WORD OF GOD

WORD OF GOD

Tuesday, August 23, 2011

நாம் ஆற்றல் மிக்கவர்கள் (காலை மன்னா)

அன்பான உடன் விசுவாசிகளுக்கு எனது இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை. சங்கீதம்.91 :13 

சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

" வாழ்க்கை சவாலானது.... வெற்றி அரிதானது.... அவ்வளவு எளிதில் யாரும் வாழ்வில் உயர்ந்துவிட முடியாது... வெற்றி பெற்றவர்கள் எல்லாரும், பல தடைகளையும், போராட்டங்களையும் தாண்டி, பல தியாகங்கள் செய்த பின்னர்தான் வெற்றி பெற்றுள்ளனர் "... இதுதான் வாழ்வில் உயர நினைப்போருக்கு கிடைக்கிற பதில்.. அது உண்மையும் கூட..


காரணம் இன்று முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்தால் நூறு தடைகள் மலையாக நின்று நம்மை அச்சுருத்துகிறதல்லவா? ஐயோ எவ்வளவுதான் போராடுவது என்று சலிப்பு ஏற்படுகிறதா? இந்த தடைகள் நீங்கவே நீங்காதா? என்று நொந்துக் கொள்ளுகிறீர்களா? மாற்றங்கள் வராதா புது வாழ்வு மலராதா என்று கலங்குகிறீர்களா? கடவுள் வந்து இந்த நிலையை மாற்ற மாட்டாரா என்று கடவுள் மீது கோபப்படுகிறீர்களா?

ஒரே ஒரு முறை மீண்டும் நமது தியான வசனத்தை வாசியுங்கள்.. சிங்கம் பாம்பு இரண்டும் நம்மை அச்சுறுத்துகிற விலங்குகள். நான் ஒருமுறை இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துக் கொண்டிருந்த பொது ஒரு ஆளுயர பாம்பு என் வாகனத்தின் குறுக்கே மின்னல் வேகத்தில் கடந்தது.. ஒரு நிமிடம் என் இதயமே நின்று விடுவதை போன்ற ஒரு பயம் என்னை ஆட்கொண்டதை இப்போதும் என்னால் மறக்க முடியாது..

காரணம் இந்த இரண்டு விலங்குகளுமே நம் உயிரை எளிதில் வாங்கும் வல்லமை கொண்டவை. ஆனால் இவை இரண்டின் மேலும் நீ நடப்பாய். இவை இரண்டையும் நீ மிதித்து போடுவாய் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. நம்புகிறீர்களா? நடக்க வாய்ப்பில்லாத எதையும் வேதாகமம் பேசுவதில்லை. அப்படியானால்  ஏன் இன்னும் தடைகளை கண்டு அச்சம்? இடையூறுகளை கண்டு கலக்கம்?


நீங்கள் இயேசுவை நம்புகிறவர்களா? அப்படியானால் நீங்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறீர்கள்.. அவர் பாதுகாப்பில் இருக்கிற அனைவருக்கும் அவர் உத்தரவாதம் தருகிறார், நீங்கள் என்னிலும் வல்ல காரியங்களை செய்வீர்கள் என்பதே அந்த உத்தரவாதம். ஆம் பிரியமானவர்களே. தடைகளையும், இடையூறுகளையும் தகர்த்தெறிகிற ஆற்றல் நம்மிடத்திலே இருக்கிறது. விசுவாசத்தோடே துணிந்து நில்லுங்கள், வெற்றி மாலை தானாய் வரும்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews