WORD OF GOD

WORD OF GOD

Tuesday, December 27, 2011

கிறிஸ்துமஸ் செய்தி

TEXT: JOHN.1:14

அன்புக்குரிய இந்த இணைய தளத்தின் வாசகர்களே, உங்கள் யாவரையும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அநேக துன்பங்களும் சோதனைகளும் சில நாள் என்னை பதிவிட விடாமல் தடுத்துவிட்டன, ஆனால் அந்த துன்பங்களோ சோதனைகளோ என்னையா, ஊழியத்தையோ முடக்கிவிடாமல் கர்த்தர் பார்த்துக் கொண்டார். அந்த அனுபவங்களை ஒரு சாட்சியாக விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தற்போது கிறிஸ்துமஸ் செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற  நான்கு பேர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை   கூறுகிறார்கள், அந்த நான்கு பெரும் அவரது வாழ்க்கை வரலாற்றை  எழுதுவதற்கு மிகவும் தகுதியானவர்கள், காரணம் நான்கு பேரில் இருவர் இயேசுவின் நேரடியான சீடர்கள், இருவர் பவுலின் சீடர்களாக திருப்பணி செய்தவர்கள். இந்த  நான்கு பேரில் மூவர் ஒரே மாதிரியாக இயேசுவின் வரலாறை எழுதுகின்றனர், ஆனால் யோவான் மட்டும் மிகவும் வித்தியாசமாக எழுதுகிறார். அவரது எழுத்துக்கள் இயேசுவின் வரலாற்றை பிரதிபலிப்பதைவிட அவரது ஆள்தன்மையை  பிரதிபலிப்பதிலேயே கவனாமாக இருப்பதை வாசிக்கும்போது அறியலாம்.

எல்லாரும் (மாற்கு தவிர) இயேசு எங்கே பிறந்தார், அவரது பெற்றோர் யார்? அவர் எந்த ஊரில் பிறந்தார்? அவரது பிறப்பின் போது நடந்த சம்பவங்கள் என்ன என்பதை எழுதுவதில் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் யோவானோ, அவர் எப்படிப்பட்டவர் என்பதை மட்டுமே கூறுகிறார். அவர் இரண்டு கருத்துருக்களால் மண்ணில் பிறந்த இயேசு பாலன் யார் என்று கூறுகிறார். முதலாவது வார்த்தையானவர் என்றும், இரண்டாவது ஒளியானவர் என்றும் கூறுகிறார். கடவுள் இவ்வுலகை படைக்கும் முன் வார்த்தையாக இருந்தார், அவர் தனது வார்த்தையை கொண்டே இம்முழு பிரபஞ்சத்தையும் படைத்தார். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல கடவுளுடைய வார்த்தையினாலேயே பிழைப்பான் என்று ஆண்டவர் கூறுகிறார். படைக்கவும், காக்கவும், பிழைப்பூட்டவும் வல்லமை கொண்டது கடவுளுடைய வார்த்தை. அது மாத்திரமல்ல கடவுள் வார்த்தையாகவே இருந்தவர், அவருக்கு உருவமில்லை. இரண்டாவது அவர் ஒளியாக இருந்தார், ஒருவரும் சேரக்கூடாத ஒளி என்று அவரை பற்றி வேதாகமம் கூறுகிறது. அவர் படைத்த சூரியனையே நாம் நெருங்க முடியாதென்றால், அவரை நெருங்க முடியுமோ? எனவேதானே கடவுள் மோசேவிடம் என் முகத்தை கண்டால் நீ சாகவே சாவாய் என்றார்.

அன்பானவர்களே, அவரை நாம் நெருங்குவது சாத்தியமில்லாத காரியம், அவரும் நம்மை நெருங்க முடியாது, காரணம் மனுஷனை நினைப்பதற்கும், மனுஷ குமாரனை கண்ணோக்குவதற்கும் அவன் எம்மாத்திரம். அவர் நம்மை நெருங்கினாலும் நாம் பொசுங்கி போவோம். எனவே நம் மீது அன்பு கொண்ட கடவுள், நம்மையெல்லாம் காக்க, நாம் நெருங்க முடியாத அவரை நெருங்கி சேர, நாம் காணும் வகையில், நாம் தொட்டு உணரும் வகையில், நம்மோடு வாசம் செய்ய சாதாரண மனிதனாய் அவதரித்து பிறந்தார். இனி கடவுள் நமக்கு எட்டாத உயரத்தில் இருப்பவரல்ல, நம்மோடு வாசம் செய்பவர் அதைதான் யோவான், வார்த்தையானவர் மாமிசமானார், கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நம்மோடு வாசம்பண்ணினார் என்று குறிப்பிடுகிறார்.


அன்பானவர்களே, கடவுள் மனிதனாய் பிறந்திருக்கிறார், இனி கவலையை தூக்கியெறியுங்கள், காரணம் அவர் பிறந்த நோக்கம் நம்மை உயர்த்துவது. எதெல்லாம் நம்மை தாழ்த்துகிறதோ அதையெல்லம் நம்மிலிருந்து அகற்ற, பாவம், பிசாசு, மரணம், ஆகியவற்றிலிருந்து நம்மை விடுதலையாக்க விடுதலை வீரர் பிறந்துவிட்டார். மகிழ்வோம், களிகூறுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1 comment:

  1. X-Mas Message very nice & Touching Pastor Gilbert.


    With Prayers.Rev.LSD.Gladson Deva Premkumar

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews