WORD OF GOD

WORD OF GOD

Monday, February 28, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே நேற்றைய தினம் என்னால் பதிவிட முடியாத நிலை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், எனவே இன்றைய காலை மன்னாவில் நேற்றைய அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கான பிரசங்கத்தை பதிவிடுகிறேன்.

ஏசாயா.49:13-18
கொரிந்தியர்.4:1-5
மத்தேயு.6:24-34

பிரசங்க வாக்கியம் ஏசாயா.49:13-௧௮

13. வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

14. சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

17. உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

18. உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்

இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது  கடவுளை நோக்கி கூக்குரலிட்டார்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலையாவதற்காக, கடவுள் அவர்கள் இடுகிற கூக்குரலை கேட்டு, அவர்களை விடுதலையாக்க மோசேவை தெரிந்தெடுத்து அனுப்பி, பெரிய அடையாளங்களை செய்து இஸ்ரவேலரை தன் புய பலத்தினால் மீட்டார்.

அவர்களை விடுதலையாக்கி பாலும் தேனும் வழிந்தோடுகிற கானானில் குடியமர்த்தினார். கானானில் குடியேறிய இஸ்ரவேலர் செல்வ செழிப்போடு வாழ ஆரம்பித்தனர், அதுவரை அடிமைகளாகவும் பின்னர் வனாந்திரத்தில் நாடோடிகளாகவும் இருந்தவர்கள், பூரண வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்தனர், சந்தோஷத்தையும் செல்வத்தையும் அனுபவித்தனர், இதனால் கடவுளின் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்தனர்.

ஏசாயா  1 :4   ன் படி கடவுளை விட்டுவிட்டனர் அவரை அசட்டை செய்து அவருக்கு கோபம் உண்டாக்கினர்.

இதனால் பாபிலோனியர்களால் சிறை பிடிக்கப்பட்டு 70  ஆண்டு அடிமைத்தன வாழ்வை அனுபவித்தனர்.

தங்களுக்கு துன்பம் வந்த பிறகு, கடவுள் எங்களை கைவிட்டுவிட்டார் கடவுள் எங்களை மறந்து விட்டார் என்று கடவுளை குற்றம்சாட்டினர், அதை கடவுள் அறிந்து ஏசாயா.49 :14  வது வசனத்தில் வெளிப்படுத்துகிறார், மாத்திரமல்ல நான் உங்களை மறப்பேனா ஒரு தாய் கூட தன பிள்ளையை மறந்துவிடலாம் ஆனால் நான் உன்னை மறப்பதில்லை என்கிறார்.

தான் தவறு செய்துவிட்டு கடவுளை குற்றம் சாட்டும் மக்களுக்கு நான் உங்களை மறப்பதில்லை என்று கடவுள் விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார், கடவுள் இப்படி யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் தான் அழைத்த ஜனத்தின் மீதுக்கொண்ட அன்பினால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

16  வது வசனத்தில் நான் உன்னை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்றும் உன் மதில்கள் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்கிறார்.

அதாவது தான் மிகவும் நேசிக்கிறவர்களின் பெயர்களை உடலில் பச்சைக்குத்திக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் இருந்துவருகிற ஒரு பழக்கம் அதைப்போல உங்களை என் உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன் என்று தன் அன்பை வெளிப்படுத்துகிறார்.

மதில்கள் என்றால்  நம் வீட்டின் அல்லது நகரத்தின் சுற்று சுவரை குறிக்கும் அவைகளில் எப்போதும் காவல்காரன் தான் நின்று காவல் காப்பான் கடவுள் உன் மதில்கள் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்பதன் மூலம் நானே உங்களை பாதுகாக்கிறேன் என்கிறார்.

மேலும் உன்னை பாழாக்கினவர்கள் உன்னை விட்டு ஓடிப்போவார்கள் என்று விடுதலையின் செய்தியை கொடுக்கிறார். அதுமட்டுமல்ல அவர்கள் திரும்பி வந்து உனக்கு அலங்காரமாய்  இருப்பார்கள் என்கிறார்.

மத்தேயு.6 :24 -34  வரையுள்ள வசனங்களில் இயேசு கிறிஸ்து முதலாவது கடவுளுடைய  ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் இவைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என்று உலக பொருளுக்கான உத்தரவாதத்தை தருகிறார்.

1கொரிந்தியர் 4 :5  ல் பவுல் அவருடைய பிள்ளைகளாய் விசுவாசத்தில் நிலை நின்றால், அவனவனுக்கு உரிய புகழை கடவுள் தருவார் என்று, புகழுக்கான உத்தரவாதத்தை தருகிறார்.

இதன் மூலம் கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது விளங்குகிறது. எனவே கடவுள் நம்மை துன்புறுத்தி பார்க்கிரவறல்ல தீமைகளால் சோதிப்பவருமல்ல, மாறாக நம்மை நேசிப்பவர், நம்மை காப்பவர், நமக்கு தேவையான அத்தனை நன்மைகளையும் தருபவர்.

இந்த விசுவாசத்தோடு இந்நாளின் பணிகளை துவங்குவோம், பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணையிருப்பார். ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews