WORD OF GOD

WORD OF GOD

Friday, November 4, 2011

சீர்த்திருத்தல் ஓர் இரட்சிப்பின் புதிய வரலாறு



அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 31 ம் தேதி லுத்தரன் திருக்கபைகளிலே சீர்திருத்தல் ஆராதனை கொண்டாடப்பட்டது, ஆனால் இன்று சீர்திருத்தல் பற்றிய ஒரு தெளிவான பார்வை குறைந்து வருகிறது. அனேக திருச்சபைகளில் விசுவாசிகள் ஆர்வமாக பங்கெடுக்கவில்லை என்கிற செய்திதான் பரவலாக இருக்கிறது.

எங்கள் திருச்சபையில் சீர்திருத்தல் ஆராதனையில் பிரசங்கித்த கர்த்தருடைய வார்த்தையை இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

மார்டின் லூத்தர் 1483ம் வருடம் நவம்பர் 10ம் தேதி ஹன்ஸ் லூத்தர், மார்கரெட் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தவர், இவர்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகவும் ஏழை குடும்பத்தினர், தந்தை ஆரம்பத்தில் கூலி வேலை செய்து பின்னர் படிப்படியாக முன்னேறி நடுத்தர குடும்பமாக தங்களை உயர்த்திக் கொண்டவர். அவரது ஒரே குறிக்கோள் தன் மகனை சிறந்த கல்விமானாக்க வேண்டும் என்பதுதான். எனவே மார்டின் லுத்தரும் சிறப்பாக படித்தார். இலக்கியம், தத்துவம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றார், அடுத்ததாக அவருடைய தந்தை அவரை சட்டம் படிக்க அனுப்பினார். மார்டின் லுத்தரை ஒரு நீதிபதியாக காணவேண்டும் என்பது ஹன்ஸ் லுத்தரின் கனவு.

ஆனால் மார்டின் லுத்தரின் வாழ்வில் இரண்டு காட்சிகள் அவருக்குள் பெரிய மாறுதலை உண்டாக்கின.

1. ஒருமுறை அவர் வீதியில் நடந்து வரும்போது அன்கால்டு பெர்ன்பர்க் என்ற நாட்டின் இளவரசன் வில்லியமை காண நேர்ந்தது, இளவரசன் எப்படி இருப்பாரோ அப்படி வில்லியம் இல்லை, மாறாக கையில் ஒரு பிச்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு வெறும் ஒரு அறைக்கச்சை மட்டும் கட்டிக் கொண்டு, வீடுகள் தோறும் பிச்சை எடுத்து வந்தார். அவர் இரட்சிப்பை பெற துறவியாகிவிட்டதே காரணம் என்பதை மார்டின் லுத்தர் அறிந்தார். ஒரு இளவரசன் ரட்சிப்புக்காய் எவ்வளவு தன்னை அர்பணித்திருக்கிறார் என்பது அவருக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

2. தேவாலயத்தில் ஒரு படம் கண்டார், அதில் ஒரு அழகான ஓவியம் கப்பல் ஓவியம் இருந்தது, அந்த கப்பலின் மாலுமியாக பரிசுத்தாவியானவர் இருந்தார், கப்பல் பயணிகளாக போப்பும் அனைத்து குருமார்களும் இருந்தனர். கப்பல் மோட்சத்தை நோக்கி பயணிக்கிறது, மக்களெல்லாம், கடலில் தத்தளிக்கின்றனர் அவர்கள் வசதிக்காக, கப்பலில் இருந்து இரட்சணிய கயிறுகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அதை யார் பிடித்துக் கொள்ளுகிறார்களோ அவர்களும் மோட்சம் நோக்கி பயணிக்கலாம்.

இந்த இரு காட்சிகளும் மோட்சத்திற்கு போக வேண்டுமானால், துறவியாக, அதாவது, ஒரு கிறிஸ்தவ மத குருவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மார்டின் லுத்தரின் உள்ளத்தில் ஆழமாய் விதைத்தது.

மார்டின் லுத்தர் இளைமையில் சிறந்த அறிவாளியாக இருந்தாலும், சரீரத்தில் மிகவும் பெலவீனமானவர். கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒருமுறை படுத்த படுக்கையானார், அவர் இறந்து போவார் என அனைவரும் ஏன் அவரும் நினைத்தார். ஆனால் எப்படியோ குணமானார். ஒரு முறை சாலையில் நடந்து வரும்போது ஜெர்மானிய வழக்கப்படி ஒரு வாளை தன்னோடு வைத்துக் கொண்டிருந்தார். திடீரென தவறி விழுந்து அவருடைய வாளே அவரை வெட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் அவரது உள்ளத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, திடீரென அவரது நண்பன் அலெக்ஸ் என்பவர் கொல்லப்பட்டு மரித்து போனார்.

இதனால், தனக்கும் இது போன்ற அகால மரணம் எப்போது வேண்டுமானால் ஏற்படலாம் எனவே உடனடியாக தான் ரட்சிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

இரட்சிப்பை உடனடியாக பெற வேண்டுமானால், அன்றைய முறைப்படியும், அவர் கண்ட தேவாலாய ஓவியத்தின்படியும் அவர் ஒரு துறவியாக வேண்டும், (கிறிஸ்தவ மத குருவாக) தகப்பனிடத்தில் தன் விருப்பத்தை கூற அவர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தகப்பனிடம் சொல்லாமலே போய் துறவி மடத்தில் சேர்ந்தார். ஒரு மாதகாலம் குடும்பத்தார் யாரையும் சந்திக்க வில்லை. தொடர்ந்து மடத்தின் வாழ்வில் ஒன்றிவிட்டார்,

தினசரி பிச்சையெடுத்து வந்து வாழ வேண்டும். சந்தோஷமாக செய்தார், ஆனால் இர்ட்சிப்பின் உத்தரவாதம் கிடைக்கவில்லை. இரவு பகலாக உபவாசமிருந்து ஜெபித்தார். ஒரு முறை நான்கு நாட்க‌ளுக்கு மேல் உபவாசமிருந்து ஜெபித்து மயங்கி விழுந்தார். அறைக் கதவை உடைத்து அவரை பார்த்தனர். சலனமே இல்லாமல் இருந்தார், உடனே அவரை சுற்றி நின்று பாடல்களை பாட அவர் பிழைத்துக் கொண்டார். கடுமையான உபவாசம் ஜெபம் கூட அவரது வாழ்வில் இரட்சிப்பின் உத்தரவாதத்தை தரவில்லை. இறுதியாக குரு அபிஷேகம் பெற்றால் இரட்சிப்பின் உத்தரவாதம் நிச்சயம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்த குரு அபிஷேக நாளும் வந்தது, அவரும் இரட்சிப்பின் முழு உத்தரவாதம் பெற காத்திருந்தார், அந்த நாளில் ஒரு சந்தோஷம் நடந்தது, அவரது தந்தையும் அங்கே வந்தார், அனேக பரிசு பொருட்களையும் கொண்டு வந்தார், மடத்திலுள்ள எல்லாரும் ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு விருந்து ஆயத்தம் செய்து அதில் ஹன்ஸ் லுத்தரும் கலந்துக் கொள்ள செய்தனர். ஹன்ஸ் லுத்தரும் சந்தோஷமாய் கலந்துக் கொண்டார், அந்த நேரத்தில் ஒரு மூத்த குரு, ஹன்ஸ் லுத்தரை பார்த்து, இப்போதாவது புரிந்துக் கொண்டீர்களா? உங்கள் மகன் எவ்வளவு உன்னதமான முடிவெடுத்திருக்கிறார் என்று சொன்னார்.

அதுவரை அமைதியாக இருந்த ஹன்ஸ் லுத்தர், உடனே தன் மகனை நோக்கி திரும்பி, நீயெல்லாம் ஒரு மகனா? உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு என்ற கர்த்தருடைய வார்த்தை உனக்கு தெரியாதா? உன் தாய் அங்கே நோயினால் அவதியுறுகிறாள், நான் வயதான காலத்தில் வீட்டு பணிகளை கவனிக்கிறேன், இதையெல்லாம் அறியாத, தாய் தகப்பனை மதிக்காத உனக்கு குரு அபிஷேகம் ஒரு கேடா என்று கடுமையாக திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

குரு அபிஷேகம் பெற்றால் ரட்சிப்பு நிச்சயம் என்று நினைத்தவருக்கு குரு அபிஷேக நாளிலேயே, அது தவறு என்று கடவுள் புரிய வைத்தார். எனவே அவர் மிகவும் சோர்ந்துப் போனார். ஆனாலும் அவருக்கு இன்னொரு நம்பிக்கை இருந்தது, அந்த நம்பிக்கை யாதெனில், அக்காலத்தில் புனித நகரமாக கருதப்பட்ட ரோம் நகருக்கு சென்றால் நம் பாவம் தொலையும் ரட்சிப்பை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். அடுத்தது ரோமாபுரிக்கும் பயணம் செய்தார். ரோமாபுரி மோட்சத்தின் வாசல் என்று போப்பு மக்கள் மத்தியில் பிரகடன படுத்தி வைத்திருந்தார்.

ரோமாபுரிக்கு சந்தோஷமாய் சென்ற லுத்தர், அங்கே நடக்கும் காட்சிகளை கண்டு, ஒன்றும் விளங்காமல் தவித்தார், காரணம், அங்கே புனித பொருள் வியாபாரம் நடந்தது, அதாவது, சீடர்கள், புனிதர்கள் பயன்படுத்திய, ஆடைகளின் துண்டுகள், சிலுவை மரத்துண்டுகள், அவர்களுடைய தலை முடிகள், என்று எதை எதையோ விற்றனர், அதையெல்லாம் வாங்கி வீட்டில் வைத்தால், பாவம் தீரும் வியாதி தீரும் என்று கூறினர், இதையெல்லாம், லுத்தரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரட்சிப்பை பெற இன்னும் எத்தனையோ கிரியைகள் அங்கே இருந்தது அனைத்திலும் பங்கு கொண்டார் ஆனால் எதிலும் அவருக்கு இரட்சிப்பின் நிச்சயம் கிடைக்கவில்லை.

நொந்து போனவராய் ரோமை விட்டு வெளியேறினார், அக்காலத்தில் இன்னொரு அக்கிரமும் நடந்தது, அது லுத்தரை மேலும் மனதளவில் கடுமையாய் பாதித்தது அதுதான் பாவ மன்னிப்பு சீட்டு வியாபாரம். ஒருவன் பாவம் செய்தால் அதிலிருந்து மன்னிப்பு பெற காசு கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும், அதில் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று எழுதப்பட்டிருக்கும், பாவத்துக்கு தக்கப்படி விலை நிர்ணயிக்கப்படும், இது முன் பதிவின் பேரில் பாவங்கள் நடக்கும் கேவலத்திற்கு விசுவாசிகளை தள்ளியது.

இதையெல்லாம் கண்ட லுத்தர் வேதாகமத்தில் விடை தேடினார், அக்காலத்தில் வேதாகமம் என்பது, காணக்கிடைக்காத பொக்கிஷமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அது லத்தீன் மொழியில்தான் இருக்கும், எனவே வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று யாருக்குமே தெரியாது. போப்பு என்ன சொல்லுகிறாரோ அதுதான் வேதமாக இருந்தது. ஆனால் லுத்தரோ லத்தீன் மொழி பயின்று வேதத்தை படிக்கலானார். வேதத்தின் வெளிச்சத்தில் கடவுள் அவருக்கு இரட்சிப்பின் உண்மையை வெளிப்படுத்தினார். அதுதான், ரோமர்.1:17 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். தொடர்ந்து வேதாகமத்தை ஆராய்ந்து அவர் கண்டறிந்த இரட்சிப்பின் இறையியல்தான் கிருபையினால் மட்டும், விசுவாசத்தினால் மட்டும், திருமறையினால் மட்டும், கிறிஸ்துவினால் மட்டும்.

ரட்சிப்பு என்பது இந்த நான்கு வழிமுறைகளில் மட்டும்தான் கிடைக்கும். தன் சுய கிரியைகளில் ரட்சிப்பு கிடைக்குமானால் இவை நான்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே, சுயமாய் இரட்சித்துக் கொள்ளும் திறமை மனிதனுக்கில்லை.

இந்த உண்மைகளை உலகிற்கு அறிவிக்க, இரவு பகலாக வேதாகமத்தை மொழி பெயர்த்தார். அது மட்டுமல்லாமல், எல்லாரும் தாய் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பலன் தான் இன்று நம் கரங்களில் வேதாகமமும், இரட்சிப்பும் இருக்கிறது. அவரில்லையேல், இரட்சிப்பை பெரும் விலை கொடுத்தே வாங்க வேண்டியதாயிருந்திருக்கும். வேதாகமத்தை நாம் கண்டிருக்கவே முடியாது. எனவேதான் மார்டின் லுத்தர் நம் கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இரட்சிப்பையே அடிமைப்படுத்த நினைத்த கூட்டத்திடமிருந்து மீட்கும் பணியை கடவுள் மார்டின் லுத்தரை கொண்டு நிறைவேற்றினார், எனவெ தான் சீர்திருத்தல் இரட்சிப்பின் புதியவரலாறு.

ஆனால் இன்று இதை நினைவுகூற லுத்தரன் சபைகளிலேயே ஆட்கள் இல்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆடல் பாடல் கொண்டாட்டம் என்றால் குவியும் கூட்டமாக நாமும் மாறிவிட்டோம். இரட்சிப்பை கொண்டாட ஆட்கள் இல்லாமல் போய்விட்டது.  உண்மையை உணருவோம் இரட்சிப்பை கொண்டாடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews