WORD OF GOD

WORD OF GOD

Friday, January 6, 2012

(2012) புத்தாண்டு எப்படியிருக்கும்??



அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், புத்தாண்டு துவங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிய போகிறது. நமக்கு எப்போதும்  புதியவைகளின் மீது ஈர்ப்பு அதிகம், குழந்தைகளுக்கு ஒரு புதிய பொம்மையோ சாக்கலேட்டோ  வாங்கி கொடுத்தால், அவர்கள் ஆனந்தத்தில் துள்ளுவதை காணமுடியும். அதே போல பெரியவர்களாகிய நமக்கும் கூட  புதியவைகளின் மீது அதீத ஈர்ப்பு உண்டு.  ஒரு புதிய வாகனம் வாங்கினால், புதிய ஆடை வாங்கினால், புதிய வீடு கட்டினால், நம் உள்ளம் ஆனந்தத்தில் துள்ளும். அதே போலதான் இந்த புதிய வருஷத்தில் அடியெடுத்து வைக்கும்போதும் இயல்பாகவே நம் உள்ளம் துள்ளுகிறது.

நான் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைக்காக திருப்பத்தூருக்கு போக வேண்டியிருந்தது, நான் போகிற வழியிலே புத்தாண்டு பிறந்தது, அப்போது சாலையோரங்களில் கூடியிருந்த வாலிபர்கள் சாலையில் சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பயணிகளோடு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார்கள், அநேகர் இனிப்புகளை கொடுத்தார்கள், பயணம் எனக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. அதே நேரத்தில் ஒவ்வொருவரது ஆனந்தத்திற்கு பின்னால் ஒரு எதிர்பார்ப்பு  இருந்ததை என்னால் உணர முடிந்தது, ஏன் எனக்குள்ளும்
 புத்தாண்டை குறித்து அனேக  எதிரபார்ப்புகள் இருக்கிறது, நான் எதிர்பார்க்கிற நன்மைகள், நான் ஊழியத்திற்காகவும், குடும்பத்திற்காகவும்
 திட்டமிட்டிருக்கிற காரியங்கள் இந்த புத்தாண்டிலாவது நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பும், இந்த புதிய வருஷத்தில் வாழ்க்கை எப்படியிருக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இது நம் ஒவ்வொருவருக்குமே இயல்பான ஒன்றுதான் எனவேதான் அநேகர் புத்தாண்டு பிறக்கும் முன்னரே தங்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்பதை அறிய ஜோசியங்கள் கேட்பது  மக்கள் மத்தியில் இயல்பாக  இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

ஆனால் இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதை என்னால் நிச்சயம் முன் கூட்டியே சொல்ல முடியும். அதற்கு முன் நாம் கடந்து வந்த 2011ம்  ஆண்டு எப்படியிருந்தது என்பதை ஒரு முறை பார்ப்போம், ஜப்பானிலும் உலகெங்கிலும் பூகம்பங்கள், பொருளாதாரத்தில் வல்லரசான அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி, உலகெங்கும் ஏற்பட்ட அனேக புரட்சிகள், இலங்கையில் நடந்த கொடூரமான யுத்தம். . லஞ்சம், ஊழல், பெருகிப்போயிருந்தது, மக்கள் நலம் காணும் தலைவர்களே இல்லை என்கிற அளவுக்கு நல்ல தலைவர்கள் இல்லாமல் போய்விட்டது. தானே புயலின் கோரத்தாண்டவம், பெட்ரோல் விலை ஏற்றம், பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு. இப்படி அனேக இக்கட்டுகளை சந்தித்தோம்.  நாம் பெற்ற சில  நன்மைகள் இந்த செய்திகளுக்குள் மறைந்தே  போனது.

ஏன் இப்படியெல்லாம் நடந்தது? அன்பானவர்களே ஆண்டவர் நமக்கு தெளிவாய் கூறியிருக்கிறார் இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு (யோ.16:33) என்று. ஆம் நாம் நன்மைகளின் மத்தியில் மட்டும் அல்ல தீமைகளின் மத்தியிலும் வாழ்ந்து வருகிறோம். இந்த உலகம் தீமைகளினால் நிறைந்தது. டிவி, இன்டர்நெட், சினிமா, அரசியல், இவைதான் உலகின் மிகப்பெரிய சக்திகளாக உருவெடுத்துள்ளன இதில் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? என்றால் உங்கள் பதில் என்ன? இதுதான் நாம் வாழும் உலகம். எனவே இந்த ஆண்டும் இந்த உபத்திரவங்கள் ஒன்றும் அப்படியே மாயமாய் நம்மைவிட்டு ஓடிவிடாது. உபத்திரவங்களின் மத்தியில்தான் இந்த புதிய வருடமும் இருக்கும். ஆனால் நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் என்று ஏசாயா.41:10௦ ல் கூறியுள்ள கடவுள் நம்மை ஜெயமாய் நடத்துவார்.

கடந்த ஆண்டெல்லாம், நாம் சந்தித்த அத்தனை உபத்திரவங்களிலும் வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற (சங்கீதம்.65:11) இந்த சர்வ வல்லவர் நம்மொடிருந்ததால் ஜெயமாய் முடித்துவிட்டோம், ஜீவனோடும், ஆரோக்யத்தொடும், அற்புதமாய் முடித்துவிட்டோம். இந்த புதிய ஆண்டிலும் வாக்குமாறா  நம் உண்மை நாதர் நம்மோடிருக்கப்போகிறார், இந்த வருஷத்தையும் உபத்திரவங்களின் நடுவே நன்மையால் நமக்கு முடிசூட்டப்போகிறார். அவரை  மட்டும் நம்பி இந்த புதிய ஆண்டை துவங்குவோம், நம்மை அல்ல நம்மை சுற்றியுள்ளோரையும்  அல்ல உலகையும் அல்ல அதின் வாழ்வையும் அல்ல, வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறவரை மட்டும் நம்பி இவ்வாண்டை துவங்குவோம். இவ்வாண்டையும்  உபத்திரவங்களின் மத்தியில் ஜெயமாய் முடிப்போம். ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews