WORD OF GOD

WORD OF GOD

Friday, February 4, 2011

காலை மன்னா 04.02.2011


அன்பான உடன் விசுவாசிகளே அதிகாலை ஸ்தோத்திரங்கள். இந்த காலையில் நாம் தியானிக்கவிருக்கிற வசனம் சங்கீதம்.25 :15

"என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்".

தாவீதின் சங்கீதங்கள் எப்போதுமே, படிக்கும்போது நம் வாழ்வோடு நெருங்கி பேசக்கூடியவை. காரணம் தாவீதின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்தவை. விசுவாசம் என்பது படிப்பதாலோ, காண்பதாலோ வந்துவிடுவதல்ல சொந்த அனுபவத்திலிருந்து வரக்கூடியவை, தாவீதின் சங்கீதங்கள் அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து எழுந்ததால், விசுவாசத்தை தூண்டும் மிகச்சிறந்த பாடல்களாக இன்றும் நம்மோடு பேசிவருகிறது.

25 ம் சங்கீதத்தின் 15 ம் வசனத்தில் தாவீது தன்னுடைய விசுவாச அனுபவம் ஒன்றை நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார். அவருடைய கண்கள் எப்போதும் கர்த்தரையே நோக்கிகொண்டிருக்குமாம்.

கண்கள் மனிதனுக்கு மிக முக்கியமான ஒரு அவயவம். கண்கள் இல்லாதவர்களின் வாழ்கையை காணும்போதெல்லாம் இதை நாம் உணர்ந்துக்கொள்ள முடியும், கண்கள் தான் நம்மை சுற்றி  இருக்கிறவைகளை  கண்டுணர உதவுகிறது. நன்மையையும்  தீமையையும் கண்டுக்கொண்டு அதற்க்கேற்றபடி வாழ உதவுகிறது. அதேநேரத்தில்  இந்தக் கண்கள் இருந்தும் கூட பல நேரங்களில் நாம் ஆபத்துகளிலும், விபத்துகளிலும் சிக்கிக் கொள்கிறோம். நம்மோடு கூடவே இருந்து நமக்கு எதிராக செயல்பட்டு நம்மை தங்கள் வலையில் சிக்க  வைக்கிறவர்களை  நம்மால் அடையாளம் காணமுடியாமல் போகிறது.

தாவீதின் வாழ்வில் தனக்கு  எதிராக இருக்கிற வலைகளை கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருந்தது. காரணம் கோலியாத்தை வென்ற பிறகு, பெலிஸ்தியர்களின் எதிரியாகவும், மக்கள் மத்தியில் புகழ் பெற்றதால் சொந்த அரசன் சவுலின் எதிரியாகவும் மாறிப்போனான். எனவே எப்பக்கமிருந்து ஆபத்து வரும் என்று தெரியாமல் ஓடி ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தான், கண்களிருந்தும் யார் நல்லவன் யார் கேட்டவன் என்பதை தெளிவாக கண்டுணர முடியாத நிலை, எது ஆபத்து, எது வலை, எது நன்மை என்று தெரியாத நிலை, தாவீதுக்கு பெரிய சவாலாக இருந்தது.

நம்முடைய தியானப்பகுதியில் தெளிவாக சொல்லுகிறார் என் கண்கள் எப்போதும் கர்த்தரையே நோக்கிக்கொண்டிருக்கிறது. அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்குவார் என்கிறார், தன்னுடைய அத்துணை ஆபத்துக்களிலும் தன் கண்களை மட்டும் அவர் நம்ப வில்லை, கடவுளை நம்பினார். நம் கண்களுக்கு தெரிந்து வருகிற் ஆபத்துக்களிளிருந்தே பல நேரங்களில் நாம் தப்பிக்க முடிகிறதில்லை அப்படியிருக்கும்போது கண்களுக்கு தெரியாத ஆபத்துக்கள் வந்தால் நாம் என்னதான் செய்வது? ஒரே வழி நம் கண்களை கடவுளுக்கு நேராக திருப்புவதுதான் என்று தாவீது தன் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.

அன்பானவர்களே இந்தக் காலையில் நம் கண்களை நமக்கு வாழ்வு தந்துகொண்டிருக்கிற நம் இறைவனுக்கு நேராக திருப்புவோம். இந்த நம்பிக்கை தானே தாவீதை அரசனாக்கியது எனவே, நம்மையும் பாதுகாக்கும். நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வருகிற அத்துணை ஆபத்துகளிலிருந்தும் அவர் நம்மை நீங்கலாக்கி இரட்சிப்பார். நம் பாவங்களை கூட பாராமல் தன் குமாரனை கொண்டு மீட்டவர், நம்மை பாதுகாக்க நம் வாழ்வோடு பயனிக்கிறவர், அவரை நம் கண்களால் நோக்கிக்கொண்டிருந்தால் நம்மை விழுங்கப் பார்க்கிற வலைகள் அறுப்பட்டு நாம் ஜெயமாய் ஜீவிப்போம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட்  ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews