7 மணியளவில் என் பின்னால் வந்த ஒரு கார் வேகமாக என் இரு சக்கர வாகனம் மீது மோதியது, ஒரே நொடிதான் 10 அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டேன், ஊரே ஓடி வந்தது, அவ்வளவு பெரிய சப்தம் கேட்டது. எல்லாரும் சேர்ந்து என்னை தூக்கினார்கள், என் இரு சக்கர வாகனம் (பஜாஜ் பைக்) கடுமையாக உருக்குலைந்திருந்தது பயன்படுத்த இயலாத அளவுக்கு.
ஆனால் நானோ முழு சுய நினைவோடு இருந்தேன். என்னை அந்த ஊர் மக்கள் கடவுளை போல கவனித்தார்கள், எனக்கு எங்கெல்லாம் காயமிருக்கிறது என தேடினார்கள், ஆனால் உண்மையென்ன தெரியுமா? எனக்கு சில கீரல்களை தவிர காயமில்லை. அதை பார்த்த அங்கே இருந்து என்னை பராமரித்த தாய்மார்கள் சொன்னார்கள், இயேசுவின் கிருபையால் தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்று. சத்தம் கேட்டபோது யாரோ செத்தார்கள் என்றுதான் ஓடி வந்தோம், ஆனால் இப்படி தெளிவாக உங்களை காணும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள்.
சத்தியமாக சொல்லுகிறேன் அன்றுதான் முதல் முதல் இயேசுவை போராளி என்பதையும் தாண்டி கடவுளாக உணர ஆரம்பித்தேன். அன்று முதல் என் பாதையில் அனேக மாற்றங்கள். என் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டாயிரம் ரூபாய் அது கூட இரண்டு மாதங்களாய் தான் வாங்குகிறேன், அதை அப்படியே ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பயன்படுத்ததான் இந்த சிறுவர் நிகழ்ச்சியை நடத்துகிறேன். இதுவரை எனக்கு மிகவும் நெருங்கியவர்கள் செய்த உதவியிலும் என் உழைப்பிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்.
இனி இந்த இயேசுதான் என் கடவுள். அவரிடமிருந்துதான் இந்த அன்பை நான் கற்றுகொண்டேன். நான் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவர்களில் நடக்கும் தவறுகளை கூட கடுமையாக விமர்சிப்பவன், திருச்சபை எங்கே போகிறது என்ற என் பதிவை இந்த லின்கில் வாசித்து பாருங்கள்.
http://jesusblessings.blogspot.com/2011/05/blog-post.html
சரி நண்பரே, உங்கள் சவாலை நான் ஏற்கெனவே ஜெயித்துவிட்டேன் எனக்கு நடந்த விபத்தில். ஆனால் அதுவல்ல விஷம்தான் நீ குடிக்க வேண்டுமென்றால், மன்னிக்கவும் நான் வெறி பிடித்தவனல்ல, நான் மதவாதியுமல்ல, என் நம்பிக்கையை பேசுகிறவன்.
இதுவரை நான் சொன்னவைகளில் உங்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏதாகிலும் இருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் உணர்வுள்ளவன், வெறிபிடித்தவனல்ல. நான் சொன்னவைகளில் ஏதாகிலும் சந்தேகங்கள் இருக்குமாயின், வேலூர் மாவட்டம், விண்ணமங்கலம் என்ற கிராமத்தில் எனக்கே தெரியாமல் வந்து விசாரித்து பாருங்கள்.
உங்கள் எதிர்ப்பு கூட என்னை இன்னும் பக்குவப்படுத்துவதாகவே தெரிகிறது அதற்காகவும் உங்களுக்கு என் நன்றி. உங்கள் கருத்துரைகளை நாகரீகம் கருதி அழித்துவிட்டேன் ஆனால் அவைகள் என் இமெயிலில் அப்படியே உள்ளன. நீங்கள் கருத்துரைகளை உங்கள் அடையாளத்தோடே பகிருங்கள். உங்கள் பெயரை, வெளியிடுங்கள். நான் உங்கள் சகோதரன்தான், நானும் தமிழன் தான். நன்றி.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.