WORD OF GOD

WORD OF GOD

Tuesday, June 28, 2016

இயேசுவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?



ஒரு நற்செய்தி கூட்டம் நடத்த வேண்டுமானால் 6 மாதம் முன்பு ஒரு பெரிய ஊழியரிடம் அனுமதி வாங்க வேண்டும், 3 மாதம் முன்பு விளம்பரம் துவங்க வேண்டும், குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவும் நடந்த பின் கூட்டத்திற்கு ஒரு 500 பேர் வருவார்கள் அல்லது பெரிய கூட்டம் என்றால் 1000 ம் பேர் வருவார்கள்.

ஆனால் இயேசு ஆண்டவர் எந்த விளம்பரமும் இன்றி யாருக்கும் தெரியாமல் வனாந்திரமான இடத்திற்கு போனார் அங்கே பெண்கள் குழந்தைகள் தவிர்த்து, ஆண்கள்மட்டுமே 5000 பேர் வந்தனர் (மத்தேயு.14:21), எவ்வளவு பெரிய அற்புதம்? இன்று சபைகளில் ஆண்களை பார்ப்பதே அபூர்வம்..  இவ்வளவு பெரிய கூட்டத்தை சத்தமின்றி கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்ற கிறிஸ்து, அதை அப்படியே பயன்படுத்தி ஒரு சில கோடிகளில் ஆலயத்தை கட்டி சில ஆயிரம் கோடிகளில் சொத்துக்களை சேர்த்து ஒரு மாபெரும் மகானாக, உலகையே வலம் வரும் கார்ப்பரேட் பிரசங்கியாராக பரிணமித்திருக்கலாம். அல்லது..

அடசியிலும், பதவியிலும் அங்கம் வகித்து மக்களை ஏமாற்றி  சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சதுசேயர், வேதபாரகர், பரிசேயரோடு கொஞ்சம் ஒத்துழைத்து ஒரு பதவியை வாங்கி பக்காவாக செட்டில் ஆகியிருக்கலாம். செய்தாரா?

இல்லை மாறாக அதிகாரத்தில் இருந்துக் கொண்டு மக்களை கொள்ளை அடிக்கும் சதுசேயர், பரிசேயர், வேதபாரகர் போன்றோரை கூட்டம் போட்டு மிக கடுமையாக கண்டித்தார்...

(வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். மத்தேயு.23:2-3)

(குருடரான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். மத்தேயு.23:24-27)

இது இவருக்கு தேவையா? எவன் எக்கேடு கேட்டால் இவருக்கு என்ன? வந்தமா  பிரசங்கம் பண்ணமா போனோமான்னு இருக்கணும்.. அல்லது வந்தமா பிரசங்கம் கேட்டமா போனோமான்னு இருக்கணும். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? அதான் அவர் குணாதிசயத்தையே கொலை செஞ்சான் - மதுபான பிரியன், போஜன பிரியன் (லூக்கா.7:34), “மதிமயங்கிய பைத்தியக்காரன்” (மாற்கு .3:21), பிசாசு பிடித்தவன்(யோவான்.8:48) பிசாசுகளின் தலைவன் (மத்.12:24) கள்ள உபதேசகன்(யோவான்.9:21) அப்பிடி இப்டினு அடிச்சு விட்டான், அது மட்டுமா???????? திட்டமிட்டு தூக்கினான் பாருங்க சிலுவை மரத்துல தேவையா இதெல்லாம்? 

அதுசரி எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை??? நானும் என் வேலையை பாக்குறேன். அய்யய்யோ உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை நீங்களும் போய் உங்க வேலையை பாருங்க.. 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews