WORD OF GOD

WORD OF GOD

Saturday, October 8, 2011

மனம் அமைதி பெற 4


அன்பானவர்களே மனம் அமைதி பெற இப்போது நாம் கற்றுக் கொண்ட முதல் இரு முக்கிய விஷயங்கள். ஒன்று நம் பலம், பலவீனம்  அறிந்துக் ஒப்புக் கொள்ள வேண்டும், நம் சகமனிதனுக்கும், பலம், பலவீனம் உண்டு என்பதை அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்.

 நம் பலமும் நம் பலவீனமும் நம்மோடு இருப்பவை எனவே அதை நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கண்டறிந்து விடலாம், ஆனால் அடுத்தவர்களின் பலம், மற்றும் பலவீனத்தை எப்படி கண்டறிவது? நம் பலத்தையும் பலவீனத்தையும் கண்டறிவதே கடினம் எனும்போது அடுத்தவர்கள் பலம், பலவீனத்தை நாம் கண்டறிய முடியுமா? முடியும், ஆனால் அவ்வளவு எளிதாக கண்டறிந்துவிட முடியாது. எனவே அடுத்தவர்களின் பலம், பலவீனத்தை அறிய ஒரு எளிய வழிமுறையை கற்றுத் தருகிறேன்.


கவனித்தல்

கவனிப்பது என்பது நம் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக  முக்கியமான குணம்.  கடவுள் நமக்கு இரு கண்களும், இரு காதுகளும் கொடுத்துவிட்டு ஒரே ஒரு வாயை மட்டும் கொடுத்திருப்பது எதற்காக தெரியுமா? குறைவாக பேசி அதிகமாய் கவனிப்பதற்காக.  ஆனால் எப்போதும் நம் கருத்துக்களை பேசுவதிலும், நம் விருப்பங்களை சொல்வதிலேயுமே கவனமாக இருப்போமே தவிர அடுத்தவர்கள் பேசுவதை  கவனிக்க விரும்புவதில்லை.

நாம் கவனிக்க தயாராக இல்லை என்றால் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்றால், அடுத்தவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாது. அடுத்தவர்கள் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாமல் போனால், நாம் அவர்களோடு நல்லுறவுக் கொள்ளவியலாது, அடுத்தவர்களோடு நமக்கு நல்ல உறவு இல்லை என்றால், நம் மனம் அமைதியாய் இராது.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

இந்த வசனம் நமக்கு கற்றுத் தருவது என்ன? கவனியுங்கள் என்பதுதானே, எனவே இன்று நான் உங்களுக்கு ஒரு பயிற்சி தருகிறேன், உங்கள்  நெருங்கிய உறவுகளோடு இன்று  நீங்கள் பேசும்போது, நீங்கள் அதிகமாய் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனியுங்கள், முழுதாய் கவனியுங்கள். அவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் கவனியுங்கள். இந்த அனுபவம் எப்படி இருந்தது என கருத்துரையில் சொல்லுங்கள், அதற்கு பிறகு தொடர்ந்து முன்னேறுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, October 5, 2011

தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் தியாநிக்கப்போகிற வசனம். சங்கீதம்.34:7.

கர்த்தருடைய தூதன் அவருக்கு பயந்தவர்களை சூழ
 பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.  

சாது  சுந்தர்சிங் ஐயா அவர்கள், வட மாநிலங்களில் ஊழியம் செய்த காலத்தில் ஒரு மலை கிராமத்தில் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க சென்றாராம், அவருடைய வார்த்தைகளை கேட்க திரளான மக்கள் கூடி விட்டார்களாம், இதைக் கண்ட கிராம தலைவன், கடும் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய ஆட்களை ஏவினான், அதன் படி ஆயுதம் ஏந்திய ரவுடி கும்பல் ஒன்று அவரை துரத்தியது, சாது ஐயா அவர்கள், தன் உயிரை காத்துக் கொள்ள மலை பகுதியில் ஓடி ஒரு குகைக்குள் ஒளிந்துக் கொண்டாராம். அவரை விரட்டிய கும்பல் அந்த குகையை
முற்றுகையிட்டது. அதை அறிந்த ஐயா அவர்கள் செய்வதறியாமல், முழங்கால் படியிட்டு ஜெபிக்க துவங்கிவிட்டார்கள், பல மணி நேரம் ஜெப நிலையில் இருந்துவிட்டு வெளியே எட்டி பார்த்தாராம், அப்போதும் அந்த கும்பல் குகைக்கு வெளியே எதோ குழப்பத்தோடு நின்றுக் கொண்டிருந்ததாம்.

மீண்டும் பயத்தோடு உள்ளே பொய் ஜெபித்துக் கொண்டே இரவு நெருங்கியதால் உறங்கிப்போனாராம். அடுத்த நாள் காலை அவர் வெளியே எட்டிப் பார்த்தால், அதே கும்பல் நின்றுக் கொண்டிருந்தது, ஆனால் கையில் ஆயுதங்கள் இல்லை, திரளான கூட்டம் இருந்ததாம். அவர் வேறு வழி இல்லாமல் அமைதியாக வெளியே வந்தார்களாம். அப்போது அவர்கள் அனைவரும் அவர் பக்கத்தில் ஓடி வந்து அவரை பிரமிப்போடு பார்த்தார்களாம், அவர் ஏன் இப்படி பார்க்கிறார்கள் என்று குழப்பத்தோடு அவர்களை நெருங்க, அவர்கள் கேட்டார்களாம்,

ஐயா நேற்று இரவு, நாங்கள் இந்த குகை வரை உங்களை விரட்டினோம், நீங்கள் உள்ளே போனதையும் கண்டோம், ஆனால் சிறிது நேரத்தில் உங்கள் குகையை சுற்றி, ஆயுதம் ஏந்திய அநேகர்  வெள்ளை ஆடையில் பிரகாசமாய் நின்றார்களே அவர்கள் யார் என்று கேட்டார்களாம். அப்போதுதான் சாது ஐயா அவர்களுக்கு புரிந்தது, அந்த கொஞ்ச நேரம் என்பது தான் ஜெபிக்க துவங்கிய நேரம் என்பதும், ஜெபிக்கும்போதே, கடவுள் தன் தூதர்களை தன்னை காக்க காவலுக்கு அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர் புரிந்துக் கொண்டாராம்.

அன்பானவர்களே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும், பய பக்தியும் கொண்டவர்களை சூழ கடவுள் தன் தூதர்களை பாளையமிறக்குகிறார். பாளையமிறக்குவது என்றால் போருக்கு ஆயத்தாமாக இறங்குவது என்று அர்த்தம், ஆண்டவராம் இயேசுவை நம்புகிற அவருக்கு பயந்து வாழ்கிற நம்மை அவர் தூதர்களை கொண்டு காத்து வருகிறார். பயப்படாதீர்கள். நாம் சந்திக்க போகிற துன்பங்கள் ஆபத்துக்கள் விபத்துக்கள், அனைத்திலிருந்தும் தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

இந்த விசுவாசத்தோடு  இந்நாளை துவங்கி இனிமையாய் வாழ, பரிசுத்தாவியானவர் நம்மை காத்தருள்வாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, October 3, 2011

தீங்கை காணமாட்டோம்

செப்பனியா.3:15

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்

அன்பான சகோதர சகோதரிகளே, எனது நண்பர் ஒருவர், புதிதாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர், அவர் ஒரு அரசு பணியாளர்.  கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு பணி செய்கிற இடத்திலே அவருக்கு அனேக பிரச்சினைகள், ஏற்பட்டது. பல முறை சோர்வடைந்து என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதை எனக்கு தெரிவித்தார். அப்போதெல்லாம் நான் அவருக்கு அறிவித்த வசனம் இதுதான்.

இன்னும் அதே போராட்டத்தில்தான் இருக்கிறார், ஆனால் தீங்கு அவரை தொட முடியவில்லை, எத்தனையோபேர் அவருக்கு தீங்கு செய்ய நினைத்தும், அவர் ஜெயமாய் நிற்கிறார். கிறிஸ்துவை நம்புகிறவர்களின் வாழ்வின் சிறப்பு இதுதான்.

இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று மத்தேயு.18:20 ல் ஆண்டவர் கூறியிருக்கிறாரே, ஆம் அவர் நாம் தனியாய் இருக்கும்போதும் நம்மோடு இருப்பவர்.

உங்கள் வாழ்விலும் தீங்கு செய்வோர் உங்களை தொடரலாம், உங்கள் மனம் புண்படும்படி உங்களை அவமானத்துக்கு உள்ளாக்கலாம், நம் வெற்றியை பறிக்க  அவர்கள் திட்டமிடலாம், எத்தனை நாள்தான் இதை சகிப்பது என்று சோர்ந்துவிடாதீர்கள், மரணத்தையே ஜெயித்து பிசாசையும், பாவத்தையும் தன காலடியில் போட்டு அதன் தலையை நசுக்கிய  ஜெயவீரர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து நம் நடுவில் இருக்கிறார். தீங்கு நம்மை தொடராமல் தீமை நம்மேல் பற்றாமல் நம்மை காத்தருள்வார்.

இனி நாம் தீமை செய்வோரையும், அவர்களுக்கு  நேரப்போவதையும் காண்போம், ஆனால் தீங்கை காணமாட்டோம். கடவுள் நம் நடுவில் பரிசுத்த ஆவியாய், அக்கினி மயமாய் நின்று காத்திடுவார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews