WORD OF GOD

WORD OF GOD

Sunday, June 26, 2011

வாழ்வருளும் வார்த்தை ( ஞாயிறு செய்தி )


ஞாயிற்றுக் கிழமைக்கான திரு வசன வாக்கியங்கள்.

சங்கீதம்.31 :1 -15  
ரோமர்.3 :21 
மத்தேயு.7 :21 -29 

 பிரசங்க வாக்கியம் : உபாகமம்.11 :18 -21 , 26 -28  

நன்மை தீமை இந்த இரண்டும் மனித வாழ்வில் நம் கண்களுக்கு முன்பாக இருந்துக் கொண்டே இருக்கிறது. அதில் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை பொறுத்து நம் எதிர்க்கால வாழ்க்கை அமைகிறது. பிள்ளை பிறந்து 3  வயதை எட்டிய உடனே பிள்ளையின் அனுமதியின்றி கட்டாயமாக பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு வருகிறோம். பிள்ளை அழுதாலும், புரண்டாலும், நாம் விடுவதில்லை. காரணம் என்ன அது பிள்ளையின் எதிர் காலத்திற்கு நல்லது. எனவே மூர்க்கமாகவே பிள்ளையை பள்ளிக்கூடத்தில் திணித்துவிட்டு வருகிறோம். பிள்ளை அழுகிறதே என்று விட்டுவிட்டால் எதிர்க்காலத்தில் பிள்ளையே நம்மை கேட்கும் என்னை படிக்க வைக்காத நீங்களெல்லாம் ஒரு மனிதர்களா என்று. எனவே நமக்கும் நம் சந்ததிக்கும் நன்மையானவைகளை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.

நம்முடைய தியான பகுதியிலேயும் கடவுள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி கொண்டுவந்த இஸ்ரவேல் மக்களுடைய, எதிர்க்கால வாழ்வு நலமாக அமைய செய்ய வேண்டிய  காரியத்தை மோசேயின்  வழியாக அறிவுருத்திக்கொண்டிருக்கிறார்.

ஆசீர்வாதமான நீண்ட ஆயுளையும், வாழ்வையும் விரும்பாத மனிதனை இவ்வுலகில் நாம் காணவே முடியாது. ஆனால் அதை கண்டடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வாழ்வை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள கடவுள் ஒரே ஒரு வழியைத்தான் கூறுகிறார். அந்த வழி கர்த்தரின் வார்த்தைகள். நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் அவர் வார்த்தைகளில் பயணிக்க வேண்டும் என்கிறார். எப்படி பயணிப்பது? அவரே கற்றுத் தருகிறார்... உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். கையில் அடையாளமாக கட்டிக்கொள்ள வேண்டும், கண்களுக்கு நடுவே ஞாபக குறியாக நினைவில் நிறுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும், குடும்பத்தோடு தியானிக்க வேண்டும், வீடு முழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டும்.

26  முதல் 28  வரையுள்ள வசனத்தில் இப்படி செய்தால் ஆசீர்வாதம் செய்யாவிட்டால் சாபம் என்கிறார்..

யோசித்து பார்ப்போம், நாம் கர்த்தருடைய வார்த்தையை இவ்வளவு அக்கறையோடு பின்பற்றிவருகிறோமா? ஒவ்வொன்றாய் பார்ப்போம். 

1 . உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும். நமக்கு பிடித்த ஒரு திரைப்பட பாடலை முழிவதுமாக பாடுவோம். நமக்கு பிடித்த அரசியல் தலைவரின் வாழ்வை முழுவதுமாக மனதில் பதிய வைத்திருக்கிறோம். நமக்கு துரோகம் செய்தவர்களின் செயலை அப்படியே மனதில் பதிய வைத்து பழிவாங்க தகுந்த தருணம் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் வேதாகமத்திலிருந்து ஒரே ஒரு அதிகாரத்தை மனப்பாடமாக சரளமாக   சொல்ல முடியுமா நம்மால்? குறைந்த பட்சம் ஒரு வசனமாவது சரளமாக சொல்பவர்கள் எத்தனை பேர்?

2 . பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். பிள்ளை பிறந்த உடனே எந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் என்று யோசிக்கிறோம். எவ்வளவு செலவானாலும் கடன் வாங்கியோ தன் செல்வங்களை அடமானம் வைத்தோ படிக்க வைக்கிறோம். ஞாயிறு பள்ளிக்கும், திடப்படுத்தல் வகுப்புக்கும் அதே அக்கறையோடு அனுப்பி வைக்கிறோமா? என்றாவது திரு வசனத்தை கற்றுத்தர அக்கறை செலுத்தியிருக்கிறோமா?

3 . வீட்டில் குடும்பத்தோடு தியானிக்க வேண்டும். குடும்ப ஜெபமாவது உண்டா? ஆயிரம் வெட்டி கதைகளை பேசியும், தொலைகாட்சி சீரியல்களை காண்பதிலேயும் நம் குடும்ப வாழ்வை கரைத்து வருகிறோம்.

4 . வீடு முழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டும். இதை உற்சாகமாக செய்கிறோம், ஆனால் வெறும் அலங்காரத்திற்காக.

அன்பானவர்களே இதையெல்லாம் நாம் செய்யாமலே நம் தேவன் நம்மை காத்து வருகிறார். காரணம் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். ஆனால் நாம்?

நம் வாழ்வில் எப்போது  உண்மையான  மேன்மை வந்தது?  எப்போது  கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்வில்  வந்ததோ அன்றிலிருந்துதான்.
மேன்மை நம் வாழ்வில் வந்தது. கர்த்தருடைய  வார்த்தை தந்த  மேன்மையை  உறுதியாக பிடித்துக் கொள்ளுகிறோம்,   கர்த்தருடைய வார்த்தையை????????? யோசிப்போம் செயல்படுவோம்.

பரிசுத்தாவியானவர்தாமே இந்த சிந்தையில் நம்மை காப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews