WORD OF GOD

WORD OF GOD

Sunday, May 1, 2011

திருச்சபை எங்கே போகிறது???

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் ஸ்தோத்திரங்கள். இந்த ஞாயிற்றுக் கிழமைக்குரிய தியான  வசனம். அப்போஸ்தலர்.2 :42 -47 .

(வேதாகமம் எடுத்து தயவு செய்து வாசியுங்கள்)


 
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவின் சீடர்கள் புது பலத்துடன் தங்கள் ஊழியத்தை ஆரம்பித்தனர், வீட்டை விட்டு வெளியே வர பயந்து பூட்டிக்கொண்டு முடங்கி இருந்தவர்கள், உலகுக்குள் வந்து உலகத்தை கலக்கினார்கள்.

அதன் பலன் மிக வேகமாக திருச்சபை வளர ஆரம்பித்தது, அப்போஸ்தலர்களின் ஊழியத்தை கடவுள் அபரிமிதமாய் ஆசீர்வதித்தார். விசுவாசிகள் பெருக ஆரம்பித்தவுடன், திருச்சபை ஊழியம் துவங்கியது. எந்த அளவுக்கு வேகமாய் திருச்சபை அதே அளவுக்கு வேகமாய் எதிர்ப்புகளும் வளர ஆரம்பித்தது. இந்த எதிர்ப்புகளின் மத்தியில் இவர்களது வாழ்க்கை, எதிர்ப்பு சக்திகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.

43  வது வசனம் கூறுகிறது, எல்லாருக்கும் பயமுண்டானது, இவர்களை கண்டவர்கள் நடுங்கிப் போனார்கள். இவர்களை எதிர்க்கவும் தொடவும் நடுங்கினார்கள், காரணம் என்ன?

ஐந்து  காரணங்களை நம்முடைய தியான பகுதியில் காணலாம். ஒவ்வொரு திருச்சபையும் தெரிந்துக்கொள்ள வேண்டிய, உடனடியாக செயல் படுத்த வேண்டிய காரணங்கள் அவை.

1 .உபதேசத்தில் தரிந்திருந்தார்கள்.

அப்போஸ்தலர்கள் கூறிய கடவுளுடைய வார்த்தையில் தரித்திருந்தார்கள். அதாவது கடவுளுடைய வார்த்தையை அசட்டை செய்யாமல், பயபக்தியோடு, கேட்டு அதன்படி நடந்து வந்தார்கள், எனவேதான் உபதேசத்தை கேட்டார்கள் என்று சொல்லாமல், தரித்திருந்தார்கள் என்று வசனம் தெளிவாக கூறுகிறது.

2 .அந்நியோன்யத்தில் தரித்திருந்தார்கள்.

ஒவ்வொரு விசுவாசிக்கும் அன்னியோன்ய உறவு இருந்தது, ஒருவரையொருவர், முழுமனதோடு ஏற்றுக்கொண்டு பிரிவில்லா ஐக்கியத்தில் தரித்திருந்தார்கள்.

3 .அப்பம் பிட்குதலில் தரித்திருந்தார்கள்.

கிறிஸ்துவின் சரீரத்தை சுவீகரிக்கும் திருவிருந்தில் தரித்திருந்தார்கள். 
வெறும் சடங்காக அல்ல  பாவ மன்னிப்பின் நிச்சயத்தோடு, பயபக்தியோடு, நடுக்கத்தோடு, பாவி என்ற உணர்வோடு பங்குப்பெற்று வந்தார்கள்.

4 .ஜெபத்தில் தரித்திருந்தார்கள்.

ஒவ்வொரு மணித்துளியும் ஜெப வீரர்களாய் தங்கள் வாழ்வை நடத்தினர். ஜெபம் மறவாத திருச்சபையாக வளர்ந்தார்கள்.

5 .கபடமில்லாத இருதயத்தோடு வாழ்ந்தார்கள்.

பொய், களவு, ஏமாற்றும் எண்ணம் இல்லாத, கபடற்ற இருதயம் உள்ளவர்களாய் வாழ்ந்தார்கள்.

இவை தான் உலகை அவர்கள் அச்சுறுத்திய வாழ்க்கை. இன்றைக்கு நம்முடைய திருச்சபைகளில் இந்த வாழ்க்கை இருக்கிறதா?

கடவுளுடைய வார்த்தையை கேட்கிற நேரத்தில், எத்தனை பேர் சுகமாய் தூங்கிக் கொண்டிருக்கிறோம்? எத்தனை பேர் செல் போனில் பேசிக்கொண்டிருக்கிறோம்? எத்தனை பேர் பக்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம், எத்தனை பேர் பிரசங்கம் முடிந்த பிறகு ஆலயத்திற்கு வருகிறோம்? சில போதகர்கள் பிரசங்க மேடையை தங்கள்  புகழ் சொல்லும் இடமாகவே மாற்றிவிடுகின்றனர்.  எப்படி நம் வாழ்வும்  திருச்சபையும் உயர்வு பெறும்?
அன்னியோன்யம் சொல்லவே வேண்டாம் திருச்சபைகளெல்லாம், குஸ்தி களமாக மாறி வருகிறது, ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டும், ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும், திருச்சபையில் பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறோம். கோஷ்டிகள் இல்லாத சபைகளே இல்லை என்கிற அளவுக்கு, பதவிக்காக, பணத்திற்காக, திருச்சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தை குத்தி கூறு போட்டுக் கொண்டிருக்கிறோம். எப்படி நம் வாழ்வும், திருச்சபையும் உயர்வு பெறும்?

அப்பம் பிட்குதல், ஐயோ அந்த பாதகத்தை சொல்லவே வேண்டாம், திருச்சபையில் அங்கத்தினாராக இருக்கிறதற்கு  ஒரு வழியாக அதை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். பாவ அறிக்கையே சொல்லாமல் பங்கு பெறுகிற கயமை  கூட்டமாக மாறிவிட்டோம். உணர்வு இல்லாமல், எதோ பேஷன் ஷோவுக்கு வருவதை போல வருபவர்கள் எத்தனைபேர்? அவர் நமக்காக தன் சரீரத்தை கிழித்துக் கொடுத்திருக்கிறார் நாமோ, பெருமைக்காக பங்கு பெறுகிறோம், 1  கொரிந்தியர்.11  ம் அதிகாரத்தில் பவுல் ஆக்கினை தீர்ப்பு வரும் என்று சொன்ன வசனம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எப்படி நம் வாழ்வும் திருச்சபையும் உயர்வு பெறும்?

ஜெபம் சிலருக்கு பெருமைக்காக பயன்படுகிறது. தங்கள் மொழி வளத்தை மற்றவர்களுக்கு காட்டவும், மற்றவர்கள் பாராட்டவும் நம்மில் எத்தனை பேர் ஜெபிக்கிறோம்? ஜெபம் செய்ய வெட்கப்படுவது அதைவிட மோசம். தனி ஜெபம் என்றால் என்ன என்பதே தெரியாத அளவுக்கு காலம் மாறிவிட்டது. ஜெபம் செய்ய நேரம் இல்லை என்பது சிலருக்கு பெருமை. எப்படி நம் வாழ்வும் திருச்சபையும் உயர்வு பெறும்?

கபடில்லாத இதயமா? எவ்வளவு கிலோ என்று கேட்கிற நிலைதான் இன்று திருச்சபைகளில். தங்கள் சுயநலத்திற்காக எப்படியும் பேசி நடிக்கிற கபட நாடகங்கள் தலைவிரித்தாடுகிறது. உதட்டில் அன்பும் உள்ளத்தில் பகையும் போதகர்கள் மத்தியிலேயே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது, நேருக்கு நேர் பேசுகிற உள்ளம் ஐயோ இல்லவே இல்லை. எங்கோ பாவம் பிழைக்க தெரியாத விசுவாசிகள் செய்கிற வேலை அது. எப்படி நம் வாழ்வும் திருச்சபையும் உயர்வு பெறும்?

ஆதி திருச்சபையில் மேற்கண்ட ஐந்து குணாதிசியங்கள் இருந்ததால் சபையில் அனுதினமும் இரட்சிக்கப்படுகிறவர்களை கடவுள் சேர்த்துக்கொண்டு வந்தார்.

இதெல்லாம் நமது சபைகளில் இல்லாதால் இருக்கிறவர்களும், ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவா? இதற்காகவா? இயேசு தன் ஜீவன் தந்தார்? இதற்காகவா உயிரோடு எழுந்தார்?

சிந்திப்போம் செயல்படுவோம் இன்னும் நம் ஆண்டவர் ஏக்கமாய் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார். பரிசுத்தாவியானவர் தாமே நம்மில் மாற்றம் வர உதவுவாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews