WORD OF GOD

WORD OF GOD

Saturday, May 28, 2011

நாம் இயந்திரங்களல்ல (தோழியருக்காய்)




தோழி பரபரப்பான இந்த கால கட்டத்தில் எல்லாருக்கும் அவசரம் ஊருக்குப் போய், தாய் தந்தையரைப் பார்க்க நேரமில்லை. ஆலயத்திற்கு போக நேரமில்லை, உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய் அவர்களை மகிழ்விக்க முடியவில்லை. நண்பன் வீட்டு துக்கத்தில் பங்குக் கொண்டு, அவன் அல்லது அவள் மனதிற்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேச நேரமில்லை, அவ்வளவு ஏன் பெற்ற பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாட கூட நேரமில்லை. நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி, இயற்கையை இரசித்து புத்துணர்வு பெறக்கூட நேரமில்லை.

கண்களை விற்று ஓவியம் வாங்க முயற்சிப்பதைப் போன்று மேலே சொன்ன அனைத்தையும் விற்று பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம்.

அன்றாட வாழ்வில் பணம் ஈட்ட வேண்டியது அவசியம் தான்- "இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள்..." எல்லாம் சரி, ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகாது என்றுதான் இங்கு கூற வருகின்றேன். தோழி நமக்கு தேவை சந்தோஷம், அமைதி, அன்பு.
பணம் இருந்துவிட்டால் இந்த மூன்றையும் என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிடலாம் என்று தப்பாக முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்து விடுகின்றோம்.

பணம்தான் முக்கியம் என்று இயந்திரத்தனமாக நடந்தால், அது எத்தகைய சீரழிவில் கொண்டுபோய்விடும்? என்பது அனைவரும் அறிந்ததே, எந்த வேலையாக இருந்தாலும் அதை இயந்திரதனமாக செய்தால் பலனை தராது. ஒரு கற்பனை கதையொன்றைப் படித்தேன், முத்துக் குளிப்பவன் ஒருவன் முத்துக்களைத் தேடி கடலுக்குள் மூழ்கினான், கடலுக்குள்ளே அவன் பயணித்தவுடன் ஒரு நத்தை அவன் கண்ணில் பட்டுவிட்டது.

உடனே அவன் அந்த நத்தையை நோக்கி வேகமாக நீந்த ஆரம்பித்தான், முத்துக்காகத்தான் தன்னை நோக்கி நீந்தி வருகிறான் என்பதை உணர்ந்த நத்தை, தன் உடலை அருகில் இருந்த பாறையில் மோதி, முத்தைப் பெயர்த்தெடுத்து, அவன் கண்ணில் படும்படியாய் இன்னொரு பாறையின் மீது வைத்துவிட்டு நகர்ந்தது.

ஆனால் முத்துக் குளிக்க வந்தவனோ, எதிரில் இருந்த முத்தை எடுக்காமல், முத்தை இழந்த நத்தையை எடுத்துக் கொண்டு போனானாம். இயந்திர தனமாக செய்வதால் உண்டாகும் கோளாறு இது. நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு வகையில் பார்த்தால் நாமுங்கூட அந்த முத்து குளிக்கும் தொழிலாளியைப் போலத்தான் பல சமயங்களில் நடந்துக் கொள்ளுகிறோம்.

தோழி! கடவுள் நமக்கு கிருபையாய் இந்த வாழ்க்கையை தந்திருக்கின்றார். இதை இயந்திரத்தனமாக அல்ல, மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் கழிக்க முற்படுவோம். நாம் மகிழ்ந்திருந்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாவோம்.

"அவர் (கடவுள்) சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம் மட்டும் செய்து வரும் கிரியையை மனுஷன்  கண்டு பிடியான்". - பிரசங்கி.3 :11  ...


அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews