WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 15, 2012

ஆவியின் வல்லமை!!!!!!!!!

TEXT. நியாயாதிபதிகள்.15:9-15

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். சிம்சோன் வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவர், காரணம் துன்பங்களை கண்டு அஞ்சாதவர், எதிர்ப்புகளை கடவுளின் நாமத்தால் ஓட ஓட விரட்டுகிறவர். தனக்கு வந்த ஒரு மாபெரும் துன்பத்தை அவர் ஓட ஓட விரட்டிய ஒரு சம்பவத்தை இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தில் குடியேறிய பிறகு அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய சவால் காத்திருந்தது, அந்த சவால் பெலிஸ்தியர்கள், அவர்கள் மாபெரும் வீரர்கள், போர் செய்வதில் வல்லவர்கள், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரவேலுக்குள் நுழைந்து இவர்களது செல்வங்களை கொள்ளையிட்டு செல்வார்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இஸ்ரவேலர்களில் ஒருவருக்கும் இருந்ததில்லை, ஒரேயொருவர்தான் அவர்களுக்கு முடிவு கட்டியவர் அவர் தாவீது, கோலியாத்தை கொன்று ஒட்டு மொத்தமாக பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்கியவர்.

தாவீதுக்கு முன்பு நூற்றாண்டுகளாக கானானில் வாழ்ந்த போது யாராவது பெலிஸ்தியர்களை எதிர்த்திருக்கிறார்களா என்றால், ஒருவர் இருக்கிறார் அவர்தான் சிம்சோன். சிம்சோன் பெலிஸ்தியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். எனவே சிம்சோனை ஒழிக்க பெலிஸ்தியர் யூதாவில் பாளையமிறங்கினர் (நியா.15:9). யூதா மக்கள் நடுங்கி ஏன் இங்கே பாளையமிறங்கினீர்கள் என்று கேட்க எங்களுக்கு சிம்சோன் வேண்டும் அவன் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவனுக்கு செய்ய வேண்டும் என்றனர்(நியா.15:10), அப்போது யூதாவின் மக்கள், அதாவது சிமோசினின் சொந்த ஜனமான இஸ்ரவேலர் 3000 (நியா.15:11) பேர் போய் சிம்சோனை தேடி கண்டு பிடித்தனர், சிம்சோன் அவர்களிடம் ஒரு உறுதிமொழி வாங்கிக் கொண்டார், அதாவது என்னை பெலிஸ்தியர்கள் கையில் ஒப்படைக்கும் வரை எனக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யக் கூடாது என்றார் (நியா.15:12) காரணம் எதிரிகளை கூட நம்பலாம் நம்மோடு இருப்பவர்களில் அனேகரை நாம் நம்ப முடியாது, அவர்கள் உறுதியளித்ததும் தைரியமாய் அவர்களோடு வருகிறார்.

கயிறுகளால் அவரை கட்டி பெலிஸ்தியரிடம் கொண்டு வந்தனர். பெலிஸ்தியர்கள் சிம்சோனை கண்டதும் மிகப்பெரிய ஆரவாரம் செய்கின்றனர் காரணம் தாங்கள் தேடிய எதிரி கிடைத்துவிட்டான் என்று. அதே நேரத்தில் கர்த்தருடைய ஆவி சிம்சோனின் மீது இறங்கியது,(நியா.15:14) உடனே அவரை கட்டியிருந்த கட்டுகள் நெருப்பில் பட்டது போல் பொசுங்கிப் போயின. கழுதையின் பச்சை தாடை எலும்பு ஒன்றை கண்டு அதை எடுத்து ஆயிரம் பேரை கொன்றார்(நியா.15:15-16).

அன்பானவர்களே, சிம்சோனின் மீது இறங்கிய கர்த்தருடைய ஆவி நம்மீது இருக்கிறதே, அப்படியானால் நம்முடைய பலம் என்ன? நமக்கெதிராய் வருகிற எந்த கட்டையும் பொசுக்கிப் போடுகிற பலம், எதிர்ப்புகளையும், பிசாசின் தந்திரங்களையும்  சுட்டெரிக்கிற பலம் நமக்குள் இருக்கிறது, அங்கே வென்றது சிம்சோன் அல்ல கர்த்தருடைய ஆவி, ஆம் நாமும் நம் துன்பங்களை கண்டு, வியாதிகளை கண்டு, போராட்டங்களை கண்டு அஞ்ச வென்டியதில்லை, நாமல்ல நமக்குள் இருக்கிற கர்த்தருடைய ஆவியால் அவைகளை மேற்கொள்வோம். ஆமேன்....

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews