WORD OF GOD

WORD OF GOD

Wednesday, March 30, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன், கடந்த மூன்று தினங்களாக   எனது இணையதள இணைப்பு செயல் படவில்லை, கர்த்தருடைய  கிருபையில் நேற்று முதல் சரியாக செயல் படுகிறது, எனவே இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்.



இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட திரு வசனம். சங்கீதன்.10 :1

 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்


நம் வாழ்க்கை கேள்விகள் நிறைந்தது, என்? எப்படி? எது? யார்? இதுப்போன்ற   அனேக கேள்விகளை தினந்தோறும் கேட்கிறோம். கேள்விகள் இல்லாமல் தெளிவுகள் கிடைக்காது. எனவே கேள்விகள் என்பது ஒரு வகையில் நல்லதே. பள்ளிக் கூடத்தில் கேள்வி கேட்கிற மாணவர்களின் ஆர்வத்தை ஆசிரியர்கள் பாராட்டுவதற்கு காரணம் அதுதான்.

அதே நேரத்தில் கேள்வி கேட்பதற்கு வரம்புகள் இருக்கிறது, தேவையற்ற, அறிவீனமான் கேள்விகளை யாருமே விரும்ப மாட்டார்கள், இடம் பொருள் ஏவல் அறிந்து தான் கேள்விகளை கேட்க வேண்டும்,

நம்முடைய தியான பகுதிக் கூட ஒரு கேள்விதான்.சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் கடவுளை நோக்கி இரண்டு கேள்விகள் கேட்கிறார்.

1 . கர்த்தாவே என் தூரத்தில் நிற்கிறீர்?
2 . ஆபத்து நேரிடும் சமையங்களில் என் மறைந்திருக்கிறீர்?

இந்த இரண்டு கேள்விகளுமே, நம் வாழ்விலும் ஒரு முறையாவது கடவுளை நோக்கி கேட்டிருப்போம், அப்படியானால் கடவுள் தூரத்தில் நிற்பதும், ஆபத்து நேரத்தில் மறைந்துக் கொள்வதும் உண்மைதானா?

சகிக்க  முடியாத துன்பங்களும் தேவையற்ற பிரச்சனைகளும், அனாவசியமான எதிர்ப்புகளும் எதிரிகளின் சூழ்சிகளும் நம்மை சூழ்ந்துக் கொள்ளும்போதெல்லாம் இந்த கேள்வியை கடவுளிடம் கேட்கிறோம்.

ஏன் இயேசுகிறிஸ்துவே கூட சிலுவையின் மரணப் போராட்டத்தில் கடவுளை நோக்கி அபயமிட்டது இது தானே? என் கடவுளே என் கடவுளே என் என்னை  கை விட்டீர் என்று கதறினாரே. அப்படியானால் கடவுள் தன் சொந்த குமாரனையே கை விட்டவர் நம்மை கைவிடுவது அவருக்கு சாதாரணம் என்றெல்லாம் கூட நமக்கு தோன்றுகிறது.

நம் ஆண்டவருக்கே இந்த நிலை என்றால் நமக்கு?

ஒரே ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும் ஆண்டவர் இந்த உலகத்தில் கை விட்டது ஒரே ஒருவரை தான், அந்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும் தான், அவரைக்கூட ஏன் கை விட்டார் என்றால், அவரை கை விட்டால் தான், அவர் மரித்தால் தான், அவரது ரத்தம் மண்ணில் சிந்தப்பட்டால் தான் நாம் காப்பாற்றபடுவோம் , நம் ஜீவன் காக்கப்படும்,



அப்படியானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கை விட்டத்தின் நோக்கம் நம்மை காக்க, நம்மை அரவணைக்க, நம்மை இவ்வுலகில் எல்லா எதிர்ப்புகளிலிருந்தும் காப்பாற்ற, அப்படியானால் அவர் எப்படி தூர இருப்பார்? நமக்கு மறைந்துக் கொள்வார், தன சிநேகிதனுக்கு துன்பம் வந்தால் தூர ஓடுவதும் மறைந்துக்கொள்வதும் மனித சுபாவமே தவிர நம் இறைவனின் குணமல்ல.

இந்த கேள்விகள் எல்லாம் நம் துன்பத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் கதறுவதே தவிர சத்தியமல்ல. இதே சங்கீதத்தின் 17  வது வசனத்தில் சங்கீதக்காரன் தெளிவாக கூறுகிறார், வேண்டுதலை கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் என்று.

அப்படியானால் அவர் தூர இருப்பவரல்ல நம் இருதயத்தின் பக்கத்திலிருந்து நம்மை பெலப்படுத்துபவர். நம்மை காக்க தன் சொந்தக்  குமாரனையே கை விட்டவர் நம்மோடிருக்கிறார்.

சமாதானமாய் இந்நாளை துவங்குவோம் அவர் நம் இதயத்தின் பக்கம் நிற்கிறார் நம்மை காக்க. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews