WORD OF GOD

WORD OF GOD

Wednesday, July 6, 2011

" இனி ஒரு உதயம் " சிறுகதை

செல்வபுரி அந்த ஊரின் பெயர். ஆனால் வறுமை தாண்டவமாடியது. காடு சுற்றுவார்கள், கடுமையாய் உழைப்பார்கள். உண்ண உணவும், உடுக்க உடையும், படுக்க இடமும் இன்றி அவ்வூர் மக்கள் தவிப்பார்கள். கல்வியறிவும் மிகக் குறைவு, மலைவாழ் மக்கள்.

அவ்வூர் மக்களின் வறுமையையும், வாட்டத்தையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டவர் ஒருவர் மட்டும்தான். அவர்தான் கந்துவட்டி கனகராஜ். கடல்போல வீடு, காணும் இடமெல்லாம் தோட்டங்கள், தோப்புகள், கண்ணுக்கெட்டியவரை வயல்கள், அவருடைய அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் எவ்வளவு? அவருக்கே தெரியாது.


அவ்வளவு சொத்துகளும் மக்களிடம் சுரண்டியவை, அவர்கள் அறியாமையால் அபகரித்தவை, அவர்களின்  ஏழ்மை நிலையை பயன்படுத்தி பறிக்கப்பட்டவை. கடன் கேட்க, பெற்ற கடனுக்கு கடும் வட்டி கொடுக்க அவர் வீட்டு வாசலில் தினமும் கூட்டம் காக்கைகளாய் கூடியிருக்கும்.

கனகராஜ் வாரத்தின் முதல் நாள் ஞாயிறு தோறும் ஆலயம் செல்வார். வசனம் கேட்கவோ, அதை மனதில் வைக்கவோ அதன்படி வாழவோ அல்ல. அங்கு வருவோரிடம் வட்டி வசூலிக்க.

மாதத்தின் முதல் ஞாயிறு திருவிருந்து பெறுவார். ஆனால் பாவ மன்னிப்பு பெறுவதற்காக அல்ல. கடமைக்காக. வழிபாடு முடிந்ததும் வெளியே அவரின் காட்டுக் கத்தல் ஆலயத்தில் எதிரொலிக்கும்.

அடேய்! ஜோசப், மரியாதையாய் பணத்தை எண்ணி வை! இல்ல, உன் வீடு அவ்வளவுதான். அடியே ஞானப்பூ, வாங்கிய பணத்துக்கு வட்டி எங்கேடி? எண்ணி பத்து நாளுக்குள்ள தரலை ..... உன் நிலம் என் கைக்கு மாறிடும்.

இதே போல் அனேக கண்டிப்புகள், பயமுறுத்தல்கள், அடி உதைகள், வாரம் தவறாமல் நடக்கும் வழக்கமான சம்பவங்கள். மனைவி திட்டிப் பார்த்தாள் பயனில்லை. பிள்ளைகள் வேண்டிப் பார்த்தனர், அவர் விடுவதாய் இல்லை. போதகர் அன்பாய் பேசிப் பார்த்தார். அவர் மசியவில்லை. எல்லாமே பாறையில் விதைத்தது போல் பலனற்றுப் போனது.

கந்து வட்டி கனகராஜின் அடாவடித்தனத்தால் அவ்வூர் மக்கள் வீடுகளை இழந்தனர். ஆடுமாடுகளை இழந்தனர். நிலபுலன்களை இழந்தனர். பெண்கள் நகை நட்டுகளை மறந்தனர். மொத்தத்தில் செல்வபுரி எழமைபுரியாக மெல்ல மெல்ல உருமாறியது. கனகராஜோ பணராஜாவாக பவனி வந்தார். ஊர் மக்கள் விடியலை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

மலர்விழி... மலர்விழி கனகராஜ் தனது மனைவியை தான் கூப்பிடுகிறார். மனைவி ஓடி வந்தாள். நான் டவுனுக்கு பொய் வருகிறேன். அந்த சைக்கிள் கடை ராபர்ட்டு, மளிகைக்கடை  மனோகரன் மூணுமாசமா வட்டி தராம டிமிக்கி குடுத்துட்டு வரானுங்க. எட்டி மிதிச்சி பைசல் பண்ணிட்டு வர்ரேன். இங்க யாராச்சும் வட்டி கொண்டுவந்தா வாங்கி வை. கண்ணை கசக்கராங்கனு மன்னிச்சி விட்டுடாத.

கனகராஜை சுமந்த கப்பல் கார் டவுனை நோக்கி உறுமி, ஊர்ந்து, பின் வேகம் பிடித்தது. அப்படியே  நாளைய புத்தாண்டு தினத்திற்கான பிரியாணி செலவையும், புதுத்துனிமனிகளையும் வாங்கி வண்டியில் நிரப்பிக் கொள்ளலாம். நினைவுகளை அசைப்போட்டபடி காரில் பயணித்தார் கனகராஜ். தப்பு தப்பு.. கந்து வட்டி கனகராஜ்.

உழவர் சந்தையில் புத்தாண்டு களைக்கட்டியிருந்தது. டிரைவர் ரவி வண்டியை ஓரங்கட்டினார். ரவி இந்தா லிஸ்ட்டு. பணம் அதிலேயே வச்சிருக்கேன் போய் வாங்கிட்டு வா. டிரைவர் வாங்கிக் கொண்டு ஜனக்கூட்டத்தில் சங்கமித்தான். கூட்ட நெரிசலை கிழித்துக்கொண்டு ஓர்  குரல் ஓங்கி ஒலித்தது. புத்தாண்டு பம்பர் பரிசு - புத்தாண்டு பம்பர் பரிசு.. என்று ஒரு இளைஞன் கூவிக் கொண்டிருந்தான்.

அவன் கனகராஜ் காரை நெருங்கினான். உள்ளே எட்டிப் பார்த்தான். ஐயா புத்தாண்டு பம்பர் பரிசு இந்தாங்க ... இந்த கைப் பிரதியை படிங்க. அவர் கையில் ஒரு பிரதியை திணித்தான், மறைந்து போனான். கனகராஜ் படிக்கலானார்.

புத்தாண்டு பம்பர் பரிசு என்று தலைப்பு கொடுக்கப்பட்டு அச்சாகியிருந்தது.
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4 .22 -24 

கனகராஜ் கண்களில் கண்ணீர் கரை பிரண்டது. மீண்டும் சந்தைக்கே ஓடினார், 500 புடவை 500  வேட்டி வாங்கினார். அன்று இரவு முழுவதும் பீரோவை குடைந்தார். பொழுது  புத்தாண்டை மலர்ந்தது. அதிகாலை ஊரை கூட்டினார். அடமான பத்திரங்கள், நகைகள் கை மாறின. கூடவே வேட்டியும், புடவையும் பரிசாக ஊர் மக்கள் மகிழ்ந்து பெற்றனர். தலைக்கு ஐந்நூறு ரூபாய் பரிசாக வழங்கினார் . கனகராஜின் குடும்பத்தோடு ஊரே புத்தாண்டை இன்பம் பொங்க கொண்டாடியது. ஆலயம் நிரம்பி வழிந்தது, இவனும் ஆபிரகாமின் குமாரனே என்று இறைமைந்தர் இயேசு தன காதில் சொல்வது போல் கனகராஜ்  உணர்ந்து மகிழ்ந்தார். அவர் குடும்பம் அளவில்லா ஆனந்தத்தில் மிதந்தது. புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்றது.

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்
 
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்



No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews