WORD OF GOD

WORD OF GOD

Saturday, September 10, 2011

முடியாது என்று சொன்னால் விட்டுவிடுவாரா

கிறிஸ்துவுக்குள் அன்பான எனதருமை உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த சில தினங்களாக என்னால் பதிவிடவோ வாக்குத்தத்த வசன குறுஞ்செய்தி அனுப்பவோ இயலவில்லை. காரணம் எனது இணையதள இணைப்பு செயல்படவில்லை. இப்போதுதான், அது இயங்குகிறது. அதற்காக வருந்துகிறேன். இப்போது நாம் ஞாயிற்றுக் கிழமைக்குறிய திரு வசனங்களை தியானிப்போம்.

ஞாயிறு திரு வசனங்கள்.( பிரசங்க வாக்கியம் ஏசாயா )

 ஏசாயா.56 :1 , 6 -8 .
ரோமர்.11 :13 -15 , 29 -32 
மத்தேயு.15 :21 -28 

அன்பானவர்களே, நாம் பேசும்போது நம்முடைய வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும், எனவேதான் திருவள்ளுவர் யாகாவாராயினும் நாகாக்க என்கிறார். அதுவும் பெண்களோடு பேசும்போது நம் வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும். இன்றைக்குரிய நம்முடைய சுவிசேஷ பகுதியில் (மத்தேயு.15 :21 -28 ) ஆண்டவர் ஒரு கானானிய பெண்ணிடம் பேசுகிற வார்த்தைகளை காண்கிறோம், அவள் தன மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுவதாகவும், அவளை விடுவிக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறாள். ஆண்டவரோ அவளுக்கு பிரதியுத்தரமாக ஒன்றும் பேசவில்லை. தொடர்ந்து அவள் நச்சரிப்பதை விரும்பாத சீடர்கள் அவளை அனுப்பிவிடும்படி ஆண்டவருக்கு ஆலோசனை சொல்லுகின்றனர். உடனே ஆண்டவர் நான் இஸ்ரவேலருக்காக வந்தேன் என்றும் உங்களுக்கல்ல என்றும் சொல்லி உதவ மறுக்கிறார்.

ஆனால் அவளோ விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அப்போது ஆண்டவர் அவளை நோக்கி ஒரு கண்ணியமற்ற வார்த்தையை உதிர்க்கிறார். பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய் குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்கிறார். இவ்வளவு கண்ணியமற்ற வார்த்தையை ஆண்டவர் சொன்ன பிறகும் அவள் மிகவும் பணிவாக மேசையிலிருந்து விழும் துணிக்கைகளை நாய்கள் தின்னுமே என்கிறாள். ஏன் ஆண்டவர்  இவ்வளவு கண்ணியமற்ற வார்த்தையை உதிர்த்த பிறகும் அவள் அவரை பணிவோடு வேண்டுகிறாள்? கோபத்தோடு போயிருக்க வேண்டாமா? இவ்வளவு மோசமாக பேசுகிற ஒருவரிடம் தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் என்ன?

இது ஒன்றும் அக்கால மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வார்த்தை அல்ல ஒவ்வொரு யூதனும், புறவின மக்களை நாய்கள் என்றுதான் கூறுவார்கள். அவர்கள் மிக சாதாரணமாக பயன்படுத்துகிற வார்த்தை அது. எனவேதான் அவளுக்கு அது ஆச்சரியத்தை தரவில்லை. அதுசரி அவளுக்கு வேண்டுமானால் அது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு இது வியப்பை தருகிறதல்லவா? யூதர்கள் பேசலாம்.. முழு உலகையும் நேசிக்கும் ஆண்டவர், பட்சபாதமில்லா கடவுள், அவர் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா? உண்மைதான் ஆனால் அவர் அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் அவளின் விசுவாசம் அவளை விரட்டிவிடுவதில்  குறியாக  இருந்த சீடர்களுக்கும், புறவினத்தாரை நாய்கள் என்று நாகூசாமல் சொல்லும் யூதர்களுக்கும் தெரியாமல் போயிருக்கும்.

எனவேதான் அவள் தன் விசுவாசத்தை ஆண்டவரிடம் வெளிப்படுத்திய உடனே, கூடியிருந்த சீடர்களுக்கும், யூதர்களுக்கும்  முன்பாக அம்மா உன் விசுவாசம் பெரிது என்று அவள் விசுவாசத்து ஆண்டவர் சாட்சியாக அறிவித்தார். மாத்திரமல்ல அந்நேரமே அவள் மகளை சுகமாக்கினார். இதுதான் நம் கடவுளின் குணம் அவருக்கு மக்களில் எந்த வேறுபாடும் இல்லை, எல்லாரும் அவர் ஜனம், அவரை விசுவாக்கிற அனைவருக்கும் அவர் நன்மை செய்கிறவர். இதுதான்  என் குணம் என்று கடவுள் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே அறிவித்த பகுதிதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதியாகிய பழைய ஏற்பாட்டு பகுதி. (ஏசாயா.56 :1 , 6 -8 .)

சிறையிருப்பில் இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு கடவுள் உங்களனைவரையும் வரவழைப்பேன் என்று ஆறுதல் கூறுகிறார், அதே நேரத்தில் அவர் கூறுவது, உங்களை மட்டுமல்ல கர்த்தரை அதாவது தன்னை நேசிக்கிற, ஊழியத்தை செய்ய விரும்புகிற அந்நிய புத்திரர் அனைவரையும் வரவழைப்பேன் என்கிறார். காரணம் அவர் யூதர்களுக்கான கடவுளல்ல, முழு உலகின் கடவுள் அதை கடவுள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் யூதர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், தன் சித்தத்தை நிறைவேற்றுகிற கடவுள், கிறிஸ்துவில் தன் சித்தத்தை நிறைவேற்றினதைதான் முன்னதாக சுவிசேஷ வாக்கியத்தில் நாம் கண்டோம், அதுமட்டுமல்ல முழு உலகிற்காய் தன் ஜீவனையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். 

இதைதான் பவுல் ரோமர்.11 :13 -15 , 29 -32  இந்த வசனங்களில் விளக்குகிறார்.

ஆனால் இன்றும் நாம் பிரிவினைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாரையும் நேசிக்கும் உண்மையான கிறிஸ்தவ அன்பு மிகவும் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. ஒரு முறை நான் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொது இருவர் பேசுவதை கேட்க நேரிட்டது, அவர்களில் ஒருவர் சொன்னது கிறிஸ்தவனுங்க கல்யாணத்திற்கே போகக்கூடாதுப்பா அவனுங்க ஆள் பார்த்து சாப்பாடு போடறானுங்க என்றார். இந்த லட்சனத்திலிருக்கிறது நமது அன்பு. அதுமட்டுமா, இன்னும் எவ்வளவு கிறிஸ்தவ அன்பில் விலகியிருக்கிறோம் என்பதற்கு அனேக உதாரணங்கள் இருக்கிறது, அதில் ஒன்று, தற்போதைய சூழலில் சபைகளில் குழுக்கள் பெருகிவிட்டது, அரசியலுக்காக பதவிக்காக, தாங்கள் சம்பாதிப்பதற்காக, விசுவாசிகளின் பணத்தை உறிஞ்சுவதற்காக.

அதைவிட கொடுமை, தனக்கு யார் ஆதரவாய் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அன்பு செலுத்துவது. நடு நிலையாளர்களுக்கோ, எதிர் குழுவில் இருக்கிறவர்களுக்கோ துளியும் அன்பு செலுத்துவதில்லை, விரோதியை போல பாவிக்கிற மனோபாவம் வளர்ந்து செழிக்க துவங்கியிருக்கிறது. ஊழியர்களை தெரிந்தெடுப்பதில்  கூட நன்றாக ஊழியம் செய்கிறாரா என்று பார்ப்பதில்லை, நல்ல ஒழுக்கம் உள்ளவரா என்று பார்ப்பதில்லை நமக்கு ஆதரவாய் இருக்கிறாரா என்று மட்டுமே பார்க்கிற கடின மனம் வளர்ந்திருக்கிறது.  இதனால்தான் ஊழியங்கள் எல்லாம், பணம் பறிக்கும் நிறுவனங்களாய்  மாறிப் போயிருக்கிறது. இதற்கு மேல் என்ன சொல்வது? ஆனால் இதெல்லாம் அவர் சித்தமல்ல, அவர் சித்தம் என்னவோ அதுதான் நிறைவேறும்.

அப்படியானால் என்ன அர்த்தம், இந்த எண்ணங்கள் கொண்டோரின் திட்டங்கள் நிறைவேறாது என்று அர்த்தம். கிறிஸ்து வேண்டும், அவர் ஆசீர்வாதங்கள் வேண்டும், அவர் விருப்பத்தை மட்டும் எங்களால் நிறைவேற்ற முடியாது என்கிறோம். முடியாது என்று நாம் சொன்னால் அவர் விட்டுவிடுவாரா என்ன? நம் எண்ணங்களை தலைக் கீழாக்கி அவர் சித்தத்தை நிறைவேற்றுவார். அதற்குள் நம்மை நாம் சோதித்தறிந்து அவர் சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நல்லது. பரிசுத்தாவியானவர் தாமே நமக்கு துணை புரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews