WORD OF GOD

WORD OF GOD

Monday, March 5, 2012

சிறுவர் கொண்டாட்டம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை நமது சிறுவர் கொண்டாட்டம் குழு கிருஷ்ணகிரியில் உள்ள இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் கீழ் இயங்கி வருகிற போலியோ காப்பகத்துக்கு பயணித்தது, ஏற்கெனவே நாம் வருவதை அறிந்திருந்த விடுதி காப்பாளர் மற்றும் சக பணியாளர்கள் அன்போடு நம் சிறுவர் குழுவை வரவேற்றுக் கொண்டனர். சரியாக 10;30 மணிக்கு நிகழ்ச்சிகளை திட்டமிட்டப்படி துவங்கினோம்.

நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய அனுபவம், காரணம் பிள்ளைகள் அனைவரும் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களை மகிழ்விக்க கர்த்தர் பெரிய வாய்ப்புக் கொடுத்தார். அவர்கள் மத்தியில் வல்லமையாய் கடவுள் நம்மை பயன்படுத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் உபவாசத்தோடு ஆயத்தப்பட்டிருந்தோம், ஒருவேளை சோர்வடைந்துவிடுமோ என்ற பயமிருந்தாலும், கர்த்தர் கொஞ்ச‌மும் சோர்வின்றி வழி வழிடத்தினார்.


பிள்ளைகள் அனைவரையும் அங்குள்ள விடுதி காப்பாளர்களும், உடன் பணியாளர்களும் மிகவும் அன்பாக கரிசனையாக நடத்திவருவதற்காய் கர்த்த‌ருக்கு நன்றி செலுத்தினோம். அவர்களது ஊழியம் உண்மையான இயேசுவின் ஊழியம். அவர்களது இந்த ஊழியத்தில் பங்கெடுத்தது உள்ளார்ந்த மன நிறைவை தந்தது.

அனைத்து செலவுகளையும் கர்த்தர் கிருபையாய் குறையின்றி சந்தித்தார். அதற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பணிக்காய் செலவழிப்பது தூய உணர்வை தந்தது. பிள்ளைகளது உறுதிக்கும் விசுவாசத்துக்கும் முன்னால், நமது விசுவாசம் கேள்விக்குறியதே. அனைத்து பிள்ளைகளும் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள், அனைவரும் பொதுவாக சொல்லியிருந்த கருத்து இந்த ஊழியம் எங்களை ஆவிக்குரிய வாழ்வில் மகிழ்வித்தது என்பதே. இதுவே நமது ஊழியத்தின் நோக்கம் அதை சரியாய் செய்ய கடவுள் நமது குழுவை சரியாக பயன்படுத்தினார்.


நிகழ்ச்சிக்காக, சகோதரர் பாரத் அவர்கள் பெங்களூரிலிருந்து தன் பணிகளுக்கிடையே உற்சாகமாக வந்து பங்குக் கொண்டார். அன்று அவரது பிறந்த நாள் அதையும் பொருட்படுத்தாது பிள்ளைகளோடு தன் நேரத்தை செலவிட்டதுமல்லாமல், அவர்களிடத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இப்படியொரு உலகம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று அவர் கேட்ட கேள்வி என்னை வெகுவாக பாதித்தது.

அன்பு தம்பிகளாகிய நமது குழுவினர், பெரும் உற்சாகத்தோடு பிள்ளைகளை இயல் இசை நாடகம் வழியாக மகிழ்வித்தனர். நமது சிறப்பு பரிசுகளையும் பிள்ளைகளோடு பகிர்ந்துக் கொண்டோம், தொடர்ந்து இந்த உழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Monday, February 13, 2012

புதிய தலைமுறை உருவாக்குவோம்!!!



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என்  இனிய ஸ்தோத்திரங்கள். காலத்தின் போக்கு நம்மை மிகவும் அச்சுறுத்துகிறது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் என்னால் ஜீரணிக்க முடியாதவை. 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது ஆசிரியரை கொடூரமாய் கொலை செய்திருக்கிறான், ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தை உடைத்து  நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர், இன்னொரு கல்லூரியில் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் விளையாட்டில் சண்டை ஏற்பட்டு ஒரு மாணவனின் மண்டை உடைந்திருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு மருத்துவரை கொடூரமாக ஒருவன் கொலை செய்திருக்கிறான், மன்னிக்க முடியாத பாதகம் அது ஆனால் அதை தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து, நோயாளிகள் வீதிகளில் கிடந்தார்கள். அதே தவறை மரியாதைக்குரிய மருத்துவர்களும் செய்தார்கள்.

வளரும் தலை முறையும், வளர்ந்தோறும் ஒரே மாதிரி இருக்கிறார்களோ என்ற எண்ணம் இவைகளை கண்டால் ஏற்படுகிறது, இது கால மாற்றமா? அல்லது மனித மனநிலை மாற்றமா? இதற்கு தீர்வு என்ன? இந்த விவாதங்கள் இப்போது அவசியமானது, பிரச்சினை முடிந்து போனது, ஆனால் இனியொரு சம்பவம் இதுபோல் நடைபெற கூடாதென்றால், இதன் காரணத்தை கண்டறியும் விவாதங்கள் மிகவும் முக்கியமானது. முக்கியமாக கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களும் இதில் தீவிரமாய் இற‌ங்க வேண்டும். சமூக அக்கறை நம்மில் கிளர்ந்தெழ வேண்டும்.

அன்பு இப்போது எங்கே போனதென தெரியவில்லை. தன்னை தவிர யார் செத்தாலும் பரவாயில்லை என்ற மோசமான சுபாவம் மனிதரில் வேரூன்றி வருவதைதான் இது காண்பிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பை பெற்று தருவதற்கா? ஒழுக்கத்தை கற்பிப்பதற்கா? படித்தவன் படிக்காதவன் என்ற சமூக வேறுபாட்டை உருவாக்கவா? சமத்துவத்தை உருவாக்கவா? மனனம் செய்ய தெரியாதவன் முட்டாளா? பணம்தான் மனிதனின் பெருமைக்குரிய அடையாளமா? பண்பாடா? கோபத்தை வெளிப்படுத்த வன்முறைதான் ஒரே வழி என்று யார் கற்றுக் கொடுத்தது? நாமனைவருமே இக்கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும்.

ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்னாரே அது எதற்காக? அப்படி செய்ய நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கிறோம்? முட்டள்தனமான உபதேசமாக தோன்றுகிறதா? அப்படியானால் சொன்னவர் முட்டாளா? மறு கன்னத்தை காட்டினால் என்ன நடக்கும்? அடித்தவனை திருப்பி அடித்தால்தானே திருந்துவான்? அப்படியானால் சிறைக்கு போன அனைவரும் திருந்திவிட்டார்களா? இயேசுவை கடவுள் என்று சொல்லுகிற நாமே இன்னும் அவரது உபதேசத்தின் ஆழங்களை உணர்ந்துக் கொள்ளவில்லை. 

நமக்கு அதன் ஆழம் தெரியாததால் நாமும் பின்பற்றுகிறதில்லை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறதில்லை. திருச்சபைகள் பணம் ஈட்டுவதிலும், கட்டிடங்களை பெரிதாக்குவதிலும் காட்டுகிற ஆர்வத்தை வரும் தலைமுறை சரியாக உருவாக வேண்டும் என்பதில் காட்டுவதில்லை. எத்தனை திருச்சபையில் ஞாயிறு பள்ளிகள் சரியான முறையில் நடை பெறுகிறது. உங்கள் திருச்சபையின் ஞாயிறு பள்ளிக்கு முறையான பாட புத்தகம் இருக்கிறதா? எத்தனை சபைகளில் தனி மனித ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறது? சமத்துவத்தை போதிக்க வேண்டிய சபைகளில் ஏன் இப்படி? நாம் கிறிஸ்துவின் ஆழமான உபதேசங்களை இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை.

ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று ஆண்டவர் ஏன் கூறினார்? அப்படி காட்டினால் என்ன நடக்கும்? ஒரேயொரு உதாரணம்.. மருத்துவர்கள் தாங்கள் செய்த வேலை நிறுத்தத்தை விட்டு, அதற்கு மாறாக. உயிர் காக்கும் மருத்துவரை கொன்ற மாபாதகத்தை கண்டிக்கும் வண்ணம், அனைத்து மருத்துவர்களும் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரமும் ஓய்வின்றி, விடுமுறையில் இருப்பவர்களும் வந்து மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்த்திருந்தால்? இலவசம் கூட வேண்டாம் ஒரு நாள் வேலை செய்து தங்கள் கோபத்தை பதிவு செய்திருந்தால்? என்ன நடந்திருக்கும் அவர்களை பற்றிய தவறான கருத்துக்கள் அனைத்தும் அந்த சில மணி நேரங்களில் மாறி போயிருக்குமே? மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருப்பார்களே, ஒருவருக்காய் ஆயிரம் நோயாளிகளை தவிக்க வைத்தார்கள் என்ற அவப்பெயர் வந்திருக்காதே????? கதா நாயகர்களாய் மக்களின் உள்ளத்தில் நிறைந்திருப்பார்களே. மீடியாக்கள் மருத்துவர்களின் புகழை உலகம் முழுக்க உயர்த்தியிருக்குமே. அதைதான் இயேசு கிறிஸ்து செய்ய சொல்லுகிறார்.

அடிக்கிறவன் கதா நாயகன் அல்ல என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள சொல்லுகிறார். இதைதான் வருங்கால தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டுமானால் நாம் முதலில் அதை சரி என உணர வேண்டும். மறு கன்னத்தை காட்ட சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முட்டாளல்ல அதை கடைப்பிடிக்க தெரியாத நாம்தான்...... உணருவோம் ஆண்டவரின் வார்த்தைகளை கடைப்பிடிக்க முயலுவோம். முறையான் தலைமுறை உருவாக உண்மையான் கிறிஸ்தவர்களாய் ஒன்றினைவோம்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, February 8, 2012

மனம் அமைதி பெற 5


அன்பானவர்களே. நீங்கள் எத்தனைபேர் இப்போது கவனிக்கிறவர்களாக‌ மாறியிருக்கிறீர்கள் கவனிப்பது கடினமாக இருந்ததா? சுலபமாக இருந்ததா? நிச்சயம் கடினமாகவே இருந்திருக்கும், கவனிப்பதால் பல சரீர உபாதைகள் கூட ஏற்படுவதுண்டு. நான் முதன் முதலாக ஆலோசனை கொடுத்தது தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணுக்கு, அந்த அனுபவம் எனக்கு இன்றும் மறக்க முடியாது, காரணம், பேசியே பழக்கப்பட்ட எனக்கு கவனிப்பது பெரும் சிரமமாக இருந்தது, ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொன்னதை கூர்ந்து கவனித்ததும் கடுமையான தலைவலிக்கு ஆளானேன், கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்களோடு அமர்ந்து அவர்கள் சொல்வதை கவனித்தது, அடுத்த நாள் விடுப்பு எடுக்கும் அளவுக்கு கடுமையான தலை வலிக்கு என்னை இட்டு சென்றது. அப்போதுதான் கவனிப்பது எவ்வளவு சிரமம் என்பதை உணர்ந்தேன்.
ஆனாலும் அது எனக்குள் ஒரு புதிய மாற்றத்தை உண்டாக்கியது, ஒருவருடைய துன்பத்தில் நான் பங்கெடுத்த மன நிறைவு எனக்கு உண்டானது. அன்பானவர்களே நம் குடும்ப வாழ்வில் ஏற்படுகிற அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம்தான் அது கவனிக்காமல் இருப்பது. 
 
என்னங்க இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? என்கிற மனைவியிடம் என்னமா நடந்தது? என்று பரிவாய் கவனிக்க துவங்குகிறீர்களா? அல்லது ஏண்டி இப்படி நச்சரிக்கிற போய் காபி போட்டு எடுத்துவா என்று கத்துகிறீர்களா?

ஏம்மா இன்னைக்கு ஆஃபிஸ்ல பயங்கர வேலம்மா.. என்று ஆரம்பிக்கும் கணவரிடம் அய்யோ ரொம்ப கஷடப்பட்டுட்டீங்களா? ஏங்க? என்று கணிவாய் கேட்கிறீர்களா? அல்லது இருங்க இந்த சீரியல் முடிஞ்சதும் பேசிக்கலாம் என்று விலகுகிறீர்களா?

கவனிக்காமல் விலகும்போதெல்லாம் உங்களுக்குள் கலவரங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? வன்முறை எங்கே துவங்குகிறது ஒரு சமூகத்தின் குரல் எங்கே கவனிக்கப்படவில்லையோ அங்கே துவங்குகிறது. குடும்பத்தில் ஏற்படுகிற பிரச்சினைகள் கூட வன்முறையின் மறு வடிவமே எனவேதான் கலவரம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஒரு சமூகமாக இருந்தாலும், தனி மனிதனாக இருந்தாலும் தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை தேடலாக இருக்கிறது, நாம் உடுத்துகிற ஆடை, பேசுகிற வார்த்தைகள், நடை, அனைத்திலும் அடுத்தவர்கள் நம்மை கவனிக்க வேண்டும் என்ற அடிப்படை தேடல்தானே நிறைந்திருக்கிறது. கவனிக்கப்படவில்லை என்றால் ஏமாற்றம் மிஞ்சுகிறதே?......

அதுதான் இன்று குடும்பத்திலும் உறவுகளுடையேயும் நடக்கிறது. எனவே கவனிப்பதே தீர்வு, உடையும் மனங்கள் ஒன்றினைய ஒரே வழி..

ஒருவருக்கொருவர் பேசுவதை பொறுமையாக கவனிப்பது.... ஒருவருக்கொருவர் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுப்பது...

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

பயனுற்றால் கருத்துரையிடுங்கள்...

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews