WORD OF GOD

WORD OF GOD

Wednesday, June 29, 2011

பாதுகாக்கும் கேடகம்

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
உபாகமம்.33 :29

அன்பான உடன் விசுவாசிகளே, இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தை நோக்கி பயணித்துக்  கொண்டிருந்த காலத்தில், கானானுக்கு பொய் சேருவோமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்ததில்லை காரணம், வழி நடத்தி வருபவர் மோசே. எகிப்தில் இருந்து புறப்பட்டபோது எத்தனை தடைகள்? எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு வலிகள் வேதனைகள்? எல்லாவற்றின் மத்தியிலும், மோசேயின் வழி நடத்தலில் மிக எளிதாக கடந்து வந்தார்கள். ஆனால் மோசேவால்  கடைசி வரை வர முடியாதே.

ஆம் மோசேவுக்கு வயதாகிவிட்டது, தன் காலம் முடிய போகிறது என்பதை அவரே உணர ஆரம்பித்தார். இனி தொடர்ந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்த முடியாது என்பதை அறிந்துக் கொண்டார். எனவே கடைசியாக இஸ்ரவேல் மக்களை அழைத்து அவர்களுக்கு அறிவோரை வழங்குகிறார். அவர் கூறிய நீண்ட அறிவுரையின் கடைசி வார்த்தைகள் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

இங்கே அவர் சொல்லுவது இஸ்ரவேல் பாக்கியமுள்ள ஜனம், இரட்சிக்கப்பட்ட ஜனம், யாருக்கும் நிகரில்லா ஜனம். ஏன் என்றால், இஸ்ரவேலுக்கு உதவியாகவும், பாதுகாக்கும் கேடகமாகவும், வெற்றிதரும் மகிமையுள்ள பட்டையமாகவும் இருப்பவர் கடவுள் என்கிறார்.

சத்தியமான வார்த்தை, மோசே நினைத்திருந்தால், என் பலத்தால் இதை சாதித்தேன், இனி நீங்களும் என்னை போல் வாழுங்கள் என்று சொல்லி தன்னை மேன்மைபடுத்திக்கொண்டிருக்க முடியும். காரணம் இன்று அநேகர் கடவுள் கொடுத்த வரங்களினால் வல்லக்காரியங்கள் செய்து எதோ தானே செய்ததாக சுவரொட்டிகளில் தங்களை மேன்மைப்படுத்திக்  கொள்வதை போல் அவரும் செய்திருக்க முடியும் ஆனால் அதை செய்யவில்லை. காரணம். அது உண்மையல்ல. இவ்வளவு நாள் உங்களை நடத்தியது, உங்களை இரட்சித்தது, உங்களை தெரிந்துக் கொண்டது, உங்களுக்கு சகாயம் செய்தது, உங்களை பாதுகாக்கும் கேடயமாய் இருந்தது, உங்களுக்கு வெற்றிதரும் பட்டையமாய் செயல் பட்டது, நானல்ல அவரே என்று சரியான பாதையில், வெற்றிவரும் பாதையில் தன்னை தாழ்த்தி அவரை உயர்த்தி தன் கடைசி அறிவுரையை முடிக்கிறார்.

அன்பானவர்களே. இன்றைக்கு மோசே இத்திரு வசனங்கள்  வாயிலாக நமக்கு சரியான அறிவுரையை தருகிறார். எப்படி முன்னேறி செல்ல போகிறேன்? யார் எனக்கு துணை என்று அஞ்சுகிறீர்களா?


நமக்கு உதவி செய்பவராக, பாதுகாக்கும் கேடகமாக, நம் தீமைகளை அறுத்தெறியும் பட்டையமாக, நமக்கு துணையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். நம்மை காக்க சிலுவையில் ஜீவனையே கொடுத்தவர். இன்றும் நம்மை காக்க நம்மோடு நம் வாழ்வோடு பயணிக்கிறார். இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews