WORD OF GOD

WORD OF GOD

Friday, February 19, 2016

ஊழியத்தை தடுப்பவன் யார்?



உண்மையான ஊழியத்தில் இரண்டு சவால்கள் உள்ளன.


ஒன்று வாழ்வாதாரம்:

ஊழியம் என்பதே.. பிறருக்கு செய்வது தனக்கு செய்வதல்ல. இயேசு தான் ஊழியம் செய்த காலத்தில் அனேக அற்புதங்களை செய்திருக்கிறார். யோவான்.20:30 ல் இப்புத்தகத்தில் எழுதியிராத அனேக அற்புதங்களை செய்திருக்கிறார் என்று யோவான் சாட்சியிடுகிறார். ஆம் அவர் செய்த அற்புதங்கள் உலகம் கொள்ளாதவை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஒரு அற்புதத்தை கூட அவர் தனக்காக செய்ததில்லை. ஐயாயிரம் பேருக்கு அதிகமானோரின் பசியாற்ற 5 அப்பம் 2 மீனை பெருக்கி 12 கூடை மீதியாகும் அளவுக்கு கொடுத்தவர். தான் பசியாய் இருந்த போது ஒரு கல்லை கூட அப்பமாக மற்றிக் கொள்ளவில்லை. ஏனென்றால் தனக்கானதை நாடுவதில்லை ஊழியம். அப்படியானால் பசியிலும் வறுமையிலும் வாட வேண்டுமா? என்றால் இல்லை அன்றன்று வேண்டிய ஆகாரத்தை ஆண்டவர் தருவார். இந்த விசுவாசம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிலகி பணத்தை நாடி சென்றுவிடுவர். இன்று பல ஊழியர்கள் அப்படி சென்று விட்டதை நம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். அவர்களை தான் பவுல் பிலி.3:19 ல் .. அழிவே அவர்கள் முடிவு..
வயிறே அவர்கள் தெய்வம்..
மானக்கேடே அவர்கள் பெருமை...
அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகை சார்ந்தவையே.. என்கிறார். ஆம் அது உண்மைதான் எனவேதான் ஆண்டவர் தனக்கானவைகளை நாடியதில்லை. அவருக்கானதை பரம பிதா கொடுக்க தவறியதில்லை. எனவே உணவுக்கோ, உடமைக்கோ பொருளுக்கோ ஒரு ஊழியக்காரன் கவலை கொள்வானானால் அவனை போல் ஓர்  அவிசுவாசி இவ்வுலகில் இல்லை. ஆனால் இதை வைத்துதான் பிசாசும் இவ்வுலகமும் ஒரு நல்ல ஊழியனை வஞ்சிக்க பார்க்கும். எதிர்த்து நின்றால் ஜெயமே முடிவு. உலக பொருளல்ல உலக பொருளை கொடுப்பவரே பெரியவர்.

இரண்டு அச்சுறுத்தல்.

மக்களின் அறியாமையை மூலதனமாகி பல்வேறு கடைபிடிக்க முடியாத ஒழுங்குகளை உண்டாக்கி தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டு மக்களின் காணிக்கை பணத்தில் உல்லாச வாழ்வு வாழ்ந்த சமய தலைவர்களை இயேசு பகிரங்கமாக கண்டித்தார். இதன் விளைவு அவரை எப்படியாவது அடக்க துடித்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் தான் மிரட்டல் லூக்கா.13:31 ல் சில பரிசேயர் அவரிடம் வந்து இங்கிருந்து போய்விடும் ஏனெனில் ஏரோது உம்மை  கொல்ல பார்க்கிறான் என்றனர். மிரட்டல்களுக்கு அஞ்சுபவரா ஆண்டவர்? உயிருக்கே அஞ்சாதவர் இது போன்ற சலசலப்புகள் அவரை என்ன செய்யும்? இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இருப்பேன் போய் சொல்லுங்கள் என்றார்.

உதவி செய்ய வேண்டிய யூதாஸ் காட்டி கொடுத்தபோது..
இவன் யார் என்று தெரியாது என்று பேதுரு மறுதலித்தபோது..
எல்லா சீடர்களும் விட்டுவிட்டு ஓடிப்போனபோது..
விடுவிக்க வேண்டிய பிலாத்து  சிலுவைக்கு வஞ்சகமாய் ஒப்புக் கொடுத்த போது...
நியாயமாய் ஒரு பயம் வர வேண்டும் ஆனால் இயேசுவுக்கு வராது ஏனென்றால் அவர் உணமையான ஊழியத்தை செய்தவர்.. பிதாவின் சித்தமின்றி தன்னை ஒருவனும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தவர்.

உலக பொருள் நம்மை தேடி வரும்.. முதலாவது கடவுளுடைய இராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடினால் போதும் . நம்மை தொட்டால் அவர்  கண்மணியை தொடுவதற்கு சமம்.
இந்த விசுவாசமே இன்றைய ஊழியத்தின் அடிப்படை தேவை.. ஏனென்றால் உண்மையான ஊழியத்தை எதிர்ப்பவர்கள் கடவுளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள் .

Tuesday, February 2, 2016

ஆராதனை ஆசீர்வாதம்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.



கிறிஸ்தவர்களாகிய நாம் அனேக ஆராதனைகளை கடைபிடிக்கிறோம். மாதத்தின் முதல் நாள் ஆராதனை, ஞாயிறு ஆராதனை, சில திருச்சபைகளில் புதன் ஆராதனை, சில திருச்சபைகளில் வெள்ளி ஆராதனை, விடுமுறைகளில் கூட ஏதாவது ஒரு ஆராதனை  உபவாச ஆராதனை அல்லது முழு இரவு ஆராதனை போன்றவைகளை கடை பிடிக்கிறோம், இது போதாதென்று வீடுகள் தோறும் குடும்ப ஜெபக்கூட்டங்கள் என்று குடும்ப ஆராதனைகளை  நடத்துகின்றோம். எவ்வளவோ சிரமங்கள் எத்தனையோ பணிகள் நடுவே இவைகளை நடத்துகின்றோம்.

என் இப்படி ஆராதனைகளை நடத்த வேண்டும்? நடத்துவதால் என்ன பலன்?

சங்கீதம்.27:4 ல் தாவீது,  கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். என்று கூறுகிறார், 

 ஒன்றே ஒன்றுதான் அது நான் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார். ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை ஆராதிக்க வேண்டும் என்கிறார். 

2.சாமுவேல்.6:15-16 ல் தாவீது கர்த்தருடைய பெட்டகத்திற்கு முன்னால் ஆடி பாடி நடனமாடி  இறைவனை  ஆராதிக்கின்றார். எவ்வளவு பெரிய காரியம்.. சவுலின் மகள் இதை கண்டு அவமதித்த போதும் அதை பொருட்படுத்தாமல் இறைவனை ஆராதிக்கின்றார்.  நாமோ சில நேரங்களில் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு ஆராதனைக்கு வருவதற்கு கூட வெட்கப்படுகிறோம். 

மீண்டும் அதே கேள்வி அப்படியென்ன ஆராதனை அவசியமாகிறது?

யாத்திராகமம.23:25 ல் கடவுள் மூலமாக கானானுக்கு போகிற தம் மக்களுக்கு கூறுகிற செய்தி என்னவென்றால். 

"உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்". 

இந்த வசனத்தில் தான் ஆராதனையின் மகத்துவம் வெளிப்படுகிறது. நாம் அவரை ஆராதித்தால் நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை கடவுள் வெளிப்படுத்துகின்றார். 

நாம் அவரை ஆராதிக்கும் போது நம் வீட்டு உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கின்றார். இன்று உணவு கிடைக்கிறது ஆனால் நாம்  தான் நமக்கு  மாறுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அதே போலதான் தண்ணீர். இன்று சுத்தமான தண்ணீரின் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒரு டி கடையில் தண்ணீர் கேட்டால் ஒரு பெரிய பாத்திரத்தில் அள்ளி கொடுப்பார் இன்று 20 ரூபாய் கொடுத்தால் தான் ஒரு லிட்டர் தண்ணீர் கொடுக்கிறார். சுத்தமான தண்ணீர் கிடைப்பது அவ்வளவு போராட்டமாக உள்ளது. ஆனால் அவரை ஆராதிப்பவர்களுக்கு உணவையும் தண்ணீரையும் கடவுள் ஆசீர்வதிக்கிறார். அதுமட்டுமல்ல நம் பலவீனங்களை நம்மை விட்டு விலக்குகின்றார். உண்மை தானே நாம் ஒரு ஜெபத்திலோ, அல்லது ஆலய ஆராதனையிலோ, அல்லது ஒரு நற்செய்தி கூட்டத்திலோ தானே அற்புதங்கள் நடக்கிறது .


எனவே தான் அராதனைகள் நம் வாழ்வில் நம்மை விட்டு பிரிக்க முடியாத அங்கமாக மாறுகிறது. எனவே எக்காரியத்திலும் அவரை ஆராதிப்பது நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் மிகப்பெரிய ஆசீர்வாதம். எனவே தான் ஒரு மாதத்தை, ஒரு வாரத்தை, ஒரு வருடத்தை, ஆராதனையோடு துவக்குகிறோம். 

இன்று அவரை ஆராதித்து துவங்கினால் அவர் நம்மோடிருந்து நம்மை ஆசீர்வதித்து நம் பலவீனங்களை நம்மை விட்டு விளக்குகிறார். 

ஆராதிப்போம் நம் ஆண்டவரை ஆசீர்வாதமான வாழ்வை பெற்று மகிழ்வோம். 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews