WORD OF GOD

WORD OF GOD

Friday, September 23, 2011

இயேசுவின் கிருபை!!!!!!!!

 2 சாமுவேல்.9 : 6

சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்".

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இக்காலத்தில், தேர்தலில் ஜெயித்து வருகிற கட்சிகள், செய்கிற முதல் காரியம், எதிர் கட்சியினரை கைது செய்வதுதான். இது எல்லா மாநிலத்திலும் நடக்கிறது. அதற்கான காரணம், அவர்கள் பலத்தை முடக்குவதற்காகவும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இவர்களை கைது செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் கூட இது மேற்கொள்ளப்படுகிறது. இது இப்போது தோன்றிய  பழக்கமல்ல அரசர்கள் காலத்திலிருந்தே இப்பழக்கம் உள்ளது.

அதாவது ஒரு தேசத்திற்கு ஒருவன் அரசனாக விரும்பினால், அத்தேசத்து அரசனை போரில் முறியடிக்க வேண்டும், அப்படி முறியடித்ததும், அரசனாகிவிடலாம், இப்படி புதிதாக பதிவி ஏற்கிற அரசனின் முதல் வேலை என்ன தெரியுமா? பழைய அரசனின் குடும்பத்தினர், உறவுகள் அத்தனை பேரையும் கொல்வதுதான். காரணம், அவர்கள் ஒருவேளை பழி வாங்கக்கூடும் என்ற அச்சமும், எதிரிகளே  இருக்கக் கூடாது என்கிற எண்ணமும் தான்.

நம்முடைய தியானப்பகுதி தாவீது அரசனான புதிதில் நடந்ததுதான்.   தாவீது அரசனாவதற்கு முன் நடந்த யுத்தத்தில், சவுல், அவன் குமாரன்  யோனத்தான், அவன் உறவுகளில், கிட்டத்தட்ட அனைவரும் இறந்தனர். தாவீதோ அதோடு நில்லாமல் சவுலின் குடும்பத்தில் யாராவது மீந்திருக்கிரார்களா? என்று கேட்கிறார். அப்போது சவுலின் வீட்டு வேலைக்காரன் சீபா என்பவன் சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு இரண்டு கால்களும் செயல்படாத ஒரு மகன் இருக்கிறான் என்றான். அவன் பெயர் மேவிபோசேத். உடனே தாவீது அவனை அழைத்து வர கட்டளை பிறப்பித்தான்.

மேவிபோசெத் தாவீதை காண வந்தபோது நடந்த சம்பவத்தைத்தான் நம்முடைய தியான பகுதியில் காண்கிறோம்.அவன் வந்து தாவீதின் கால்களில் முகம் குப்புற விழுகிறான். காரணம், சவுலும், தன் தகப்பனாகிய யோனத்தானும் மரித்துப்போனார்கள் என்ற செய்தி கேட்ட போதே பாதி மரித்துப்போயிருப்பான், இப்போது தன்னையும் தாவீது அழைத்து வந்திருப்பது அவனுக்குள் எவ்வளவு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்? நிச்சயம் தனக்கு எதோ ஒரு பெரிய தண்டனை காத்திருக்கிறது என்பதை அவன் அறியாதவனல்ல.

ஆனால் தாவீதின் செயல்பாடுகளோ முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது, அவனை பெயர் சொல்லி அழைத்து, நீ பயப்படாதே, உன் தகப்பன் சொத்துக்கள் அனைத்தையும் உனக்கு தருவேன் என்று கூறுகிறார் ( 2 சாமுவேல் 9:7  )

இதைக்கேட்டு அதிர்ந்துப்போன மேவிபோசேத், செத்த நாயை போலிருக்கிற என்னை நோக்கி பார்க்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்று உணர்ச்சிப் பூர்வமாக தாவீதிற்கு  நன்றி கூறுகிறான். (2  சாமுவேல் 9:8)

அனபானவர்களே எவ்வளவு பெரிய ஆச்சரியம், தன் எதிரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவனை தனக்கு இணையாக உயர்த்தும் மனம் யாருக்கு வரும்? அதை இமியளவும் மேவிபோசேத் எதிர்பார்க்க  வாய்ப்பே இல்லை எனவேதான் தன்னை செத்த நாயோடு ஒப்பிடுகிறார்.  ஆனால்  தாவிதிடம் இது மிகவும் சாத்தியமே.  காரணம் சவுலும் அவன் குமாரன் யோனத்தானும் மரித்த போது அதற்காக பெரிதும் வருந்தியவன்,  அவர்களை  கொல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினையாதவன். இதற்கு பெயர்தான் கிருபை.

இதே தாவீதின் வம்சத்தில்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தோன்றினார். ஆனால் தாவீதை விட கோடானு கோடி  மடங்கு கிருபையுள்ளவராய் திகழ்ந்தார், ஆம் பிரியமானவர்களே, நாம் அனைவரும், பாவத்தினிமித்தம் கடவுளிடம் சேர முடியாமல், அவருடைய நன்மைகளை பெற முடியாமல் அவருக்கு எதிரிகளாய் இருந்தோம், அவர் நம்மை பார்க்க கூட நமக்கு தகுதியில்லை.( சங்கீதம் .8:4) . ஆனால் இயேசு கிறிஸ்துவோ, நம் அனைவருக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும், தன் ஜீவனை சிலுவையில் ஒப்புக்கொடுத்து, நம்மை கடவுளின் பக்கத்தில் அல்ல, கடவுளின் பிள்ளைகளாய் சேர்த்துக்கொண்டார். இப்போது நாம் அனைவரும் கடவுளின் சொந்த பிள்ளைகள், அவரது முழு ஆசீர்வாதத்திற்கும் நாம்தான் வாரிசுகள்.

எனவே தைரியமாய், உரிமையாய் நம் தேவைகளை அவரிடம் சொல்லி பெற்றுக் கொள்வோம், தயங்குவதற்கு நாம் அவருக்கு அந்நியர்கள் அல்ல, சொந்த பிள்ளைகள். கிருபையுள்ள அவரது நன்மைகளில் களி கூறுவோம்.  ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews