WORD OF GOD

WORD OF GOD

Tuesday, May 24, 2011

வளமும் நலமும் பெற்றிட

அன்புள்ள எனதருமை உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் காலை ஸ்தோத்திரங்கள். இன்று காலை நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை. உபாகமம்.15 :5 .

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்




ஒரு ஏழை முதியவர், தன குடும்பத்தை வறுமையிலிருந்து காப்பாற்ற முடியாமல், ஒரு செல்வந்தரிடம் கடன் வாங்க சென்றார். அந்த செல்வந்தர் அந்த முதியவரை அழைத்து உனக்கு என்ன துன்பம் உன் துன்பத்தை நான் போக்குகிறேன் என்று சொல்லி, அவர் வறுமை தீர உதவி  செய்ததுமல்லாமல், தொடர்ந்து அவர் குடுமபத்தை தன வீட்டிற்கு அழைத்து தினந்தோறும் அவர்களை பராமரித்தால்? அந்த முதியவர் அந்த செல்வந்தரை பற்றி என்ன நினைப்பார்? ஓர்  இளிச்சவாயன் சிக்கிட்டான் என்றல்லவா சொல்லுவார்? காரணம் இப்படி உதவி செய்யும் ஒருவரை இவ்வுலகில் நாம் காணவே முடியாது. அப்படி செய்தால் அவருக்கு பைத்தியம் என்றுதானே உலகம் சொல்லும்.

ஆனால் உண்மையில் அப்படி செய்த ஒருவரை தான் இன்றைய தியான பகுதியில் காண்கிறோம். அவர் யார் தெரியுமா? இவ்வுலகை படைத்து பராமரித்து வரும் நம் கடவுள். இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் அந்த அடிமைத்தனத்தின் வேதனை தாங்க முடியாமல் கண்ணீரோடு போராடி வந்த காலத்தில் கொடுமையின் உச்சமாக எகிப்திய அரசன் பார்வோன், அவர்களுடைய ஆண் குழந்தைகளை எல்லாம்   கொல்ல சொல்லி சட்டம் போட்டான்.



இஸ்ரவேலர்கள் வாழ்வே இருண்டு போனது, செய்வதறியா ஜனம் கடவுளை நோக்கி கூக்குரலிட்டது. அவர்கள் கூக்குரலின் நோக்கம் என்னவாக இருந்திருக்க முடியும்? இந்த அடிமைத்தன நாட்டை விட்டு எங்காவது ஓடினால் போதும் என்பதை தவிர  வேறு எதையும் அவர்களால் யோசித்து கூட பார்க்க முடியாதல்லவா? ஆனால் கடவுளோ அவர்கள் கூக்குரலை கேட்டு அவர்களுக்காக இறங்கினார், அதுமட்டுமல்ல விடுதலை வந்தால் போதும் என்ற ஜனத்துக்கு பாலும் தேனும் வழிந்தோடும் தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குரைத்தார். அவர்கள் கனவிலும் நினைத்திராத வாழ்வை தருவேன் என்று வாக்குறுதியளித்தார்.

அதோடு நில்லாமல் இன்றைக்குரிய தியான வசனத்தில் நீங்கள் தொடர்ந்து என்னையும் என் வார்த்தைகளையும் பின்பற்றினால் உங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தில் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்று அவர்கள் முழு எதிர்கால  வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகிறார் இதுவரை கொடுத்ததே அவர்களுக்கு பெருத்த ஆசீர்வாதம் ஆனால் மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்கிறார். சொன்ன படியே இன்றுவரை ஆசீர்வதித்து வருகிறார்.

அன்பானவர்களே இதே சர்வ வல்லமை பொருந்திய கடவுள் கிறிஸ்துவாக நம்மோடு, நம் வாழ்வோடு பயணித்து வருகிறார், யுக முடிவு பரியந்தம் நான் உன்னோடு இருப்பேன் என்று சொன்னவரல்லவா? அவர் நம்மை இதுவரை ஆசீர்வதித்ததே அற்புதம் தான் ஆனால் இது முடிவல்ல  மென்மேலும் ஆசீர்வதிப்பார். இந்த ஆசீர்வாதத்தில் நிலைத்து வாழ அவரை அவர் வார்த்தைகளை பின் பற்றி வாழ்வோம். பரிசுத்த ஆவியானவர் அதற்காக நமக்கு உதவி செய்வாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews