WORD OF GOD

WORD OF GOD

Monday, March 21, 2011

தேவ வல்லமை (காலை மன்னா)

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாச சகோதர சகோதரிகளுக்கு, ஸ்தோத்திரங்கள். இந்த காலை வேளையில் தியானத்திற்க்கென்று எடுத்துக்கொண்ட தியானப்பகுதி, சங்கீதம்.56 :4 .

தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?

நம்முடைய வாழ்வில் நாம் யாரை அதிகமாய் புகழுகிறோம் என்பது மிகவும்
சுவாரஸ்யமானது, எனவே ஒரு  கணம் நாம் நினைத்துப்பார்ப்போம்.  நம் வாழ்க்கைக்காக,  உயர்வுக்காக  யாரை அதிகமாக நம்பியிருக்கிறோமோ அவர்களைத்தான் அதிகமாக புகழுவோம். உதாரணமாக நம் பணியில் பதவி உயர்வு பெற, பதவி உயர்வு கொடுக்கக்கூடிய நிலையில், இருக்கிற உயரதிகாரியை நம்மையும் அறியாமல் புகழ்ந்துக்கொண்டிருப்போம்.

அதேப்போல் உண்மையாய் நமக்கு நன்மை செய்கிறவர்களை, செய்தவர்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து, புகழ்வோம். ஆனால் அதே நேரத்தில் நாம் துன்பத்திலிருக்கும்போது, யாரையும் புகழுகிற மனம் வராது, ஏற்கெனவே நாம் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கிற நேரத்தில்  நம் துன்பமும் வேதனையும்தான், நம்மை சூழ்ந்துக்  கொண்டிருக்குமே  தவிர,  அந்த நேரத்தில் யாரையும் புகழக்கூடிய மன நிலை நமக்கு இருக்க வாய்ப்பே இல்லை.

ஆனால் நம்முடைய தியானப் பகுதியில் தாவீது சொல்லுகிறார், நான் தேவனை முன்னிட்டு அவர் வார்த்தைகளை புகழுவேன் என்று தேவனையும், அவரது திரு வசனங்களையும் புகழுவேன் என்கிறார். காரணம் அவருடைய துன்ப நிலையில், நான் அவரை நம்பியிருக்கிறேன் என்கிறார். இந்த அசைக்க முடியாத விசுவாசம் அவருக்குள் இருப்பதால், எனக்கு பயமில்லை என்கிறார். கடைசியாக ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து அறிந்துக்கொள்ள வேண்டிய சத்தியத்தை போதிக்கிறார்,

மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான் என்கிறார்..

நாம் நம் வாழ்வில் பயப்படுவது நமக்கு தீங்கு செய்ய நினைக்கிற இன்னொரு மனிதனுக்காகத்தான், என்ன செய்வார்களோ, நம்மை விழுங்கப் பார்க்கிறார்களே, நம் வாழ்வை கெடுக்கப் பார்க்கிறார்களே, என்று பயந்து, அப்படிப்பட்டவர்கள் மீது மூர்க்கத்தோடிருப்போம், ஆனால் தாவீதோ பெலிஸ்தியரின் படை தன்னை சுற்றி வளைத்துவிட்ட பிறகும் மிகவும் ரம்மியமாக இருக்கிறார், காரணம் அவருக்கு தெரியும் நம் வாழ்க்கை மனிதக் கரங்களில் இல்லை.

எனவேதான் எனக்கு பயமில்லை என்கிறார். எவ்வளவு பெரிய சத்தியம், ஆனால் இது தெரியாமல் பலமுறை, பல பேருக்காக பயந்திருக்கிறோம் அல்லவா? இனி பயம் வேண்டாம், நம் மீது அதிகாரம் கொண்டவர் பரிசுத்த ஆவியாய் அசைவாடுகிற கடவுள்தானே  தவிர மாம்சமான மனிதனல்ல, எனவே தைரியமாய், நம் நாளை துவங்குவோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை வழிநடத்திக் காப்பாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews