WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 19, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் அன்பான காலை ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம் யோவான்.10 :20 -21 .

20. அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.

21. வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்

ஆதரவு, எதிர்ப்பு இவை இரண்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிற அனுபவங்கள். பொதுவாக நம்முடைய பணியில், குடும்ப வாழ்வில் , சமூக வாழ்வில், நம்மை எல்லா நேரங்களிலும், ஆதரிக்கிறவர்களையும் நாம் காண முடியும், அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிரவர்களையும் காண முடியும்.

நாம் ஆதரவாக பேசுகிறவர்களை மிகவும் நேசிப்போம், அவர்களோடு அன்பு பாராட்டுவோம், அவர்கள் கொடுக்கிற ஆதரவு நமக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும்.

அதே நேரத்தில் நம்மை எதிர்க்கிறவர்களை கண்டால் நமக்கு கடுமையான எரிச்சல் வரும், அவர்களோடு பேசவோ, உறவாடவோ விரும்பமாட்டோம், அவர்களுடைய எதிர்ப்பு பேச்சுக்கள் நம்மை செயல்படவிடாதபடி நம் மனதை காயப்படுத்தும்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தில் இந்த இரண்டையும் மிக அதிகமாகவே சந்தித்திருக்கிறார். அதற்கு மிக சரியான உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

யோவான் 9 ம் அதிகாரத்தில் ஒரு பிறவி குருடனை குணமாக்கின பின்பு, 10 ம் அதிகாரத்தில் நல்ல மேய்ப்பனை பற்றி பிரசங்கிக்கிறார். இவருடைய வார்த்தைகளை கேட்ட ஜனங்கள் இரண்டு விதமாக பேசினார்கள், சிலர் இவன் பிசாசு பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள், சிலர் பிசாசு பிடித்தவனின் வார்த்தைகள் பார்க்க முடியாதவனின் கண்களை திறக்ககூடுமா, அவர் பிசாசு  பிடித்தவரல்ல என்று கூறினர்.

இயேசு கிறிஸ்து தன் ஊழிய வாழ்வில் இப்படி அனேக ஆதரவையும் சந்தித்திருக்கிறார், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார், இதைவிட மோசமான எதிர்ப்பையும், இதைவிட மிகப்பெரிய ஆதரவையும் அவர் சந்தித்திருக்கிறார்.

யோவான் 6 :15  ல் அவரை ராஜாவாக்க மக்கள் முடிவு செய்தார்கள்.
யோவான் 11:48-50 ல் அவரை கொலைசெய்ய  திட்டம் தீட்டுகிறார்கள்.

இப்படி அவர் தன் ஊழிய வாழ்வில் பெரிய ஆதரவுகளையும், பெரிய எதிர்ப்புகளையும் சந்தித்தவர். ஆனால் இவை இரண்டையுமே அவர் தலையில் ஏற்றிக்கொண்டதில்லை, அதாவது இந்த இரண்டில் எதுவும்   அவர் மனதை பாதிக்கவில்லை . இப்படி பட்ட விமர்சனங்களை சந்திக்கும்போதெல்லாம் அந்த இடத்தை விட்டு அவர் கடந்து பொய் தன் வேலையை அமைதியாக செய்துக் கொண்டிருந்தார்.

நம்முடைய வாழ்விலும் ஆண்டவரின் இந்த வாழ்க்கை முறையை பின் பற்றினால் கர்வமோ, கவலையோ இல்லாமல்  நாமும் கடுமையாக உழைக்க முடியுமே, எனவே இந்த காலை வேளையில் ஆண்டவரின் இந்த ரகசியத்தை அறிந்துக்கொண்டு நம் வாழ்விலும் இதை பின்பற்றி வாழ்வோம்.

விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் கிறிஸ்துவை நம்பி உழைப்போம், வெல்வோம் அவரே நமக்கு நித்திய துணையாளர் ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews