WORD OF GOD

WORD OF GOD

Saturday, January 29, 2011

காலை மன்னா 29.01.2011



அன்பான உடன் விசுவாசிகளே காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியானம் மீகா.7 :15

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

மீகா தீர்க்கர் இஸ்ரவேல் மக்களின்  பாவங்களை கடுமையாக விமர்சித்தவர், கொடிய தண்டனை வரும் என்று எச்சரித்தவர்.  அதே நேரத்தில் அவர்களுக்கு வரப்போகிற மீட்பையும் முன்னறிவித்தார்,

இந்த வசனம் இஸ்ரவேலர்களுக்கு வரப்போகிற மீட்பை முன்னறிவிக்கிற வசனம். அதாவது பாவம் செய்த இஸ்ரவேலர் மனந்திரும்பும்போது கடவுள் அவர்களை எப்படி நடத்துவார் என்பதை குறிப்பிடுகிறார்.

எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாளிலே நடந்தது போலவே உன்னை அதிசயங்களை காணப்பன்னுவேன் என்கிறார். இஸ்ரவேலரை எகிப்திலிருந்து எப்படி  அதிசயமாய்   புறப்பட பண்ணினார்?  அடிமைத்தன நுகம் தாங்க முடியாமல் தினந்தோறும்  கண்ணீரோடும் கவலையோடும் என்ன செய்வது? எப்படி தப்பிப்பது? என்று தெரியாமல் பயந்து பயந்து வாழ்ந்து வந்த காலம் அது,  மோசே போய் அவர்களுக்கு உதவி செய்ய எகிப்தியனை கொன்ற பிறகும் கூட அவனை நம்ப முடியாமல் அவனை ஏற்றுக்கொள்ளாமல் அவனையே அரசனிடம் சிக்க வைத்தனர், காரணம் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்ற தெளிவான முடிவெடுக்கக்கூட முடியாத கனத்த இதயத்தோடு வாழ்ந்த  காலம் அது.

அடிமைகளாகவே வாழ்ந்து வாழ்ந்து போர் செய்யவோ எதிர்த்து நிற்கவோ தெரியாமல், அவ்வளவுதான் கதி என்று ஆண்குழ்ந்தைகளை எல்லாம் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக நின்ற காலம் அது. கடவுளை கூப்பிடுவதை தவிர வேறு எந்த யுக்தியும் தெரியாத ஜனமாய் அவரை கத்தி, கத்தி கூப்பிட்டு கொண்டிருந்த காலம் அது.

இந்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார் கடவுள், எகிப்து என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எதிர்க்க இந்த சின்ன கூட்டத்தை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேவைக் கொண்டு வழி நடத்த ஆரம்பித்தார், இவர்களை அனுப்பினால் தான் தேசம் பிழைக்கும் என்று எகிப்திய அரசன் வேறு வழியே இல்லாமல் அவனே அனுப்புகிற நிலையை கடவுள் உண்டாக்கினார்.

அது மட்டுமா? வழியில் சந்தித்த அத்தனை போரிலும் போர் பயிற்சி என்றால் என்னேவேன்றுக் கூட தெரியாத இந்த ஜனத்தை, உன் பாளையத்தின் நடுவில் நான் இருக்கிறேன் என்று துணிவு சொல்லி அவர்களுக்காக இவர் யுத்தம் பண்ணி ஜெயிக்க வைத்தார்.

உன்னை அதே அதிசயங்களை காண செய்வேன் என்று கடவுள் மீகா தீர்க்கரின் வழியாக நமக்கு தைரியம் ஊட்டுகிறார், நம்மிடத்தில் என்ன இல்லை என்பதை நினைத்து வருத்தப்படுவதை விட, இஸ்ரவேலை அதிசயமாய் நடக்க பண்ணின இறைவனின் துணை எனக்கு இருக்கிறது, இனி எல்லாம் ஜெயமே  என்ற மேலான நம்பிக்கையில் இந்த நாளை நாம் துவங்க இறைவன் அருள் புரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு .கில்பர்ட் ஆசீர்வாதம்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews