WORD OF GOD

WORD OF GOD

Friday, March 30, 2012

விசுவாசத்தில் வளர்வோம்.

TEXT:  மாற்கு.10:34 - 45

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள்,  ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய குரு இருந்தாராம், அந்த குருவிடத்திலே, சீடராக சேர ஆசைப்பட்ட ஒருவன் அந்த குருவை சந்திக்க வந்தான், குருவிடம் போய் அய்யா நான் உங்களிடத்திலே சீடனாக சேர விரும்புகிறேன் தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றானாம். உடனே அந்த குரு, நீ எனக்கு சீடனாக வேண்டுமென்றால், நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன், அந்த மந்திரம் யாருக்கு கேட்கிறதோ அவர்கள் துன்பம் நீங்கிவிடும் ஆனால் அந்த மந்திரத்தை, நீ யாருக்கும் சொல்லக் கூடாது,  என்றாராம். சரி குருவே என்றானாம், உடனே குரு அவன் காதிலே அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாராம், உடனே அந்த மனிதன் ஓடிப்போய் ஒரு மரத்திலே ஏறி நின்றுக்கொண்டு, ஊருக்கே கேட்கும்படி சத்தமாக கூறினானாம், அதைக் கண்ட குருவின் சீடர்கள், குருவிடம் ஓடி வந்து குருவே, அவனை உடனே, துரத்தியடிங்கள், நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை ஊருக்கே கேட்கும்படி கூறிவிட்டான் என்றனர், அந்த குரு சொன்னாராம், போக வேண்டியது அவனல்ல, நான்தான், அவனுக்கு எனக்கே குருவாகிற தகுதி இருக்கிறது என்றாராம்.

உண்மைதான் யார் பிறர் நலம் பேணுகிறானோ அவனே தலைவனாகும் தகுதியுள்ளவன்.

நமதாண்டவர் தன் ஊழியத்தை துவங்கும் முன் தனக்கென சீடர்களை தெரிந்தெடுத்தார், அவர்களை எங்கே தெரிந்தெடுத்தார், எல்லா சுவிசேஷங்களும் கூறுகின்றன, கலிலேயாவில் தெரிந்தெடுத்தார் என்று. ஆம் அவரது சீடர்கள் அனைவருமே கலிலேயாவை சேர்ந்தவர்கள். கலிலேயர்கள் என்றாலே அக்கால மக்கள் ஒரு அடி தள்ளி நிற்பார்கள் காரணம் அவர்க சுபாவம் அப்படி. அவர்கள் சுபாவத்தை வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளனர். அதாவது கலிலேயர்கள் என்றாலே.

1. நல்ல பழக்க வழக்கம் இல்லாதவர்கள்.
2. பண்பாடில்லாதவர்கள்.
3. கல்வியறிவில்லாதவர்கள்.
4. முடர்கள்.
5. சண்டையிடும் சுபாவம் கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்களைதான் ஆண்டவர் தனக்கென சீடர்களாக தெரிந்துக் கொண்டார். இதனால் இந்த கலிலேயர்களின் வாழ்வே மாறத்துவங்கியது. மரியாதைக்குரியவர்களாய் சமூகத்தில் மாறினார்கள். ஆண்டவ்ருக்கு மிகப்பெரிய புகழும் செல்வாக்கும், மரியாதையும் மக்கள் மத்தியில் இருந்தது, இந்த புகழும் செல்வாக்கும் சீடர்களுக்கும் கிடைத்தது. எப்போதெல்லாம் மனிதனுக்கு புகழும் செல்வாக்கும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மனிதனின் மனநிலை பெரிதும் மாறிப்போகும். அதை தக்கவைத்துக்கொள்ளும் சுபாவம் பெருகும். இது இன்றைய அரசியல்வாதிகளிடத்தும் ஏன் திருச்சபை தலைவர்களிடத்திலேயும் இருப்பதை நாம் தெளிவாக் காண இயலும்.

சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நமக்கு உணர்த்துகிற பகுதிதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி. யோவானும் அவனது சகோதரன் யாக்கோபும் இயேசுவிடம் வந்து எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார உமது மகிமையில் இடம் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது தங்களுக்கு பரலோகத்தில் உயர் பதவி தர வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுதான் மனிதனின் சுபாவம். ஆனால் ஆண்டவரோ அவர்களிடம் மிகவும் அன்பாக நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை, நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்னானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார்.. அதாவது அவர் பாத்திரம் என்ன? பாடுகள்.. அவர் பெற்ற ஸ்னானம் எதற்காக? மரிப்பதற்காக.. ஆனால் அதை என்னவென்று கூட அறியாமல், எங்களால் கூடும் என்கிறார்கள், காரணம் அவர்களுக்கு பதவி வேண்டும். இப்படி உணராமல் அவர்கள் பதில் சொன்னதால், அவர்களுக்கு தெளிவாக ஒரு விஷயத்தை கூறுகிறார். பதவி தருவது என் காரியமல்ல என்கிறார்(மாற்கு.10:40)

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற மற்ற சீடர்களுக்கு மிகவும் கோபம் உண்டானது, இந்த இருவர் மேலும் 10 பேருக்கும் எரிச்சல் உண்டானது(மாற்கு.10:41) அன்பானார்களே எப்போதெல்லாம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பதவி மேல் பற்று வருகிறதோ அதை அடைய வேண்டும் என்று துடிக்க ஆரம்பிக்கிறோமோ.. அப்போதெல்லாம் நாம் கடவுளுக்கும் விரோதிகளாகிறோம், சக மனிதர்களுக்கும் விரோதிகளாகிறோம்.

இதை அறிந்துக் கொண்ட ஆண்டவர் அவர்களுக்கு தன்னை முன்மாதிரியாக வைக்கிறார். நான் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்ய வந்தேன், உங்களில் தலைவனாயிருக்க விரும்புகிறவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாய் இருக்கக்கடவன் என்கிறார்..

ஆண்ட‌வ‌ர் ப‌த‌வி ஆசை கூடாது என்று சொல்ல‌வில்லை, நீங்க‌ள் த‌லைவ‌ர்க‌ளாக‌ வேண்டாம் என்று சொல்ல‌வில்லை மாறாக த‌லைமைத்துவ‌ குண‌ம் இருக்கிற‌வன்தான் த‌லைவ‌ன் ஆக‌ முடியும் என்கிறார். அன்பான‌வ‌ர்க‌ளே... அடுத்த‌வ‌ருக்கு ப‌ணிவிடை செய்யும் ம‌ன‌ம்தான் த‌லைமைத்துவ‌ குணம்.. ஆண்டவர் அதைதான் செய்தார் கடவுள் அவரை முழங்கால்கள் யாவும் முடங்கும்படி உயர்த்தினார். எனவே நமக்குள்ளும் இக்குணம்தான் இருக்க வேண்டும். என்று ஆண்டவர் கூறுகிறார்.

ஆனால் இன்று இக்குணம் கொண்ட எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கத்தை விடுங்கள் கிறிஸ்தவர்களாகிய நமது திருச்சபைகளில் எத்தனை பேர் பணிவிடை செய்யும் மனம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்? நமது தலைவர்களில் எத்தனை பேருக்கு பணிவிடை செய்யும் மனமில்லையோ அவர்கள் அத்தனை பேரும் விசுவாசிகள் அல்ல.. காரணம் அவர்கள் ஆண்டவர் சொன்ன தலைமைத்துவத்தை பின்பற்றாதவர்கள், அதை பின்பற்றினால் கடவுள் உயர்த்துவார் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள். உணர்வோம், விசுவாசத்தில் வளர்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews