WORD OF GOD

WORD OF GOD

Tuesday, February 22, 2011

சிறுகதை

திருவிருந்து

மாலை நான்கு மணியிலிருந்தே அந்த வீடு அமர்க்களப்பட்டது. டிசம்பர் 31  அல்லவா சர்ச்சுக்கு போகணும் ஆண்டு முழுதும் கண்ணின் மணியை போல பாதுகாத்து வழி நடத்திய தேவனுக்கு நன்றி பாராட்டனும் - வாழ்வளிக்கும் வசனங்கள் கேட்கணும், பரமனை பாடனும், அதனால் தான் அந்த வீட்டில் இப்படி பரபரப்பு காணப்பட்டது.

அப்பா அருள்நாதன் ஒய்வு பெற்ற பட்டாளத்துக்காரர். இப்போது நைட் வாட்ச்மேன். இரவெல்லாம் கண்விழிக்க வேண்டும் அதற்கு துணையாக தினமும் ஒரு நெப்போலியனோ, ஒல்டுமங்கோ வேணும், வாங்கும் சம்பளத்தில் 75  விழுக்காட்டை அது குடித்துக்கொண்டிருந்தது, மீதியோ பட்டாளத்தில் பற்றிக்கொண்ட புகை பழக்கத்தால் கரைந்தது.

அம்மா பாக்கியவதி புடவை மோகம் தலைக்கேரியவள் நாளுக்கொரு புடவை வேண்டும். தலையில் பூவும்தான். பூவுக்கு நூற்றைம்பது ரூபாவும், புடவைக்கு ஐநூறு ரூபாவும் மாதம் ஒன்றுக்கு தவறாமல் பட்ஜெட்டில் இடம் பிடித்தது. பட்டாளத்தார் பென்ஷன் அதற்கு துணை புரிந்தது. மூத்த மகள் தேவநகை பெயருக்கேற்ற குணவதி. நகைப்பைத்தியம் தலையிலிருந்து, கால்வரை தங்கம் வெள்ளி தாராளமாய் வேண்டும். பட்டாளத்தார் பணியிலிருந்த நாளில் வாங்கி வைத்த 5  ஏக்கர் நிலமும், இரண்டு மூன்று வீட்டு மனையும் அதற்காகவே வேறொருவர் கை மாறியது. ஒரு பெட்டி நிறைய நெற்றிச்சுட்டி, கம்மல், மூக்குத்தி, வளையல் என உருமாரி  அவள் பீரோவில் தஞ்சம் புகுந்தது.

இளையவன் அபிஷேக். பன்னிரண்டாம் வகுப்பு பையன். படிப்பில் படுசுட்டி. பயன் என்ன? யாரோ சூப்பர் ஸ்டாராம்  அவருக்கு இவன் பரம ரசிகனாம். அவர் நடித்த படங்களில் ஒன்றை சொன்னால் போதும் ஏழு முறை என்று பட்டென்று பதில் சொல்வான். வேறொரு படம் சொன்னால் பத்து முறை என்று தம்பட்டம் அடிப்பான், அவன் எத்தனை முறை அந்த படம் பார்த்தான் என்பதன் கணக்குதான் அது.

மணி நான்கிலிருந்து ஏழுக்கு தாவி இருந்தது, நால்வரும் வெளியே வந்தனர் வீடு பூட்டப்பட்டது, வழிபாடு துவங்கியிருக்குமோ?, ஆலயத்தை அடைந்தனர். தொழுகை பக்தி மனத்துடன் தொடங்கி தொடர்ந்தது, முதல் பாட்டு "வேறு ஜென்மம் வேணும் மனம் மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்" பிசிறில்லாமல் பாடல் குழு பாட சபை மக்களும் உடன் பாடினர். தொடர்ந்து இரண்டாவது பாடல் ஞான பாடல் "நான் பாவி தான் ஆனாலு நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர், வாவென்று என்னை அழைத்தீர்  என் மீட்பரே வந்தேன்... வந்தேன்....." அடுத்து வந்தது காணிக்கை பாடல் " எத்தனை திரள் என் பாவம் என் தேவனே எளியன் மேல் இரங்கையனே " அருள் நாதனின் குடும்பம் சுருதி பிசகாமல் பாடுகிறது. உதட்டிலிருந்தா? உள்ளத்திலிருந்தா?
ஆனால் கண்கள் எட்டும் கண்ணீர் சிந்தின.

பாவ அறிக்கை வேண்டுதல் "இரக்கமுள்ள கடவுளே ஏழை பாவியாகிய நான் மனதினாலும் வாக்கினாலும்  நடக்கையினாலும் வெகுவிதமான பாவ குற்றங்களை பண்ணினேனென்று  மனஸ்தாபப்பட்டு அறிக்கையிடுகிறேன்....

நான் திரும்ப பாவம் செய்ய சோதிக்கப்படும்போது அதற்கு சம்மதியாமல் அதை அருவருக்கவும் உமக்கு பிரியமான பிள்ளையாக நடக்கவும் பரிசுத்த ஆவியை கொண்டு புத்தியையும் பலத்தையும் தாரும்... என்னை ஆயத்தம் பண்ணியருளும் சாமி ஆமென்."

இப்போது அந்தக் கலங்கிய கண்களில் கண்ணீர் வரத்து துவங்கினது. திருவிருந்து துவங்கியது அந்த எட்டு கால்கள் முழங்காலில் முடங்கியது. இதை வாங்கிப் புசி இது என்னுடைய சரீரம் .... இதிலே பானம் பண்ணு, இது என்னுடைய திரு இரத்தம் இப்போது அந்த எட்டு கண்களும் அருவியாகி கன்னத்தை வருடி, தரையில் சங்கமித்தது.

வழிபாடு முடிந்தது. சபையார் இல்லம் நோக்கி விரைந்தனர். ஆயர் அருள்திரு. ஆர்த்தர் குளிரை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆசி வழங்குவதில் முனைப்புக்காட்டினார். அருள்நாதன் வீடு வந்தது உள்ளே நுழைந்தார்.

ஐயரே பூவுக்கும் புடவைக்கும்  ஆசைப்பட்டு பேயாய் அலைந்து, தேவனை மறந்தேன் இனி அந்த ஆசையை அடியோடு மறப்பேன். புத்தாண்டு முதல் புது மனுஷியாய் வாழ்வேன். - பாக்கியவதி.

ஐயரே நாளை புத்தாண்டு முதல் குடியை கெடுக்கும், குடியையும், என் உடலுக்கு பகையாய் இருக்கும் புகையையும் விட்டுவிடுகிறேன் - அருள்நாதன்.

பாஸ்டர் நகை நகை என்று நாயாய் அலைந்தேன். அதனால் எங்கள் சொத்தை எல்லாம் இழந்தோம். நாளை முதல் வேதமே எனக்கு நகை, ஜெபமே ஆபரணம், இயேசுவே எனக்கு அணிகலன் - வேதநகை.

எங்க அனைவரையும் திருவிருந்து வழியாய் திருத்திட்டீங்க பாஸ்டர். இனி நான் இயேசுகிறிஸ்துவின் பிள்ளை . உள்ளத்தை பாழ்படுத்தும் திரைப்படங்களை பார்க்கமாட்டேன். நாளை முதல் இயேசுவை அறியாத மக்கள் அறியவும். தெரியாத மக்கள் தெரியவும் நான் உழைக்கப்போகிறேன் - அபிஷேக்.

ஒரு இறை குடும்பத்தை அழிவிலிருந்து காத்து புத்தாண்டை புதிய மனிதர்களாய் வரவேற்க காத்திருக்கும் படி செய்த திருவிருந்தின் வல்லமையை எண்ணி தேவனுக்கு நன்றி படைத்த நான்கு உயிர்களுடன், அருள்திரு. ஆர்த்தரும் ஐந்தாவதாக இணைந்துக் கொண்டார்.

                                                             முற்றும்

சிறுகதை செல்வர்.
திரு. ஆ. ஏசையன்

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews