WORD OF GOD

WORD OF GOD

Wednesday, March 7, 2012

சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்



அன்பான மாணவ‌ செல்வங்களே, குறிப்பாக தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் 12  ம் வகுப்பு மாணவர்களே, இதோ உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தேர்வை சந்திக்கிறீர்கள், யாருடைய‌ கட்டாயத்திற்காகவும் இத்தேர்வை நீங்கள் சந்திக்கவில்லை, உங்கள் எதிர்காலத்துக்காய் சந்திக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தேர்வுக்கு ஆயத்தப்படுங்கள், கல்விதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக நம் நாட்டில் இப்போது உருவாகிவிட்டது எனவே கவனமாய் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

சுமையாக தேர்வை நினைக்காதீர், இதுதான் உங்கள் பள்ளிக்கூட வாழ்வில் உங்கள் சக நண்பர்களோடு சந்திக்கப்போகும் கடைசி தேர்வு என்ற சுகமான அனுபத்தோடு தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள். வெற்றி என்ற பட்டத்தை பெற தீவிரமாய் உழையுங்கள், வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதாக கிடைக்கவில்லை. எனவே கடுமையான உழைப்பு அவசியம், இந்த சில நாட்கள் நீங்கள் கஷ்ட்டப்பட்டுவிட்டால், வரப்போகிற எதிர்காலம் சுகமானதாக இருக்கப்போகிறது. இது  துன்பமல்ல உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் போடப்போகிற அஸ்திபாரம்.

மனதை ஒருமுகப்படுத்த காலையில் சில மணித்துளிகளை ஆண்டவரோடு செலவிடுங்கள், அவரோடு பேசுங்கள் வல்லமையை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள், அவரே நம் உழைப்பை ஆசீர்வதிக்கிறவர். நாம் உயர தன்னை மாய்த்துக் கொண்டவரல்லவா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவர் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார், தேர்வு பயமோ, பத‌ட்டமோ, இல்லாமல் உங்கள் உள்ளத்தை நிறைந்த சமாதானத்திற்கு நேராய் நடத்துவார், காரணம்

அவர்  உங்கள் முகத்தை பார்ப்பவரல்ல இருதயத்தை பார்ப்பவர் (1சாமுவேல். 16:7). . 

அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.  சங்கீதம் 34:5 

 இந்த வசனத்தை நினைவில் நிறுத்துங்கள், தினமும் அவரை நோக்கி பாருங்கள், சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்.


விசேஷமாய் ஜெபிக்க விரும்புவோர் உங்கள் பெயரை இமெயில் அனுப்புங்கள் உஙளுக்காக ஜெபிக்க காத்திருக்கிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, March 5, 2012

சிறுவர் கொண்டாட்டம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை நமது சிறுவர் கொண்டாட்டம் குழு கிருஷ்ணகிரியில் உள்ள இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் கீழ் இயங்கி வருகிற போலியோ காப்பகத்துக்கு பயணித்தது, ஏற்கெனவே நாம் வருவதை அறிந்திருந்த விடுதி காப்பாளர் மற்றும் சக பணியாளர்கள் அன்போடு நம் சிறுவர் குழுவை வரவேற்றுக் கொண்டனர். சரியாக 10;30 மணிக்கு நிகழ்ச்சிகளை திட்டமிட்டப்படி துவங்கினோம்.

நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய அனுபவம், காரணம் பிள்ளைகள் அனைவரும் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களை மகிழ்விக்க கர்த்தர் பெரிய வாய்ப்புக் கொடுத்தார். அவர்கள் மத்தியில் வல்லமையாய் கடவுள் நம்மை பயன்படுத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் உபவாசத்தோடு ஆயத்தப்பட்டிருந்தோம், ஒருவேளை சோர்வடைந்துவிடுமோ என்ற பயமிருந்தாலும், கர்த்தர் கொஞ்ச‌மும் சோர்வின்றி வழி வழிடத்தினார்.


பிள்ளைகள் அனைவரையும் அங்குள்ள விடுதி காப்பாளர்களும், உடன் பணியாளர்களும் மிகவும் அன்பாக கரிசனையாக நடத்திவருவதற்காய் கர்த்த‌ருக்கு நன்றி செலுத்தினோம். அவர்களது ஊழியம் உண்மையான இயேசுவின் ஊழியம். அவர்களது இந்த ஊழியத்தில் பங்கெடுத்தது உள்ளார்ந்த மன நிறைவை தந்தது.

அனைத்து செலவுகளையும் கர்த்தர் கிருபையாய் குறையின்றி சந்தித்தார். அதற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பணிக்காய் செலவழிப்பது தூய உணர்வை தந்தது. பிள்ளைகளது உறுதிக்கும் விசுவாசத்துக்கும் முன்னால், நமது விசுவாசம் கேள்விக்குறியதே. அனைத்து பிள்ளைகளும் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள், அனைவரும் பொதுவாக சொல்லியிருந்த கருத்து இந்த ஊழியம் எங்களை ஆவிக்குரிய வாழ்வில் மகிழ்வித்தது என்பதே. இதுவே நமது ஊழியத்தின் நோக்கம் அதை சரியாய் செய்ய கடவுள் நமது குழுவை சரியாக பயன்படுத்தினார்.


நிகழ்ச்சிக்காக, சகோதரர் பாரத் அவர்கள் பெங்களூரிலிருந்து தன் பணிகளுக்கிடையே உற்சாகமாக வந்து பங்குக் கொண்டார். அன்று அவரது பிறந்த நாள் அதையும் பொருட்படுத்தாது பிள்ளைகளோடு தன் நேரத்தை செலவிட்டதுமல்லாமல், அவர்களிடத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இப்படியொரு உலகம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று அவர் கேட்ட கேள்வி என்னை வெகுவாக பாதித்தது.

அன்பு தம்பிகளாகிய நமது குழுவினர், பெரும் உற்சாகத்தோடு பிள்ளைகளை இயல் இசை நாடகம் வழியாக மகிழ்வித்தனர். நமது சிறப்பு பரிசுகளையும் பிள்ளைகளோடு பகிர்ந்துக் கொண்டோம், தொடர்ந்து இந்த உழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Monday, February 13, 2012

புதிய தலைமுறை உருவாக்குவோம்!!!



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என்  இனிய ஸ்தோத்திரங்கள். காலத்தின் போக்கு நம்மை மிகவும் அச்சுறுத்துகிறது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் என்னால் ஜீரணிக்க முடியாதவை. 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது ஆசிரியரை கொடூரமாய் கொலை செய்திருக்கிறான், ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தை உடைத்து  நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர், இன்னொரு கல்லூரியில் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் விளையாட்டில் சண்டை ஏற்பட்டு ஒரு மாணவனின் மண்டை உடைந்திருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு மருத்துவரை கொடூரமாக ஒருவன் கொலை செய்திருக்கிறான், மன்னிக்க முடியாத பாதகம் அது ஆனால் அதை தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து, நோயாளிகள் வீதிகளில் கிடந்தார்கள். அதே தவறை மரியாதைக்குரிய மருத்துவர்களும் செய்தார்கள்.

வளரும் தலை முறையும், வளர்ந்தோறும் ஒரே மாதிரி இருக்கிறார்களோ என்ற எண்ணம் இவைகளை கண்டால் ஏற்படுகிறது, இது கால மாற்றமா? அல்லது மனித மனநிலை மாற்றமா? இதற்கு தீர்வு என்ன? இந்த விவாதங்கள் இப்போது அவசியமானது, பிரச்சினை முடிந்து போனது, ஆனால் இனியொரு சம்பவம் இதுபோல் நடைபெற கூடாதென்றால், இதன் காரணத்தை கண்டறியும் விவாதங்கள் மிகவும் முக்கியமானது. முக்கியமாக கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களும் இதில் தீவிரமாய் இற‌ங்க வேண்டும். சமூக அக்கறை நம்மில் கிளர்ந்தெழ வேண்டும்.

அன்பு இப்போது எங்கே போனதென தெரியவில்லை. தன்னை தவிர யார் செத்தாலும் பரவாயில்லை என்ற மோசமான சுபாவம் மனிதரில் வேரூன்றி வருவதைதான் இது காண்பிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பை பெற்று தருவதற்கா? ஒழுக்கத்தை கற்பிப்பதற்கா? படித்தவன் படிக்காதவன் என்ற சமூக வேறுபாட்டை உருவாக்கவா? சமத்துவத்தை உருவாக்கவா? மனனம் செய்ய தெரியாதவன் முட்டாளா? பணம்தான் மனிதனின் பெருமைக்குரிய அடையாளமா? பண்பாடா? கோபத்தை வெளிப்படுத்த வன்முறைதான் ஒரே வழி என்று யார் கற்றுக் கொடுத்தது? நாமனைவருமே இக்கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும்.

ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்னாரே அது எதற்காக? அப்படி செய்ய நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கிறோம்? முட்டள்தனமான உபதேசமாக தோன்றுகிறதா? அப்படியானால் சொன்னவர் முட்டாளா? மறு கன்னத்தை காட்டினால் என்ன நடக்கும்? அடித்தவனை திருப்பி அடித்தால்தானே திருந்துவான்? அப்படியானால் சிறைக்கு போன அனைவரும் திருந்திவிட்டார்களா? இயேசுவை கடவுள் என்று சொல்லுகிற நாமே இன்னும் அவரது உபதேசத்தின் ஆழங்களை உணர்ந்துக் கொள்ளவில்லை. 

நமக்கு அதன் ஆழம் தெரியாததால் நாமும் பின்பற்றுகிறதில்லை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறதில்லை. திருச்சபைகள் பணம் ஈட்டுவதிலும், கட்டிடங்களை பெரிதாக்குவதிலும் காட்டுகிற ஆர்வத்தை வரும் தலைமுறை சரியாக உருவாக வேண்டும் என்பதில் காட்டுவதில்லை. எத்தனை திருச்சபையில் ஞாயிறு பள்ளிகள் சரியான முறையில் நடை பெறுகிறது. உங்கள் திருச்சபையின் ஞாயிறு பள்ளிக்கு முறையான பாட புத்தகம் இருக்கிறதா? எத்தனை சபைகளில் தனி மனித ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறது? சமத்துவத்தை போதிக்க வேண்டிய சபைகளில் ஏன் இப்படி? நாம் கிறிஸ்துவின் ஆழமான உபதேசங்களை இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை.

ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று ஆண்டவர் ஏன் கூறினார்? அப்படி காட்டினால் என்ன நடக்கும்? ஒரேயொரு உதாரணம்.. மருத்துவர்கள் தாங்கள் செய்த வேலை நிறுத்தத்தை விட்டு, அதற்கு மாறாக. உயிர் காக்கும் மருத்துவரை கொன்ற மாபாதகத்தை கண்டிக்கும் வண்ணம், அனைத்து மருத்துவர்களும் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரமும் ஓய்வின்றி, விடுமுறையில் இருப்பவர்களும் வந்து மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்த்திருந்தால்? இலவசம் கூட வேண்டாம் ஒரு நாள் வேலை செய்து தங்கள் கோபத்தை பதிவு செய்திருந்தால்? என்ன நடந்திருக்கும் அவர்களை பற்றிய தவறான கருத்துக்கள் அனைத்தும் அந்த சில மணி நேரங்களில் மாறி போயிருக்குமே? மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருப்பார்களே, ஒருவருக்காய் ஆயிரம் நோயாளிகளை தவிக்க வைத்தார்கள் என்ற அவப்பெயர் வந்திருக்காதே????? கதா நாயகர்களாய் மக்களின் உள்ளத்தில் நிறைந்திருப்பார்களே. மீடியாக்கள் மருத்துவர்களின் புகழை உலகம் முழுக்க உயர்த்தியிருக்குமே. அதைதான் இயேசு கிறிஸ்து செய்ய சொல்லுகிறார்.

அடிக்கிறவன் கதா நாயகன் அல்ல என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள சொல்லுகிறார். இதைதான் வருங்கால தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டுமானால் நாம் முதலில் அதை சரி என உணர வேண்டும். மறு கன்னத்தை காட்ட சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முட்டாளல்ல அதை கடைப்பிடிக்க தெரியாத நாம்தான்...... உணருவோம் ஆண்டவரின் வார்த்தைகளை கடைப்பிடிக்க முயலுவோம். முறையான் தலைமுறை உருவாக உண்மையான் கிறிஸ்தவர்களாய் ஒன்றினைவோம்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews