WORD OF GOD

WORD OF GOD

Saturday, March 19, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளுக்கு எனது அன்பான ஸ்தோத்திரங்கள். இன்றைய நம்முடைய தியானப்பகுதி, 1கொரிந்தியர்.1 :18 

  

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
மனித வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணத்தில், நாம் ஒவ்வொருவரும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடி பயணித்துக்கொண்டிருக்கிறோம், நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் இருக்கிற அடிப்படைக் காரணமே சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான், ஆனால் பல நேரங்களில் நாம் சந்தோஷத்திற்காக செய்கிற எத்தனையோ காரியங்களே நமக்கு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுகிறது.

எனவேதான் நாம் துன்பங்களை சந்திக்கும்போது நம்மால் அவைகளை தாங்க முடிவதில்லை, நம் வேலையில், நம் குடும்பத்தில், நம் சரீரத்தில் ஒரு சிறிய பிரச்சனை வந்தாலும், மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகிறோம், காரணம், நாம் அவைகளை எதிர்பார்ப்பதில்லை, நாம் எதிர்பார்ப்பது சந்தோஷத்தையும் சமாதானத்தையும்.

சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தேடிய இந்த வாழ்க்கையில், நம்மில் யாராவது ஒருவர் தெரிந்தே துன்பத்தை தேடி போவோமா? யாரும் போக மாட்டோம், ஆனால் இந்த உலக வாழ்வில் துன்பத்தை தேடி போனவர்களும் இருக்கிறார்கள், அவர்களை நாம் தியாகிகள் என்று நாம் சொல்லுவோம், இந்தியாவின் மகாத்மா காந்தியடிகள், அவரோடு இணைந்து   சுதந்திரத்திற்காக போராடின தலைவர்களெல்லாம் போராடினால் துன்பம் வரும் என்று தெரிந்தே தான் போராடினார்கள் துன்பத்தை அடைந்தார்கள் தங்கள் இன்னுயிரைக்கூட  இழந்தார்கள்.

காரணம் தன் தேசத்து மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக. ஆனால் உலக சரித்திரத்திலேயே தன்னுடைய எதிரிகள், துரோகிகளை காப்பற்றுவதற்காக துன்பத்தை தேடிப்போன ஒரு மனிதன் இருந்தார் என்று சொன்னால் அது நம்முடைய ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவை தவிர வேறு  ஒருவரும்  இல்லை.

எனவேதான் பவுல் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதியில் சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் என்கிறார், காரணம் கொரிந்து திருச்சபையில் இரண்டு பிரிவு மக்கள் வாழ்ந்து வந்தனர், ஒரு பிரிவினர், யூதர்கள் இன்னொரு பிரிவினர் கிரேக்கர்கள் இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சிலுவை மரணம் என்பதே சாபத்தின் அடையாளம், கொடுமையான குற்றம் செய்தவர்களுக்கும்,
தேசத்துரோகிகளுக்கும் மட்டுமே சிலுவை மரணதண்டனை வழங்கப்பட்டது,  சிலுவை மரணத்தின்போது கடுமையாக, கொடூரமாக மனிதாபிமானமே    இல்லாமல் அவமானப்படுத்துவார்கள், அதற்கு ஒரு உதாரணம்  சிலுவை மரணத்தண்டனை பெற்றவரை ஆடைகளில்லாமல் தான் துன்புறுத்துவார்கள் அப்படியானால் எவ்வளவு சாபம் நிறைந்தது,  அந்த சாபத்தின் அடையாளமாகிய சிலுவையில், அதுவும் புறஜாதிகளின் கையால்  மரித்த ஒருவர் எப்படி நமக்கு மேசியாவாக இருக்க முடியும் என்று யூதர்கள் சிலுவையில் மரித்த ஒரே காரணத்திற்காக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.

கிரேக்கர்களோ இதை முற்றிலுமாக பைத்தியக்காரத்தனம் என்றார்கள், சிலுவையில் மரித்தவர் என்றால் அவர் குற்றவாளி, குற்றவாளியை போய் வணங்குகிறீர்களே எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்றார்கள்,



அவர்களுக்கு பவுல் சொல்லுகிற பதில்தான் இந்த வசனம்,  கெட்டுப்போகிறவர்களுக்கு  இந்த உபதேசம் பைத்தியக்காரத்தனமாக தெரியும் என்று உறுதியாக கூறுகிறார், காரணம் ஒரு பாவமும் அறியாத நம் ஆண்டவர் நமக்காக சிலுவையின் மரணபரியந்தம் நம்மை தாழ்த்தினாரே, இந்த தவக்காலம் முழுதும், இந்த வல்லமையின் செய்தியை தான் நாம் உபவாசமிருந்து தியானிக்கிறோம்,

காரணம் அவரது ரத்தம் நம்மை சகல பாவங்களிலிருந்தும் விடுதலையாக்குகிறது. இந்த நிறைவோடு நம் நாளை கிறிஸ்துவின் பரிசுத்தத்தில் துவங்குவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews