WORD OF GOD

WORD OF GOD

Monday, October 31, 2011

உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

Text : ஏசாயா.60:20b

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போதும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அது யாதெனில், இந்நாளின் நிகழ்வுகள் அனைத்தும் சுகமாய் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா நாளும் சுகமாய் அமைந்துவிடுவதில்லை.

அப்படியானால் எல்லா நாளும் சுகமாய் அமையாதா என்றால் அமையும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அது எப்படி முடியும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்கிறீர்களா. ஆம் அதுவும் உண்மைதான். ஆனால் ஒரு நாள் முழுதும் போராட்டங்களை மட்டுமே சந்தித்தாலும், அந்த நாள் சுகமான நாளாக மாற ஒரு வழி இருக்கிறது.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்பவர் இரு கரம் நீட்டி நம்மை அழைக்கிறார் நமது சுமைகளை வாங்கிக் கொண்டு சுகத்தை கொடுக்க. ஆம் அவர் எப்போதுமே நாம் பாரத்தோடும் துன்பத்தோடும் இருப்பதை விரும்பாதவர்.

நம்முடைய தியானத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட வசனத்தில் கூட பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கிறவர்களது துன்பத்தை கண்ட கடவுள் அவர்களது துன்பத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக ஒரு செய்தி சொல்கிறார் அது உங்கள் துக்க நாட்கள் முடிந்து போகும் என்ற உத்தரவாதம். நான் உங்களுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பேன் என்ற பாதுகாப்பின் வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

அவர்களது துன்பத்திற்கு யார் காரணம்? அவர்களேதான் காரணம், அவர்கள் பாவம் செய்தார்கள் அதின் பலனாக துக்கத்திலிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ, அவர்கள் துன்பத்தை காண சகியாதவராய் இருக்கிறார். காரணம் நம் துன்பத்தை அவர் விரும்பாதவர்.

அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் இந்நாளை துவங்கும்போது அனேக கவலைகள் இருக்கக் கூடும், ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,  நம் கடவுள் நாம் கவலைப்படுவதை விரும்பாதவர் , அது மட்டுமல்ல நித்திய வெளிச்சமாய் நம்மை சந்தோஷத்திற்கு நேராக நடத்துகிறவர் அதையும் தாண்டி நம் துன்பங்களையும் பாரங்களையும், வாங்கிக் கொள்ள நம்மை கரம் நீட்டி அழைக்கிறவர்.

அத்தனை துன்பங்களையும் அவர் கரங்களில் கொடுத்துவிட்டு, உங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் துடைத்துவிட்டு இந்நாளின் பணிகளை தொடருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..  இந்நாள்  சுகமான 
நாளாகும்.  ஆமேன். 

ஜெபம்:

அன்புள்ள பரம தகப்பனே இந்த  நாளுக்காய்  நன்றி. இந்த நாள் முழுவதையும் உமது கரத்தில் தருகிறோம், எங்கள் தேவைகளை பொறுப்பெடுத்துக் கொள்ளும். எங்கள் பாரங்களை நீக்கி மகிழ்ச்சியான பாதையில் எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் நல்ல பிதாவே.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews