WORD OF GOD

WORD OF GOD

மன்னா













அன்பான உடன் விசுவாசிகளே இந்த காலை நேரத்தில் உங்களை வாழ்த்துகிறேன், ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இன்றைய தியான வசனம், ஏசாயா.58 :11 .


சரீர ஆரோக்கியம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான் ஒன்று, ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நம்மால் இயல்பாக செயல்பட முடியாமல் முடங்கி போகிறோம். நம்முடைய ஆரோக்கியம் தான் நம்மை செயல்படுகிற மனிதனாக வைத்திருக்கிறது.

எனவே ஆரோக்யத்தை பற்றிய கவனம் மிக முக்கியமானது. ஆனால் பல நேரங்களில் நம்முடைய பணியின் நிமித்தமாக,  அவசர வாழ்வின் நிமித்தமாக, நம்முடைய சரீர நலனை பற்றிய நியாபகம் இல்லாமல் நடந்துக்கொள்ளுகிறோம் , ஏன் அக்கறை இல்லாமல் நடந்துக்கொள்ளுகிறோம் என்று கூட சொல்லலாம், ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் கொடுத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம் இந்த சரீரம் தான்.

நமுடைய தியானப் பகுதியில் கடவுள் ஏசாயா தீர்க்கரின் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு சொல்லுகிற செய்தி, உன்னை நான் வழி நடத்துவேன், வறண்ட காலத்தில் திருப்தியை தருவேன், உன் எலும்புகளை நினமுள்ளதாக்குவேன்.  நீர்பாய்ச்சலான   தோட்டத்தை போலவும் வற்றாத நீரூற்றை போலவும் இருப்பாய் என்று சொல்லுகிறார்.

பொதுவாக நம்முடைய ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் போகிரதற்கான காரணங்கள்.

நாளைக்கு என்ன செய்ய போகிறோம் என்ற எதிர்காலத்தை பற்றிய பயத்தில் இந்த நாளின் சந்தோஷத்தை மறந்து ஓடிக்கொண்டிருப்பதால், எத்தனையோ பேர் சரியாக சாப்பிடாமல், ஓய்வெடுக்காமல் கடுமையாக் உழைப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் கடவுள் சொல்லுகிறார் நான் உன்னை வழி நடத்துவேன்.

வறுமை நிமித்தமாக, இழப்புகள் நிமித்தமாக, அநேகர் தங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் தங்கள் நிலையை பற்றி கவலை பட்டு, தங்கள் நிலையில் ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தோடு வாழ்கிறோம். கடவுள் சொல்லுகிறார் மகா வரட்சியான காலத்தில் நான் உன்னை, உன் ஆத்துமாவை திருப்தியாக்குவேன் என்கிறார்.

இவை மட்டுமல்ல இன்னும் அனேக காரணங்களுக்காய், அதாவது, குடும்ப பிரச்சனைகள், வேலையில் உள்ள பிரச்சனைகள், எதிர்ப்புகளை பற்றிய பயங்கள், தேவையற்ற சிந்தனைகள் போன்றவற்றால் அநேகர் ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். கடைசியாக கடவுள் சொல்லுகிறார் உன் வாழ்வை பசுமையான, அழகான தோட்டத்தை போலவும், எந்த காலத்திலேயும் வற்றி போகாத நீரூற்றை போலவும் உன் வாழ்வை மாற்றுவேன் என்று வாக்குரைக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக உன் எலும்புகளுக்கு வலிமை தருவேன் என்கிறார். எனவே இந்தக் காலை வேளையில் மகிழ்ச்சியோடு நம் பணிகளுக்கு புறப்பட்டு போவோம், நம் வழியும், நம் வலிகளும், நம் இக்கட்டுகளும் எதிர்ப்புகளும் நம் இறைவனுக்கு தெரியும், நம் வாழ்வை எதேன் தோட்டமாய் மாற்ற நம்மோடு பயணித்து வருகிறார், எனவே நம் வாழ்வை பற்றி பயப்படாமல் நம் ஆரோக்யத்தில் அக்கறை உள்ளவர்களாய் இருப்போம்.  இறைவன் கொடுத்த் இந்த மிகப்பெரிய போக்கிஷமாகிய சரீரம் ஆரோக்யமாக  இருந்தால் தான், இறைவன் தரப்போகிற  நம்முடைய வாழ்வின் மேனமைகளை அனுபவித்து சாட்சிகளாய்  வாழ்ந்து அவர் சித்தம் நிறைவேற்ற முடியும்.

குறிப்பாக மாணவர்கள் இந்த தேர்வு காலங்களில் எந்த அளவுக்கு அக்கறையோடு படிக்கிறீர்களோ அதே அளவுக்கு, ஆரோக்யத்திலும் கவனமுள்ளவர்களாய் இருங்கள் ஆரோக்யத்தை கெடுக்கும் எதையும் செய்யாதீர்கள் இறைவன் கொடுக்கும் வெற்றியை கொண்டாட முடியாமல் போகக்கூடும்.

நமக்கான சக்தியை இறைவன் நம் எலும்புகளுக்கு கொடுத்து, நம்மை காத்துக்கொள்வார். வெற்றியை ருசிக்க செய்து இயேசுவின் அற்புத வழி நடத்தலை உணர  செய்வார். எனவே இந்தக் காலை ஆரோக்யமான காலையாக அமைய இறைவன் நம்மை காத்துக்கொள்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.




கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்



அனபானவர்களே இந்த காலை நம்மோடு இறை செய்தியை பகிர்ந்துக்கொள்ள போகிறவர் எனது நண்பரும் போதகருமான அருள்திரு மில்டன் அவர்கள், இனி ஒவ்வொரு புதன் கிழமையும் அருள்திரு மில்டன் அவர்கள் இறை செய்தியை பகிர்ந்துக் கொள்வார்கள்.


பத்திரமாக வீடு திரும்புவோம்
சங்கீதம்.107 :23 -26 

23. கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.

24. அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

25. அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

26. அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது
 

அன்பான ஆண்டவருடைய பிள்ளைகளே, காலை வணக்கம்.

நாம் தினந்தோறும் நம்முடைய பணிக்காக வெளியில் சென்று, பணியை முடித்து எத்தனை பேர் பத்திரமாக வீடு திரும்புகிறோம்?

எண்ணில்லா ஆபத்துகள் நம்மை சுற்றி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, தீவிரவாதிகள், குண்டு போட்டு உயிர்களை கொல்லுகிறார்கள் , பெரிய விபத்துக்கள் நடக்கிறது, இதனால் நாம் பயப்படுகிறோம்.

எதிர்காலத்தை நினைத்து பயம்:

நாம் அனைவருமே எதிர்கால வாழ்வை எண்ணி பயப்படுகிறோம். நம்மால் எவ்வாறு சுகமாக வாழ முடியும்? என்று நம்பிக்கையில்லாமலே வாழ்கிறோம்.
சங்கீதம்:107:23-26ல்  கப்பல் பயணத்தைப் பற்றி, கூறுகிறார். கப்பல் பயணம் என்பது, ஆபத்து நிறைந்தது, புயல், ஆழம், அலை போன்ற பெரிய ஆபத்துக்கள் நிறைந்தது, கடலில் பயணம் செய்கிறவர்கள் பயந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது என்ன ஆபத்து வரும் என்று தெரியாது..

1912  ம்  ஆண்டு ஜெர்மன் தேசத்திலிருந்து புறப்பட்ட பெரிய பிரம்மாண்டமான கப்பல் TITANIC , மூழ்காத கப்பல் என்று சொல்லப்பட்டது, ஆனால் பயணம் செய்த சில நாட்களிலேயே பனி பாறையில் மோதி மூழ்கியது, அநேகர் மரித்துபோனார்கள்.

ஆனால் நம்முடைய வாழ்க்கை பயணத்தில், நாம் பயணம் செய்கிற கப்பலை இயக்குகிறவர் இயேசு ஆண்டவர், அவர் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார், பயப்பட வேண்டாம், மழை, புயல், பெரிய அலை, பனிபாறைகள் இது போல் நம் வாழ்வில் பிரச்சனைகள், பயம், தனிமை, மரணம், கைவிடப்படல், நோய், கவலை, . போன்ற பல பிரச்ச்சனைகளிலிருந்து கடவுள் நம்மை வழி நடத்துவார். வீட்டிற்கு நம்மை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பார்,.

எபிரெயர்:6 :17 -19 விசுவாசம் என்பது  நங்கூரம் போல் காணப்பட வேண்டும், என்று சொல்லபடுகிறது.

நிலையான நம்பிக்கை:

நம்முடைய நிலையான நம்பிக்கை ஆண்டவராகிய இயேசுவின் மீது, வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு பயணிக்கிறார், நம் விசுவாசம் நங்கூரம் போல் காணப்பட வேண்டும்.

ஏசாயா:33:20-22 ன் படி கடவுள் நம்முடைய நியாயாதிபதி, அரசன், அவர் நம்மை இரட்சிப்பார். ஆகவே பயப்படாமல் இந்த புதிய மாதத்தில் பயணம் செய்வோம். கடவுள் நம்மோடு இருக்கிறார், அவருடைய வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைப்போம், கடவுளின் வார்த்தை நிலையானது மாறாதது.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவுக்குள்ளாக
அருள்திரு, மில்டன் அருண்ராஜ் BA,BTh
revmilton1982@gmail.com


அன்பானவர்களே  இந்த புதிய வருடத்தின்,  இரண்டாவது மாதத்தின் முதல் நாளில் உங்களை இந்த ஊடகம் வழியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நல்ல நாளில் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை 1யோவான்.2 :1

என் அருமை பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாத படி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன், ஒருவன் பாவம் செய்வானானால், நீதிபரரான இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடம் பரிந்து பேசும் சகாயர்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி நமக்கு அனேக விஷயங்கள் தெரியும், அவரை பற்றி உங்களுக்கு என்னெவெல்லாம் தெரியும் என்று கேட்டால், நீங்கள் அனேக விஷயங்களை மிக அழகாக கோர்வையாக  உடனே சொல்லி விடுவீர்கள், பொதுவாக அவரை ரட்சகர், மீட்பர், அதிசயமானவர், நன்மை செய்பவர், மெய்யான மனிதன், மெய்யான கடவுள், இப்படி அனேக விஷயங்களை சொல்லுவோம், ஆனால் அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பதை  எத்தனை பேர் சொல்லுவோம் என்று தெரியாது, காரணம் அதை பற்றி நாம் யோசிப்பதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவை பற்றிய நம்பிக்கையில், அவர் நமக்காக பரிந்து பேசுகிறவர் என்பது மிக முக்கியம்.

நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் சுற்றி திரிந்த காலமெல்லாம் நன்மை செய்பவராகவே சுற்றி திரிந்தார், தனது வல்லமைகள்  அனைத்தையும் நன்மை செய்வதற்காகவே பயன்படுத்தினார். அதுமட்டுமா தன் பரிசுத்தமான உடலையும், விலைமதிப்பில்லா அவருடைய ஜீவனையும், அற்ப பாவிகளான நமக்காக கொடுத்தார். இப்படி இந்த உலகில் வாழ்ந்த போது நமக்காகவே செயல் பட்டவர் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

உயிர்த்தெழுந்த பிறகு பரலோகத்துக்கு போன ஆண்டவர் அங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்றால் பிதாவின் வலது பக்கம் நின்று  நமக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார், அதாவது பரத்துக்கு ஏறின பிறகும் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

பல நேரங்களில் எனக்காக பரிந்து பேச யார் இருக்கிறார்கள்? எனக்கு நன்மை செய்ய யார் இருக்கிறார்கள், என்று கலங்கி நிற்கிறோம் ஆனால் இந்த வசனம் தெளிவாக சொல்லுகிறது அவர் நமக்காக 24 மணி நேரமும் பரிந்து பேசி நமக்கான நன்மைகளை கடவுளிடமிருந்து பெற்று தருகிறார். நமக்காக இன்னும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த புதிய மாதத்திலும் நம் ஆண்டவர் நமக்காக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார், நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் நமக்காக நம் பக்கம் துணை நிற்பார், மாத்திரமல்ல நாம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாவங்களிலிருந்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசி நம்மை ரட்சிப்பார்.

எனவே தைரியமாய் விசுவாச மிகுதியோடு இந்த மாதத்தை துவங்க  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


அன்புள்ளவர்களே காலை ஸ்தோத்திரங்கள், இன்றைய தியான வசனம். சங்கீதம்.136 :1



நம்  வாழ்வுக்கு நன்மை செய்கிற கடவுளுக்கு நன்றி செலுத்துவது நம்முடைய வாழ்வில் நாம் பெற்றுக்கொள்கிற  பாக்கியமான நேரம். நாம் நம்முடைய கடவுளுக்கு நன்றி செலுத்த அனேக காரணங்கள் இருக்கிறது, அதிலே மிக முக்கியமான ஒரு காரணம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காலையை ஜீவனோடு காண்கிற பாக்கியத்தை நமக்கு தருகிறாரே அதற்காக ஒவ்வொரு காலையும் நான் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இங்கே சங்கீதகாரர் கர்த்தருக்கு  நன்றி செலுத்த இரண்டு காரணங்களை சொல்லுகிறார் ஒன்று அவர் நல்லவர்  என்பதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்கிறார், அவர் நல்லவரால் இருப்பதால் தானே ஒவ்வொரு நாளும் நன்மைக்கு நேராக நம்மை வழி நடத்துகிறார் ,  நம் ஜீவனுக்கும் சரீரத்திற்கும் தேவையானவைகளை, குறைவில்லாமல் கொடுத்து வருகிறார், எனவே நல்லவராக இருந்து இந்த காலையையும் நம்மை ஜீவனோடும் சரீர ஆரோக்யத்தொடும், காண செய்த கடவுளுக்கு நம் உதடுகளின் கனியாகிய நன்றியை ஏறெடுப்போம்.

இரண்டாவது காரணம் அவர் கிருபை என்றுமுள்ளதால் நன்றி செலுத்த கூறுகிறார். கடவுளுடைய கிருபை உள்ளவரை இருப்பதால் மாத்திரமே அவர் நமக்கு நன்மை செய்கிறார், காரணம் நம்மை மண் என்று அறிந்திருக்கிறார், அவரிடத்தில் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவர்களல்ல நாம், பாவத்தினாலும் பாவ சுபாவத்தினாலும், அவரை விட்டு நாம் வெகு தூஎரம் பிருந்து வந்துவிட்டவர்கள் நாம், ஆனாலும் தன் சொந்த குமாரனான  இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை அவருடைய சொந்த் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, அவருடைய சுத்த கிருபையால் ஜீவனோடும்  ஆரோக்யத்தொடும் நம்மை காத்து வருகிறார்.

எனவே இந்த காலையை நாம் கண்டதற்கு காரணம் கடவுள் நல்லவராகவும் கிருபையுள்ளவராகவும் இருப்பதால் மட்டுமே, எனவே ஒரு கணம் நின்று உள்ளத்தின் ஆழத்தில்  இருந்து நன்றி சொல்லி இந்த நாளை துவங்குவோம் அதுவே நம் வாழ்வை காக்கும், ஆமென் .

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.






அன்பான உடன் விசுவாசிகளே காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியானம் மீகா.7 :15

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

மீகா தீர்க்கர் இஸ்ரவேல் மக்களின்  பாவங்களை கடுமையாக விமர்சித்தவர், கொடிய தண்டனை வரும் என்று எச்சரித்தவர்.  அதே நேரத்தில் அவர்களுக்கு வரப்போகிற மீட்பையும் முன்னறிவித்தார்,

இந்த வசனம் இஸ்ரவேலர்களுக்கு வரப்போகிற மீட்பை முன்னறிவிக்கிற வசனம். அதாவது பாவம் செய்த இஸ்ரவேலர் மனந்திரும்பும்போது கடவுள் அவர்களை எப்படி நடத்துவார் என்பதை குறிப்பிடுகிறார்.

எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளிலே நடந்தது போலவே உன்னை அதிசயங்களை காணப்பன்னுவேன் என்கிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து எப்படி  அதிசயமாய்   புறப்பட பண்ணினார்?  அடிமைத்தன நுகம் தாங்க முடியாமல் தினந்தோறும்  கண்ணீரோடும் கவலையோடும் என்ன செய்வது? எப்படி தப்பிப்பது? என்று தெரியாமல் பயந்து பயந்து வாழ்ந்து வந்த காலம் அது,  மோசே போய் அவர்களுக்கு உதவி செய்ய எகிப்தியனை கொன்ற பிறகும் கூட அவனை நம்ப முடியாமல் அவனை ஏற்றுக்கொள்ளாமல் அவனையே அரசனிடம் சிக்க வைத்தனர், காரணம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற தெளிவான முடிவெடுக்கக்கூட முடியாத கனத்த இதயத்தோடு வாழ்ந்த  காலம் அது.

அடிமைகளாகவே வாழ்ந்து வாழ்ந்து போர் செய்யவோ எதிர்த்து நிற்கவோ தெரியாமல், அவ்வளவுதான் கதி என்று ஆண்குழ்ந்தைகளை எல்லாம் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நின்ற காலம் அது. கடவுளை கூப்பிடுவதை தவிர வேறு எந்த யுக்தியும் தெரியாத ஜனமாய் அவரை கத்தி, கத்தி கூப்பிட்டு கொண்டிருந்த காலம் அது.

இந்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார் கடவுள், எகிப்து என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்க்க இந்த சின்ன கூட்டத்தை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேவைக் கொண்டு வழி நடத்த ஆரம்பித்தார், இவர்களை அனுப்பினால் தான் தேசம் பிழைக்கும் என்று எகிப்திய அரசன் வேறு வழியே இல்லாமல் அவனே அனுப்புகிற நிலையை கடவுள் உண்டாக்கினார்.

அது மட்டுமா? வழியில் சந்தித்த அத்தனை போரிலும் போர் பயிற்சி என்றால் என்னேவேன்றுக் கூட தெரியாத இந்த ஜனத்தை, உன் பாளையத்தின் நடுவில் நான் இருக்கிறேன் என்று துணிவு சொல்லி அவர்களுக்காக இவர் யுத்தம் பண்ணி ஜெயிக்க வைத்தார்.

உன்னை அதே அதிசயங்களை காண செய்வேன் என்று கடவுள் மீகா தீர்க்கரின் வழியாக நமக்கு தைரியம் ஊட்டுகிறார், நம்மிடத்தில் என்ன இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதை விட, இஸ்ரவேலை அதிசயமாய் நடக்க பண்ணின இறைவனின் துணை எனக்கு இருக்கிறது, இனி எல்லாம் ஜெயமே  என்ற மேலான நம்பிக்கையில் இந்த நாளை நாம் துவங்க இறைவன் அருள் புரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு .கில்பர்ட் ஆசீர்வாதம்






கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது


உடன் விசுவாசிகளுக்கு காலை நேர வாழ்த்துக்கள். இன்றைய தியான வசனம் பிலிப்பியர் .4 :4

 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

பவுல் பிலிப்பு திருச்சபைக்கு எழுதிய இந்த நிருபத்தில் அவர் வலியுறுத்துகிற பிரதான உபதேசம், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்பதே, எனவே இந்த நிரூபத்திற்கு சந்தோஷ நிரூபம் என்ற பெயரும் உண்டு.

எப்பொழுதும் சந்தோஷமாய்  இருக்க வேண்டும் என்று கூறுகிறார், உண்மையில் ஒரு மனிதனால் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க முடியுமா?  அழ ஒரு காலம் சிரிக்க ஒரு காலம் உண்டு என்று பிரசங்கி கூறுகிறாரே அப்படி இருக்கும்போது எப்போதுமே சிரித்து மகிழ்கிற வாழ்க்கை சாத்தியமாகுமா?

துன்பங்களும் துயரங்களும், போராட்டங்களும் நிறைந்த இந்த வாழ்வில், தினந்தோறும் எதிர்ப்புகளின் மத்தியில் நன்மைகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிற வாழ்வில் எப்படி நம்மால் சந்தோஷமாய் இருக்க முடியுமா? ஆனால் பவுல் சந்தோஷமாய்  இருங்கள் என்று கூறுகிறார்.  பவுல் எப்போதுமே இப்படி சாத்தியமே இல்லாத விஷயங்களை பற்றியே பேசுகிறாரே  என்ற சந்தேகம் அவர் நிரூபங்களை படிக்கிற நம் அத்தனை பேருக்குமே தோன்றும்.

ஆனால் பவுல் கூறுகிற எந்த விஷயங்களும் சாத்தியமில்லாத விஷயங்கள் இல்லை காரணம். இவை பவுலின் வார்த்தைகள் இல்லை நம்மை உண்டாக்கி வாழ்வித்து, கிறிஸ்துவைக் கொண்டு நம்மை மீட்ட சர்வ வல்லவரின் வார்த்தைகள். எப்படி எல்லா நேரத்திலும் சந்தோஷமாய் இருக்க முடியும் என்பதையும் பவுல் கற்றுத் தருகிறார்.

6 ம் வசனத்தில் உங்கள் வேண்டுதல்களை  எல்லாம் கவலை படாமல் இறைவனுக்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்களை ஆட்கொள்ளும் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய போராட்ட வாழ்வில் சந்தோஷமாய்   வாழ்வது சிரமம் தான் ஆனால்  துக்கத்தை சந்தோஷமாய்  மாற்றுகிற இறைவனிடம் நம் வேண்டுதலை சொல்லிவிடும்போது அவர் பார்ர்த்துக் கொள்கிறார். உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்  என்று நம்மை தாங்குபவர் அல்லவா அவர்,

எனவே நம் விண்ணப்பங்களை கிறிஸ்துவின் மூலமாய் இறைவனுக்கு தெரியப்படுத்தி, இந்த காலையை சந்தோஷமாய் தைரியமாய்  துவங்குவோம்.. சந்தோஷமும், சந்தோஷ பொலிவும் நம் முகத்தில் தெரிய தக்கதாய் நம் பணிகளை துவங்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்,
அருள்திரு.கில்பர்ட் ஆசிர்வாதம்.


எனதருமை ஆண்டவருடைய பிள்ளைகளே உங்கள் யாவருக்கும் எனது காலை நேர
ஸ்தோத்திரங்கள். இந்த நாளின் காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை,   உபாகமம் . 33-27

 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.



இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடவுளுடைய பலத்தினால் விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற கானானை நெருங்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், மோசே தன் இறுதிக்காலத்தை நெருங்கி விட்டார்,

தன் மரணத்தை உணர்ந்த மோசே இஸ்ரவேல் மக்களை அழைத்து ஆசீர்வாதமாய் கூறுகிற வார்த்தைகளே 33 வது அதிகாரம். காரணம் மோசே இல்லாமல் கானானை நோக்கி நடக்கிற துணிச்சல் இஸ்ரவேல் மக்களுக்கு இல்லை. பொறுமையாகவும், வல்லமையாகவும், தைரியமாகவும், கடவுளுடைய  பெலத்தினாலும் மிக சிறப்பாக வழி நடத்தி வந்த தலைவர் இனி நம்மோடு வரமாட்டார் என்பது இஸ்ரவேல் மக்களை அசைக்க கூடிய செய்தி.

தங்கள் தைரியத்தையும், விசுவாசத்தையும் இழந்துப் போகக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது, மோசேவை விட சிறந்த தலைவனை அந்த நேரத்தில் அவர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. எனவே  அவர்களை அழைத்து, அவர்களை தைரியமூட்டுகிற வசனங்களில் ஒரு வசனம் தான் நம்முடைய தியானப் பகுதி.

இந்த வசனத்தில் மோசே கூறுகிற செய்தி, தேவன் உனக்கு அடைக்கலம், அவருடைய புயம் உனக்கு ஆதாரம், அதாவது இதுவரை இஸ்ரவேலர்களை பாதுகாக்கும் அடைக்கலமாக இருந்தது நானல்ல கடவுள் என்கிறார், மாத்திரமல்ல, உங்களை மழையிலும், வெயிலிலும் ,  குளிரிளுமிருந்தும், எதிகரிளினால் உண்டான பயங்கர ஆபத்துகளிலிருந்தும் உங்களை விடுதலையாக்கி வழி நடத்தியது நானல்ல வல்லமையுள்ள கடவுளின் தோள்களே இதை செய்தது என்கிறார்.

தொடர்ந்து அவரே உனக்கு முன் சென்று உன்னை நடத்துவார் என்றும், உன் சத்துருக்களை துரத்துவார்  என்றும் மிக தெளிவாக இஸ்ரவேலர்களை தைரிய படுத்துகிறார், காரணம் நடத்துபவர் கடவுள். மோசேவை  நம்பியல்ல அவரை நம்பி போங்கள் என்று  உற்ச்சாகப்படுத்துகின்றார் .

நம்முடைய வாழ்விலும் இந்த உலகத்தின் ஆபத்துக்களிலும், தீவினைகளிலும் நம்மை பாதுகாத்து நடத்துகிற சக்தி அவர் ஒருவருக்கு மாத்திரமே உண்டு.

எனவே ஒன்றை மாத்திரம் நாம் மறந்துவிடக்கூடாது நாம் எங்கே  இருந்தாலும், எங்கே வாழ்ந்தாலும், எங்கே பயணமானாலும், எத்தனை சவால்கள் நம்மை சுற்றி இருந்தாலும், அவர் நமக்கு அடைக்கலமாகவும், அவருடைய புயங்கள் நமக்கு ஆதாரமாகவும் இருக்கிறது மாத்திரமல்ல அவர் நமக்கு முன் நின்று நம்மை வழி நடத்தி நமக்கு வருகிற சத்துருக்களை துரத்துகிற சக்தியை நமக்கு தருகிறார்,  யேசுகிறிஸ்து இந்த உலகத்தை விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் இதோ யுக முடிவுபரியந்தம் நான் உன்னுடனே இருக்கிறேன் என்பது தானே.

தைரியமாய் இந்த நாளை துவங்குவோ௦ம்  அவரது, புயமும், பாதுகாப்பும், வழிநடத்தலும் நமக்கு துணையாக இருக்கிறது ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்

அருள்திரு கில்பர்ட் ஆசீர்வாதம்.


அன்பானவர்களே இன்றைய காலை மன்னாவை எனது நண்பரும், போதகருமான அருள் திரு மில்டன் அவர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவருக்கு என் நன்றிகள். மறக்காமல் கருத்திடுங்கள்

ஏசாயா.43 :18 -19

உலக இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள், அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். சுதந்திர இந்தியாவை நாமே ஆளும்படி குடியரசு இந்தியாவை நாம் உருவாக்கியுள்ளோம். இங்கே விடுதலை என்ற வார்த்தைக்கு அர்த்தம் நமக்குத் தெரியும், அடிமைக்குத்தான், விடுதலையின் ஆழம் தெரியும்.

கடவுள் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, தன் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பாபிலோனிய சிறையில் இருந்து விடுதலை தந்தார்.

வசனம்.18

பழைய காரியங்களை நினைக்க வேண்டாம். நமது வாழ்வில் ஏற்பட்ட பழைய நிகழ்வுகளை நினைத்தால், நமக்கு வரபோகிற புதிய வாழ்வுகூட கசந்து போகும். பழைய வாழ்வை நினைக்க வேண்டாம். அதை நினைத்தால் துன்பமும் துயரமும் நம்மை தொடர்ந்து வரும்.

வசனம்.19

இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன்  . நீங்கள் அதை நம்பவில்லையா? என்று கடவுள் நம்மிடம் கேள்வி கேட்கிறார். பல நேரங்களில் நாமும், நம்பிக்கை இழந்து விடுகிறோம். உதாரணமாக பேதுரு, இயேசுவைப் போல் கடல் மீது நடக்க முயற்ச்சித்தார், கொந்தளிக்கும் கடலை பார்த்த உடனேயே பயந்து பொய் நம்பிக்கை இழந்து போனார், ஆனாலும் இயேசு ஓடி வந்து தூக்கி நம்மை மீட்டு வாழ்வு தருகிறார், நம்பிக்கை ஊட்டுகிறார்.

இங்கே நமக்கு ஆண்டவர் சொல்லுகிறார், நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன், என்கிறார்.

ஆண்டவர் நமக்கு இந்த ஆண்டு நல்ல வழியை உண்டாக்குவார், புதிய பாதை காட்டுவார், பாதைக் காட்டும் மா யெகோவா அவர். திக்கு திசை தெரியாமல் நீ குழம்பி போனாலும், நான் உன்னை வழி நடத்துவேன் என்கிறார். அவாந்திரவேளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்,

பாலை நிலத்திலே, தண்ணீர் இல்லாத இடங்களில் தண்ணீரை நான் உண்டாக்குவேன் என்கிறார். நம் ஆண்டவரால் கூடாத காரியம் இல்லை, இந்த வருடம் நம்முடைய தாகங்களைத் தீர்க்க, அவரே ஜீவ  நதியாய் பாலைவனம் போன்ற  நம் வாழ்வில் வருகிறார்  அவரை பருகி, நாம் தாகம் தீர்ப்போம், இந்த ஆண்டு நம்முடைய தாகத்தை அவர் தீர்ப்பார். எந்த பிரச்சனை என்றாலும் அவரிடம்  வாருங்கள், வழியை உண்டாக்குவார், புதிய காரியத்தை செய்கிறார், தாகம் தீர்ப்பார், நம் இந்திய தேச திரு நாட்டில் குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிற நாம் ஒற்றுமையாக, ஒரு தாயின் பிள்ளையாக வாழ்வோம். நாம் மொழி, இனம், ஜாதி, மதம், கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றால் பிரிந்து வாழ்கிறோம்.

ஆனால், நாம் அனைவரும் இந்தியர்கள், உடன்பிறவா சகோதர சகோதரிகள் நாம், ஒருவரையொருவர் மதிப்போம், மதங்களை மதிப்போம், உணர்வுகளை மதிப்போம், temple , church , mosque , இவை ஆறு  எழுத்துக்கள், Bible , Quran , Geeta , இவை ஐந்து  எழுத்துக்கள் ஒற்றுமையை பாருங்கள், எழுத்துக்களே  ஒற்றுமையாக  இருக்கும்போது நாமும் ஒற்றுமையாக வாழ்வோம்.

மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், பிரிவினை, இல்லாத சாதி, மதம், இனம், மொழி, போன்ற பிரிவினைகள் களைந்து இந்த சுதந்திர  இந்தியாவில், புது வாழ்வு வாழ்வோம். குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம், கடவுள்   நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. மில்டன் அருண்ராஜ் BA BTh



அன்பான தள நண்பர்களே இந்த காலையில் உங்கள் யாவருக்கும் எனது ஸ்தோத்திரங்கள். இந்த இனிமையான பொழுதில் நாம் தியானத்திர்க்கென்று எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை     மத்தேயு 4 :23 
"பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்".


நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி பட்டவர் என்பதை மிக தெளிவாக சொல்லுகிற வசனம் தான் இன்றைக்குறிய நம்முடைய தியானப் பகுதி.
நம்முடைய ஆண்டவர் ஊழியத்தை துவங்குகிற காலம் வந்தவுடனே அவர் புறப்பட்டு போனது கலிலேயாவை நோக்கி, (மத்.4 :13 ) 

கலிலேயா என்பது புற ஜாதிகள் அதிகமாக  வாழ்கிற பகுதி, அது மாத்திரமல்ல ஏழைகளும்  பாமரர்களும் வாழ்கிற பகுதி, அந்த இடத்தில் ஆண்டவர் தன் ஊழியத்தை முதன் முதலாக துவங்குகிறார்.

எருசலேமில்  அவர் தன் ஊழியத்தை துவங்கியிருந்தால், ஒரே நாளில் அவர் மிகவும் பிரபலமாகியிருப்பார், காரணம் எருசலேம் தான் யூதர்களின் தலை நகரம். அதுமாத்திரமல்ல படித்தவர்களும், அரசாங்க அதிகாரிகளும் , மதத் தலைவர்களும்,  வாழ்கிற பகுதி  எப்போதும் மக்கள் நடமாடிகொண்டிருக்கும் புனித தலம் அங்கே ஆண்டவர் ஒரு அற்புதத்தை செய்திருந்தால் ஒரே நாளில் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்ற தீர்க்க தரிசியாக மாறியிருப்பார்.

ஆனால் ஆண்டவரோ அதை விரும்பவில்லை காரணம் இயேசு கிறிஸ்து தன்னை பிரபலமாகி கொள்ள வந்தவரல்ல,  மக்களுக்கு நன்மை செய்வதற்காக புறப்பட்டு வந்தவர், எனவே தான் துனபத்தின் நடுவில் வாழ்கிற கலிலேயர்களை தேடி போனார், மரண இருளில் வாழ்ந்துக்கொண்டிருந்த  ஜனங்களை தேடி போனார்.

அவர் இன்றும் துன்பத்தில் இருக்கிற ஜனத்தின் பிரதிநிதியாகவே பிதாவின் வலது புறம் நின்று பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் எனவே நம் துன்பங்களை நீக்கும் கிறிஸ்து நம்மோடிருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடு இந்த நாளை துவங்குவோம் ஆமென்.

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்





தள நண்பர்களுக்கும், உடன் விசுவாசிகளுக்கும் அதிகாலை ஸ்தோத்திரங்கள். ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்  உங்களை வாழ்த்துகிறேன். இந்த காலை வேளையில் உங்களோடு நான் பகிர்ந்துக்கொள்ள எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, உபாகமம்.28 :11

" உனக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்கு பரிபூரண நன்மை உண்டாக கட்டளையிடுவார் ."

உபாகமம் 28 ம் அதிகாரம் ஆசீர்வாதத்தின் அதிகாரம். கடவுளை நம்புகிற ஜனத்தை எப்படியெல்லாம்  ஆசீர்வாதிக்கிறார் என்பதை, இந்த அதிகாரம் முழுவதும் காணலாம். குறிப்பாக நம் தியானப்பகுதியில் ஒட்டு மொத்த ஆசீர்வாதங்களையும் ஒரே வசனத்தில் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக மூன்று தேவைகளை குறிப்பிடுவோம், 1.உணவு, 2. உடை,  3 .உறைவிடம் . இந்த  மூன்றிற்காகதான்  எல்லா மனிதரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.  நம் தியான பகுதியும் கடவுள் நமக்கு தருகிற மூன்று பரிபூரண ஆசீர்வாதங்களை குறிப்பிடுகிறது.

1 .உன் கர்ப்பத்தின் கனி:
கடவுளை நம்புகிற அவருடைய ஜனத்தின் கர்ப்பத்தின் கனிகளை அவர் ஆசீர்வதிக்கிறார்.  நாம் வாழும் உலகில் பிள்ளைகளை பற்றிய பயம் தான் நம்மில் மேலோங்கியுள்ளது. அவர்கள் பாதுகாப்பு, கல்வி, எதிர்காலம் என ஒவ்வொன்றையும் பற்றி கலங்கி தவிக்கிறோம், ஆனால் இந்த காலையில் இறைவன் கூறுகிறார் நம் கர்ப்பத்தின் கனி பரிபூரனப்படும், அதாவது ஒரு குறையும் இல்லாமல் நமது பிள்ளைகள் வளர்ந்து செழிப்பார்கள்.

2 .மிருக ஜீவன்களின் பலன்.
பொதுவாக பழைய ஏற்பாட்டு  காலத்தில், ஒரு மனிதனின் சொத்துக்கள் அவனுடைய மிருக ஜீவன்களை வைத்துதான் கணக்கிடப்படும், அப்படியானால் கடவுள் நம் உடைமைகளையும் (சொத்துக்களையும்) பரிபூரனப்படுத்துகிறார்.

3 .நிலத்தின் கனி
நிலத்தின் கனி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார், நிலத்தின் கனி என்பது சாதாரண வார்த்தை போல் தான் தோன்றுகிறது, ஆனால் அது சாதாரண ஆசீர்வாதம் அல்ல. காரணம் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாக நாம் மேலே கண்ட  மூன்று தேவைகளுமே, நிலத்தில் இருந்து கிடைப்பவைதான், எனவே அவைகளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் ஜீவனைக் கொண்டு நம்மை மீட்டு புதிய இஸ்ரவேலர்களாய்  நம்மை மீட்ட கடவுள், அடிப்படை தேவைகளை மட்டும் நமக்கு பரிபூரணமாய் தருகிறவறல்ல வாழ்வுக்கு தேவையான அத்துணை நன்மைகளையும் குறைவில்லாமல் தருகிறவர் எனவே தைரியமாய் வாழ்ந்து இறைவனின் நல்லாசி பெறுவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.





விசுவாச  அன்பர்களுக்கு  அதிகாலை ஸ்தோத்திரங்கள் . இன்றைய காலை நேர தியான வசனம், நீதிமொழிகள்.8 :௦ 17௦..

 "  அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள்                  என்னை  கண்டடைவார்கள். "
காலை என்பது  எப்போதுமே இனிமையான பொழுதுதான் , காரணம் ஒவ்வொரு நாள் காலையும் இறைவனின் மகிமையால் தான் கண் விழிக்கிறோம். அநேகர் எழும்போதே அந்த நாளுக்குரிய கவலையோடு கண் விழிப்பார்கள், பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் காலையின் இனிமையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது, சூரிய உதயத்தையும், காலை பனியையும், இள வெயிலையும்  ரசிக்க முடியாமல் அந்தந்த  நாளுக்குரிய கவலையில் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

இந்த  பாபர ஓட்டத்தின் நடுவே இறைவனை தேட நேரம் இல்லாமல், ஒரு சல்யூட் மட்டும் வைத்துவிட்டு ஓடுகிறோம்.  ஆனால் நீதி மொழிகள் 8 :௦17 தெளிவாக கூறுகிற அறிவுரை, அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவர்கள்  அவரைக் கண்டடைவார்கள் என்பதே.

 நேரம் பார்த்து கடவுளை தேடவேண்டிய அவசியம் இல்லைதான், நேரம் பார்த்து அவர் நன்மை செய்பவரும் அல்ல, ஆனாலும் காலையின் இனிமையில், அவரோடு ஒரு 15  நிமிடம் செலவிட்டு ஒரு ஜெபம் ஒரு சின்ன தியானத்தோடு ஒரு நாளை துவங்கினால் அது எப்படி , இருக்கும்,  அந்த நாள் முழுதும் ஒரு சமாதானம் நம்மை ஆட்கொள்ளுமே அதுதான் இறைவன் நம்மோடு பயனிப்பதல்லவா?  ஒரு நாள் முழுதும் அவர் நம் பக்கத்தில்  இருப்பதை உணர முடியும் அல்லவா?

அதைதான் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது, காரணம் தாவீது  தன் நாளை  துவங்கும்போதெல்லாம் ஜெபத்தோடு துவங்கினவர். (சங்கீதம்.55 :17 ) அதுதான் தன் வாழ்வுக்கு பலமாக அமைந்தது என்கிறார், என்  எதிரிகளை ஜெபத்தின் பலத்தால் தான் மேற்கொண்டேன் என்கிறார்.

இந்த ரகசியம் தெரிந்தவர் தான் சாலமன். எனவே தான் அவரும் அதையே தன் அறிவுரையாக நமக்கு அளிக்கிறார். நம்முடைய ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து இரவு துவங்கி அதிகாலை வரை ஜெபிக்கும் வழக்கம் கொண்டவரல்லவா , எனவேதான் தான் அவரும் தன் சீடர்களை  ஜெபிக்க சொல்லி அறிவுறுத்தினார், ஜெபிக்க கற்றும் கொடுத்தார்.

நம்மை இந்த காலைவேளையில் சில நிமிடங்கள் இறைவனிடம்   அர்ப்பணிப்போம். இந்த வசனத்தின்  வழியாக நம்முடைய உள்ளத்தின் வேண்டுதல்களை அவரிடம் சமர்ப்பிப்போம். இந்த காலை வேளையை அவரோடு துவங்குவோம் நம் எதிர்ப்புகளை வேரறுக்க பலன் பெறுவோம்.

கடவுள் இந்த நாள் முழுதும் நமக்கு துணை நிற்பாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


காலை மன்னா 20.01.2011

அன்புள்ளோரே  இனிய காலை வணக்கங்கள்.


இன்றைய தியான வசனம், ஏசாயா.54 :15
எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
இஸ்ரவேல்  மக்கள் இறைவனின் மேலான அன்பை ருசித்தவர்கள், அதே நேரத்தில் இறைவனின் திரு வார்த்தைகளுக்கு விரோதமாய் நடந்த பொது இறைவனால் கடுமையாக தண்டனையும் பெற்றனர்.


எகிப்தின் அடிமைதனத்திலிருந்த இஸ்ரவேல் மக்களை, தன் சுத்த கிருபையினாலும் இரக்கத்தினாலும்  மீட்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் கொண்டுவந்து குடியமர்த்தினார். ஆனால் அவர்களோ வாழ்வளித்த இறைவனை மறந்து தன் தன் சுய இச்சையில் நடக்க ஆரம்பித்தனர்.


இதனால், இரட்சிப்பை கொடுத்த கடவுளே,  பாபிலோனியர்களால் 70 வருட சிறையிருப்பு  உண்டாக அனுமதித்தார், இதனால் மனமுடைந்த இஸ்ரவேலர்கள் இரட்ச்சிப்பு வரும் என்ற நம்பிக்கையே  அற்றுப் போனார்கள். பாபிலோனியர்களின் கடுமையான  துன்புறுத்தலால் நரக வேதனையை அனுபவித்தார்கள்.


இந்த காலக் கட்டத்தில் இறைவன் அவர்களுக்கு தந்த வாக்குத்தத்த செய்திதான் இந்த திரு வசனம்.


உனக்கு விரோதமாய் கூடுகிறவர்களே உன் பட்சத்தில் வருவார்கள் என்கிறார். அதாவது, அவர்களை துன்புறுத்திய பாபிலோனியர்களே ஆதரவாய் வருவார்கள் என்கிறார், உன் எதிரியே உனக்கு நண்பன் ஆவான் என்கிறார், சாத்தியமே இல்லாததை சத்தியமாக கூறுகிறார் இறைவன். அவர் சொன்னபடியே அதே பாபிலோன் தேசத்தில் அரசனான கோரேஸ்  என்ற மன்னனைக் கொண்டே இஸ்ரவேலரை விடுதலையாக்கினார்.


அதே வல்லமையோடுதான்  இன்று நம்மையும் வழி நடத்தி வருகிறார் நம் இறைவன்.


நம் வாழ்வில் நமக்கு விரோதமாய் எழுகின்ற சக்தி எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஆதரவாய் மாறும் என்பதை இந்த திருவசனம் நமக்கு தெளிவாக்குகிறது. நித்திய  மரணத்தை கொண்டுவந்த  பாவத்திலிருந்தே கிறிஸ்துவின் வழியாய் நம்மை மீட்டவர் அல்லவா நம் கடவுள்.


அந்த தைரியத்தோடு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இந்த நாளை துவங்குவோம், நமக்கு எதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் வாய்க்காதே  போகும். நமக்கு ஆதரவாய் மாறும்.


அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்


காலை மன்னா 19 .01 .2011

அன்பான தள நண்பர்களுக்கும் உடன் விசுவாசிகளுக்கும் காலை ஸ்தோத்திரங்கள்.
இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை  உபாகமம்.26 :19a
"நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளை பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னை சிறந்திருக்கும்படி செய்வேன்".
நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய முன்னேற்றத்திற்காக போராடி வருகிறோம். நம்ம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களை பார்க்கும்போதெல்லாம் நாமும் அப்படி உயர வேண்டும் என்கிற ஆவல் நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே வருகிறது.

அதற்காகத்தான் கடுமையாகவும். நம் சுய சந்தோஷங்களை மறந்தும் கூட முன்னேற்றத்திற்காக போராடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள், பொருளாதார ரீதியாகவோ. சரீர ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதாவது ஒரு சிக்கலில் நாம் நிற்கும்போது, யாராவது ஒருவர் வந்து நமக்கு உதவ மாட்டார்களா? யாராவது நம் வளர்ச்சிக்கு துணை நிற்க மாட்டார்களா என்ற நோக்கம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.

ஆனால், இந்த பரந்து விரிந்த உலகில், நமக்கு உண்மையாய் உதவி செய்பவர்களை கண்டுபிடிப்பது மிக மிக கடினமாகவே இருக்கிறது.

ஆனால் நம்முடைய தியானப் பகுதியில், கடவுள் தன்னை நம்பி தன் வார்த்தையில் விசுவாசம் வைத்து வாழ்கிற இஸ்ரவேல் மக்களுக்கு, தான் கொடுக்கப் போகிற புதிய தேசமாகிய கானான் தேசத்தில்  எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை தருவேன் என்பதை வாக்குரைக்கிறார்.

அவர் உண்டாக்கிய எல்லா ஜாதிகளிலும் அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் சிறந்திருக்கும்படி செய்வாராம்.

அதாவது அவரை நம்புகிற அவருடைய ஜனத்தை அவரை போலவே உயர்த்தி வைப்பேன் என்கிறார், நமக்கு உதவ, நம்மை உயர்த்த, யாருமே இல்லாத நிலையில் நின்றாலும் நம்மை அழைத்து அவருடைய ஜனமாய் சேர்த்துக்  கொண்ட கடவுள் நமக்கு உதவி செய்து, நம்மை உயர்த்தி ஜாதிகளில் சிறந்த ஜனமாக வைப்பார்.

இந்த திட நம்பிக்கையோடும், நம்மை உயர்த்த சொந்த குமாரனையே சிலுவையில் தந்த கடவுள் இவைகளை அருளாமல் இருக்க முடியாது என்கிற விசுவாசத்தோடும், இந்த நாள் முழுவதும் அவர் நம்மோடு நமக்கு துணையாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடும் நம் பணிகளை தொடர கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்..

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

காலை மன்னா 18.01.2011

சங்கீதம்.27 :1
"கர்த்தர் என் வெளிச்சமும்  என் இரட்சிப்புமுமானவர் யாருக்கு பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்".

அன்புள்ள உடன் விசுவாசிகளே அதிகாலை அன்பின்  ஸ்தோத்திரங்கள்.
பயம் என்பது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று.
பொதுவாக இருள் நமக்கு ஒரு இனம் புரியாத பயத்தை உண்டாக்குகிறது,

பாவம் நமக்குள் கடுமையான பயத்தை உண்டாக்கி குற்ற உணர்வில் செயல்பட முடியாதபடி கட்டுபடுத்திவிடுகிறது. எனவே வேதம் பாவத்தை வெறும் பாவம் என்று சொல்லாமல் பாவ இருள் என்று கூறுகிறது,  இருளை விட பல மடங்கு பயத்தை உண்டாக்குகிறது.

மேலும் , தினந்தோறும் நாம் பயந்து பயந்து வாழ்வது ஜீவனுக்காக, நம்  உயிரை,   நம் பிள்ளைகளின் உயிரை பாதுகாக்க போராடுகிறோம்.  எனவே உயிருக்கும் உடலுக்கும் ஆரோக்யத்துக்கும் தீங்கு உண்டாக்குகிற எதையும் சுத்தமாக நம்மை விட்டு விலக்கி
ஜீவனை நிறைவாய் காத்துக்கொள்ள முயலுகிறோம் .

ஆனால் தாவீதோ எனக்கு இருளை பற்றியோ ஜீவனை பற்றியோ பயம் இல்லை என்கிறார். அதற்கான காரணத்தையும் தெளிவாக முன்வைக்கிறார். கர்த்தர் என் வெளிச்சம் என்கிறார். ஆம் அவர் உலகின் ஒளியான கிறிஸ்து அல்லவா? பாவத்தின் கொடூர இருளில் இருந்து நம்மை மீட்டவர் அல்லவா?, பாதாளத்தின் வாசலில் இருந்த நம்மை பரலோக பாதைக்கு திருப்பினவர் அல்லவா? அவரை  உண்மையாய் பற்றிக்கொண்ட யாவருக்கும் அவர் உண்மையுள்ளவராய் இருந்து நம்முடைய எல்லா பயத்திலிருந்து நம்மை மீட்டு இரட்ச்சிப்பவர் அல்லவா?

அது மாத்திரமல்ல இந்த ஜீவனின் உத்தரவாதம்  இல்லாத உலகத்தில் நம் ஜீவனுக்கு அரணாக இருப்பவர் அவரே. எனவே அவரை நம்பினோர் யாதொரு தீவினைக்கும் பயப்பட வேண்டியதில்லையே.

எனவே ஜீவனின் பெலனும் வாழ்வின் ஒளியுமான கிறிஸ்துவில் சந்தோஷமாய் இந்த நாளை துவங்குவோம் ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்

காலை மன்னா 17 .01 .2010

அன்பான தள நண்பர்களே, உடன் விசுவாசிகளே, இனிய காலை வணக்கங்கள்.
இன்று காலை தியானத்திர்கேன்று  எடுத்துக்கொண்ட கடவுளின் திரு வார்த்தை,
"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார் "சங்.115 :12 a
நாம்  ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதே பல விஷயங்களை  மனதில் நினைத்துக்கொண்டே எழுகிறோம். மாணவர்கள் காலையில் எழும்போது தங்களின் வீட்டுப்பாடம், இந்த நாளுக்குரிய பாட வேளைகள், என்று பல நினைவுகளோடு எழுகின்றனர்.

தாய்மார்களோ, என்ன சமையல் செய்யலாம், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், கணவரை ஆயத்த படுத்த வேண்டும், பிறகு தாங்கள் தயாராகி வேலைக்கு போக வேண்டும் என்ற பல நினைவுகளோடு எழுகிறார்கள்.

தந்தைகளோ இன்று நேரத்திற்கு பணிக்கு போகவேண்டும், டூ வீலர் சரியாக இருக்கிறதா? பெட்ரோல் இருக்கிறதா? ட்ராபிக் இல்லாமல் இருக்குமா? இப்படி பல நினைவுகளோடு எழுகிறார்கள்.

இந்த அவசர உலகில் தங்களை பற்றி நினைப்பதற்கு கூட நேரமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நம்மை பற்றியும் நம்முடைய பாதுகாப்பை பற்றியும் மட்டுமே  நினைத்து உருகிக்கொண்டிருக்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் நம்மை படைத்து பராமரித்து பாதுகாத்து வருகிற நம்முடைய கடவுள். அதைதான் மிக தெளிவாக நம்முடைய தியான வசனம் கூறுகிறது. நினைப்பவர் மாத்திரமல்ல, ஆசீர்வதிப்பவர், எப்படி ஆசீர்வதிக்கிறார்?

சங் .121 :4  ன் படி உறங்காமல் தூங்காமல் நம்மை பாதுகாத்து வருகிறார். நம்முடைய பாதுகாப்பை பற்றி நாமே கவலைப்படாமல் இருந்தாலும் அவர் நம்மை எப்போதும் தன் உள்ளத்துள் நினைத்திருக்கிறதினால், நம்மையும் நம் பிள்ளைகளையும் நம் உடமைகளையும் பாதுகாத்து வருகிறார்.

அந்த மன திடத்தோடு இந்த நாளை நாம் துவங்குவோம் கடவுள் நம்மை நினைத்திருக்கிறார். ஆமென்.

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

காலை மன்னா

அன்புள்ள சகோதரர்களே காலை வணக்கங்கள் ஏசாயா.43 :5  ன் வழியாக கடவுள் கூறுகிறார் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

ஒவ்வொரு காலையை துவங்குவதும் பெரிய சவாலாக உள்ளது  காரணம், போட்டி பொறாமை நிறைந்த உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மை நிலை நிறுத்திக்கொள்ள தினந்தோறும் போராட வேண்டியுள்ளது, உதவி செய்யவோ  துக்கிவிடவோ ஆள் இல்லாமல் தவிக்கிறோம், உண்மையான அன்புள்ள நண்பர்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறோம்.

எந்த நாள் எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். நன்மைகளையும் நல்லவர்களையும் தேடி தேடி அலுத்து போன வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த காலை வேளையில் கடவுள் நம்மோடு பேசுகிற வார்த்தை நான் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே என்பதே. இந்த முழு உலகையும் படைத்த நம் கடவுள் இன்று நமக்கு துணையாக இருக்கிறார். பயப்படாதே என்று தைரியமுட்டுகிறார்.

இந்த நாளில் நம்முடைய அத்துணை நிகழ்வுகளிலும் அவர் நம்மோடு   இருந்து நம்மை பாதுகாக்க போகிறார். அந்த முழு நிறைவோடு இந்த நாளை நாம் துவங்க கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமென்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews