WORD OF GOD

WORD OF GOD

Wednesday, June 8, 2011

மனக்கவலைக்கு மருந்து

 அன்பான எனதருமை இணையதள வாசகர்களே, நண்பர்களே, உங்களுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். இந்த காலை 42  ம் சங்கீதம்.5  வது வசனத்தை தியானிப்போம்.

என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கி காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்


சங்கீதகாரன் தனக்குள் இருக்கிற வேதனைகளை இறைவனிடம் கொட்டி தீர்க்கிற சங்கீதம்தான் 42  ம் சங்கீதம். அவர் இரண்டு பிரச்சினைகளை இறைவனிடம் முறையிடுகிறார். ஒன்று உன் கடவுள் எங்கே என்று மற்றவர்கள் அவரிடம் கேட்கிறார்கள் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு கண்ணீரே இரவும் பகலும் உணவாய் இருக்கிறது. ஆனால் அது அவருக்கு வேதனையாக தெரியவில்லை....
உன் இறைவன் எங்கே என்று அடுத்தவர்கள் சர்வவல்ல கடவுளை அவமான படுத்துவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன்னை நிந்திப்பதை கூட பொறுத்துக் கொள்ளுகிறார், தன் கடவுளை நிந்திப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது அவர் உள்ளத்திலிருக்கிற பெரிய வேதனை, 4  வது வசனத்தில் நான் தேவாலயத்திற்கு ஜனங்களோடு பொய் வருவேன், ஆனால் அது இப்போது முடியவில்லை என்று  வேதனையில் புலம்புகிறார். தேவாலயத்திற்கு போக முடியாதது அவருக்கு பெருத்த வேதனையை தருகிறது.


ஏன் அவரால் ஆலயத்திற்கு போக முடியாத நிலை ஏற்பட்டது என்ற தெளிவான காரணம்  தரப்படவில்லை.. வியாதியில்  இருந்திருக்கலாம்!.. உயிருக்கு பயந்து காடுகளிலும் வனாந்திரத்திலும் ஓடி ஒளிந்துக் கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்!... ஆனால் என்ன உண்மையான காரணம் என்பதை சங்கீதக்காரன் இந்த சங்கீதத்தில் சொல்லவில்லை.. காரணம் அவருக்கு இருக்கிற சரீர வேதனைகளும், கவலைகளும்  அவருக்கு பெரிதாக தெரியவில்லை, மாறாக தன் கடவுளை அடுத்தவர்கள் நிந்திப்பதும், தன் கடவுளை தேவாலயத்தில் தரிசிக்க இயலாமல் இருப்பதும் அவருக்குள் பெரிய வேதனையை தருகிறது.

அதனால் அவர் உள்ளம் சோர்ந்துப் போகிறது.. உடல் சோர்வடைந்தால் கொஞ்சம் ஓய்வெடுத்தால் போதும்.. உள்ளம் சோர்ந்துவிட்டால்???.. மனக்கவலையை போக்கும் மருந்து இவ்வுலகில் இல்லையே.. எனவே இளைப்பாறுதல் தரும்  தேவனையே நோக்கி பார்க்க தன் உள்ளத்தை திருப்புகிறார். அவரயே நோக்கி காத்திரு என்று தன் உள்ளத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறார். இறுதியான வாசகத்தில் தன் விசுவாசத்தின் முழு பலத்தை நிரூபிக்கிறார்.


அவர் தரும்  இரட்சிப்பின் நிமித்தம் இன்னும் அவரை துதிப்பேன் என்று தைரியமாய் கூறுகிறார்.

அன்பானவர்களே உங்கள் ஆத்துமா சோர்ந்து போகிறதா? மனக்கவலை சூழ்ந்துள்ளதா? எப்படி நீங்கும் என்ற கவலை வாட்டி வதைக்கிறதா? வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்ன ஆண்டவரிடத்தில் சங்கீதக்காரனின் விசுவாசத்தோடு வாருங்கள், உங்கள் கவலையை  துதியாய் மாறிடுவார். ஆமென்...





கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews