WORD OF GOD

WORD OF GOD

Tuesday, July 5, 2011

நமது தலைவர் இயேசு ராஜன்



அன்பானவர்களே, இந்த காலையில் உங்களை வாழ்த்துகிறேன். தலைவன் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. ஒரு குடும்பம் என்றால், அதில் குடும்பத்தலைவர் இருக்கிறார். ஒரு ஊருக்கு ஊர் தலைவர் இருக்கிறார், ஒரு மாநிலத்திற்கு முதல்வர் தலைவராக இருக்கிறார், ஒரு நாட்டிற்கு பிரதமர் அல்லது அதிபர்  தலைவராக இருக்கிறார். தலைவர்களின் நோக்கம் என்னவென்றால், மக்களை வழி நடத்துவது.

வழி நடத்துகிற பணி சாதாரணமானதல்ல. ஒரு முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்தும்போது, தடைகள் அநேகம் வரும், அந்த தடைகளை தகர்ப்பதில் வழி நடத்துகிறவரின் பங்குதான் பிரதானம். தடைகளை தகர்க்கும்  வீரமும், எளிதாக முன்னேறிச் செல்லும் யுக்தியும் தலைவர்களுக்கு அத்தியாவசியம். இந்த திறமை இல்லாத தலைவர்கள் மக்கள் மீது சவாரி செய்வதை நாம் காண முடியும்.

வேதாகமத்தில் மீகா என்ற புத்தகத்தின் இரண்டாவது அதிகாரம் கடைசி வசனத்தில் தடைகளை நீக்கி மக்களை வழி நடத்தி செல்லும் ஒரு தலைவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார். மீகா.2 :13 

 
இவர் மக்களையும் மக்களின் தலைவர்களையும் ஒருசேர நடத்துகிறவர். அவரது குணம் யாதெனில், தடைகளை நீக்கி போடுகிறார், தன் மக்களுக்கு முன்பாக நடந்து போகிறார், தலைவனையும் மக்களையும் முன் நின்று வழி நடத்துகிறார்.

அன்பானவர்களே இந்த தலைவர்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நானே நல்ல மேய்ப்பன் என்று தெளிவாக சொன்னவர். அதாவது ஆடுகளுக்கு தலைவனாயிருக்கிற மேய்ப்பனை போல நான் மக்களுக்கு தலைவனாயிருந்து வழிநடத்துகிற நல்ல மேய்ப்பன் என்று தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன்  ஜீவனையும் கொடுப்பான் என்று சொல்லி தன் ஜனம் முன்னேறி செல்ல, தடைகளை தகர்க்க தன் ஜீவனையும் சிலுவையில் கொடுத்தார்.

அதே அன்போடு இன்றும் நம்மை வழி நடத்தி வருகிறார்.

குடும்ப வாழ்வில், பணியில், வியாபாரத்தில், திட்டமிடுகிற காரியங்களில், சரீரத்தில், தடைகள் இருக்கிறதா? முன்னேறவிடாமல் நம்மை தடுக்கிறதா? நமது தலைவர் இயேசு ராஜன் நம்மோடு இருக்கிறார், இயேசு ராஜா!!!  என் தலைவா!!! என்று ஒரு குரல் கொடுப்போம், நம்மை முன் நின்று வழி நடத்தி தெளிவான பாதையில் வழி நடத்தி மேன்மையான வெற்றியை கொடுத்திடுவார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews